வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் (5 அக்டோபர் 1823 – 30 சனவரி 1874) இந்தியாவைச் சேர்ந்த ஓர் இந்து சமய ஆன்மீகவாதி ஆவார். “எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே” என்பதைக் குறிக்கும் வண்ணம், இவர் தோற்றுவித்த மார்க்கத்திற்கு “சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்க சங்கம்” என்று பெயரிட்டார். சைவ சமயத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்த வள்ளலாரை, பழமைவாதிகள் கடுமையாக எதிர்த்தனர். இவர் சாதிய பாகுபாடுகளை கடுமையாகச் சாடினார்.
“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்” என்று பாடிய வள்ளலார், 1867-ல் கடலூர் மாவட்டம் வடலூரில் “சத்ய ஞான சபை” என்ற சபையை நிறுவினார். இங்கு வரும் அனைவருக்கும் 3 வேளைகளும் உணவு இலவசமாக வழங்கப்பட்டது. இன்றளவும் செயல்பட்டு வரும் இந்த தர்ம சபை வள்ளலார் பெயரால் லட்சக்கணக்கான மக்களுக்குப் பசியாற்றி வருகிறது. தர்ம சபைக்கான உணவுப் பொருட்களை தமிழ்நாடு அரசு குறைந்த விலைக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
எதிலும் பொது நோக்கம் வேண்டும், பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும், மத வெறி கூடாது ஆகியவை இவரின் முக்கிய கொள்கைகள் ஆகும். இவ்வாறு பல கொள்கைகளை கொண்டிருந்த வள்ளலார், முதன்மைக் கொள்கையாக ‘கொல்லாமை’ கொள்கை ஆகிய உயிர்களிடத்தில் அருள் செய்யும் கொள்கையைப் பரப்பியவர். “எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க” என்று கூறியவர். இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் தொகுப்பே ‘திருவருட்பா‘ என்று அழைக்கப்படுகிறது. இவரது சேவையை கருத்தில் கொண்டு, இந்திய அரசு 2007ஆம் வருடம் இவருக்கு அஞ்சல் தலை வெளியிட்டு கௌரவித்தது.
இவர் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் (5 அக்டோபர் 1823) இல் கருணீகர் குலத்தில் பிறந்தவர். பெற்றோர் இராமையாபிள்ளை, சின்னம்மையார். இவரோடு சபாபதி, பரசுராமன், உண்ணாமுலை, சுந்தராம்பாள் ஆகிய நால்வரும் உடன்பிறந்தவர்கள். இராமலிங்கர் பிறந்த ஆறாம் மாதத்திலேயே தந்தையை இழந்தார். தாயார் குழந்தைகளோடு பொன்னேரி சின்னகாவனம் பகுதிக்கு சென்று வாழ்ந்தார். பின்னர் சென்னையில் ஏழு கிணறு பகுதி 39, வீராசாமி பிள்ளை தெருவில் உள்ள வீட்டில் குடியேறினார். அண்ணன் சபாபதி சமயச் சொற்பொழிவு செய்து வந்தார்.
இராமலிங்க அடிகள் மே 23, 1867 அன்று வடலூர் மக்களிடம் இருந்து 80 காணி நிலம் பெற்று தருமசாலையை தொடங்கினார். இந்த தருமசாலைக்கு வந்தவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கப்பட்டது. தற்போது தருமசாலைக்கான உணவுப்பொருட்களை தமிழக அரசு குறைந்த விலைக்கு வழங்கி வருகிறது என்பது பாராட்டுக்கு உரியதாகும்.மக்களின் மிகுந்த துயரங்களுள் ஒன்றான பசியைப் போக்கிட வள்ளலார் வழி வகுத்தார். இன்றளவும் வள்ளலார் பெயரால் லட்சக்கணக்கான மக்களுக்குப் பசியாற்றப்படுகிறது. வடலூரில் தலைமை இடம் இருந்தாலும், உலகமெங்கும் அவரது கொள்கையைப் பின்பற்றுகின்றவர்கள் பசியாற்றுகிறார்கள்.
எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணம் இவர் தோற்றுவித்த மார்கத்திற்கு சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம் என்று பெயரிட்டார். உண்மையான ஞானி என்பதால் சாதிய பாகுபாடுகளை சாடினார். இதை தவறாக புரிந்துகொண்ட உயர் சாதி மக்களின் எதிர்ப்பை சம்பாதித்தார், இருப்பினும் தொடர்ந்து தன் வழியே பயணப்பட்டார்.
தன் வாழ்வின் பெரும்பகுதியைச் சென்னையில் கழித்த இவர், நவீன சமுதாயங்களின் பிரச்சினைகளை உணர்ந்திருந்தார். அனைத்துச் சமய நல்லிணக்கத்திற்காக சன்மார்க்க சங்கத்தை நிறுவினார். அறிவுநெறி விளங்க சிதம்பரம் அருகே உள்ள வடலூரில் சத்திய ஞானசபையை அமைத்தார். இத்தகு உயரிய நோக்கங்களுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துப் பணியாற்றினார். 1867ஆம் ஆண்டில் மக்களின் பசித்துயர் போக்க சத்திய தரும சாலையையும் நிறுவினார். அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய சிந்தனைகள் மிகவும் முற்போக்குடையதாகக் கருதப்பட்டாலும், தற்பொழுது உலகெங்கும் அவருடைய சிந்தனைகளுக்கு ஒத்த கொள்கைகள் புரிந்துகொள்ளப்பட்டு பின்பற்றப்படுகின்றன.


