கிள்ளிக்கும் வ.உ.சி.வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விவசாய இடுபொருட்களை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் பெய்த கனமழையால் ஏராளமான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே உள்ள கிள்ளிகுளம் வ.உ.சி.வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இலவசமாக 10 கிலோ நெல் விதைகள், 250 கிராமம் காய்கறி விதைகள், 25 கிலோ உயிர் உரங்கள், 25 கிலோ அங்கக உரங்கள் என தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 2000 விவசாயிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக சபாநாயகர் அப்பாவு விவசாயிகளுக்கு இடுபொருட்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகையா, ஊர்வசி அமிர்தராஜ், மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, வட்டாட்சியர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது விவசாயிகள் மத்தியில் அப்பாவு பேசுகையில், நான் ஊரில் விவசாயத் தொழில் தான் செய்து வருகிறேன். எனக்கு அரசியல் மற்றும் விவசாயத்தை தவிர வேறு எந்த தொழிலும் தெரியாது. 15 ஆண்டுகள் ஆசிரியர் பணி செய்தேன். ஆசிரியர் பணி செய்த என்னை சட்டப்பேரவைக்கு தலைவராக ஆக்கியவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள். கடந்த இரண்டரை ஆண்டு காலத்தில் 2 லட்சம் பேருக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. கடந்த 2011 முதல் 2021 வரை 10 ஆண்டுகள் 2 லட்சத்து 20 ஆயிரம் மின் இணைப்புகள் தான் வழங்கப்பட்டது. ஆனால் இரண்டரை ஆண்டுகாலத்தில் 2 லட்சம் மின் இணைப்புகள் வழங்கிய முதல்வர் அவர்களை நான் பாராட்டுகிறேன். ஒன்றிய அரசு என்ன சலுகைகள் செய்துள்ளது என்று பார்த்தால் கடந்த 10 ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 25 லட்சம் கோடி ரூபாயை தள்ளுபடி செய்துள்ளது. ஆனால் விவசாயிகளுக்கு கடனை தள்ளுபடி செய்யவில்லை. மழை வெள்ள காலத்தில் மக்களுடன் அரசு இருந்த காரணத்தினால் அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு சல்லி காசு கூட தரவில்லை. ஆனால் 4000 கோடி ரூபாயை முதல்கட்டமாக அள்ளத்தந்து மக்கள் பிரச்சனையை தற்போது தீர்த்துள்ளது இந்த அரசு.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மழை வெள்ள நேரத்தில் விவசாய நிலங்களுக்குள் வந்த மண்ணை அள்ள வருவாய்த்துறை சார்பில் அளவீடுகள் செய்து அதை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் பல குடும்பங்கள் வறுமையில் உள்ளதாக ஆளுநர் ரவி கூறியதற்கு கருத்து தெரிவித்த அவர், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 20 கிலோ அரிசி, தகுதியான நபர்கள் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. பெண்கள் குழுக்கள் மூலம் வழங்கப்பட்ட 2500 கோடி ரூபாய் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாய கடன்கள் தள்ளுபடி, விவசாயிகளுக்கு கட்டணமில்லாமல் மின் இணைப்பு வழங்கப்பட்டு 25 லட்சம் பேர் பயனடைந்து வருகிறார்கள். 2 வருடத்தில் இரண்டு லட்சம் மின் இணைப்பு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. பட்டினி இல்லாத மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது. பெண்கள் படித்தவர்கள், படித்துக் கொண்டிருப்பவர்கள் என தமிழ்நாட்டில் 70 சதவீதம் பேர் உள்ளனர். தமிழ்நாட்டில் கட்டணமில்லாமல் அரசு பேருந்தில் நாளன்றுக்கு 50 லட்சம் பேர் பயணிக்கிறார்கள். மக்களைத்தேடி மருத்துவம் திட்டம் மூலம் 47 லட்சம் பேர் பயன் அடைகிறார்கள். 1 கோடியே 15 லட்சம் பேருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பசியும் கிடையாது, பட்டினியும் கிடையாது. என்று அவர் தெரிவித்தார்.


