தூத்துக்குடியில் சிவன் கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தெப்ப உற்சவம் இன்று இரவு நடைபெற்றது.
தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீசங்கர ராமேஸ்வரர் திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, தெப்பக்குளம் முன்புள்ள சுந்தரபாண்டிய விநாயகர் கோயிலில் சுவாமி- அம்பாள் எழுந்தருளினர். அங்கு விக்னேஷ்வர பூஜை, ருத்ரஹோமம், அபிஷேகம், தீர்த்தவாரி, கும்பாபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றன.
மாலையில், அருள்மிகு ஸ்ரீ சங்கரராமேஸ்வரர்-அன்னை ஸ்ரீ பாகம்பிரியாள் சுந்தரபாண்டிய விநாயகருடன் தெப்பக்குளத்தில் தஞ்சாவூர் கலைஞர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் 11 முறை சுற்றி வந்தனர். இதில் மேளம், வேதபாராயணம், திருமுறை பாராயணம், சங்கரபாராயணம், திரிசங்கு ஆக இசைமொழி முழங்க 11 தடவைகள் சுற்றி வந்தனர்.
அதன்பின், அருள்மிகு ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர்-அன்னை ஸ்ரீ பாகம்பிரியாள் தெப்பக்குளத்திலிருந்து புறப்பட்டு 4 ரத வீதியைச் சுற்றி சிவன் கோயிலை அடைந்தனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன், திமுக மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், கோவில் நிர்வாக அதிகாரி தமிழ்ச்செல்வி, அறங்காவலர் குழு தலைவர்கள் கந்தசாமி செந்தில்குமார், செல்வ சித்ரா, அறிவழகன், அறங்காவலர்கள் மகாராஜன், பாலா,ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் புஷ்பாஞ்சலி
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் உள்ள புற்றுமாரியம்மனுக்கு புஷ்பாஞ்சலி பூஜை நடந்தது.
இதை முன்னிட்டு காலை 5.30 மணிக்கு கணபதி ஹோமம், சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை, சிறப்பு அலங்கார தீபாராதனை, நடந்தது. பின்னர் புற்று மாரியம்மனுக்கு புஷ்பாஞ்சலி பூஜை நடந்தது. நடந்த சிறப்பு அலங்கார தீபாராதனை பூஜைகள் அமைச்சர் கீதாஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


