கல்லூரியின் பழைய பெயர் ‘இந்துக் கல்லூரி’.
ஒருமுறை அன்றைய ஆங்கில அரசாங்கத்திடம் இருந்து ‘கல்லூரி வைப்புக் கட்டணமாக’ ரூபாய் ஒரு லட்சம் (1,00,000) உடனடியாக செலுத்த வேண்டும். தவறினால், கல்லூரி அங்கீகாரம் ரத்துச் செய்யப்படும்’ என்ற அறிவிப்பு வந்தது.
நிர்வாகிகளுக்குத் திகைப்பு. உடனே கலந்தாலோசித்து, பொது மக்களிடம் நன்கொடை வசூல் செய்வது என்று முடிவெடுத்தனர்.
முதலில், தளவாய் முதலியார் ரூ 100/-, சந்திர விலாஸ் ஹோட்டல் முதலாளி ரூ 100/-, ஜெகன் சிங் என்னும் அல்வா கடை அதிபர் ரூ 100/-, லயன் கம்பெனி சண்முகம் பிள்ளை ரூ 100/- என்று நன்கொடை தந்து வசூலை ஆரம்பித்து வைத்தனர். கல்லூரி முதல்வரும், பேராசிரியர்களும் தங்கள் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள முன் வந்தனர்.
அன்றைய சிறுமியாக இருந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் இன்னிசை நிகழ்ச்சி (ராயல் தியேட்டரில்) மூலமும் நிதி திரட்டினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை அல்வா கடை முதலாளி ஏற்றுக் கொண்டார்.
சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் வீடு, வீடாகச் சென்று உண்டியல் வசூலும் செய்தனர்.
எல்லா முயற்சிக்குப் பின்னரும் கையில் சேர்ந்தது ரூ 29,000/- மட்டுமே.
‘மீதிக்கு என்ன செய்வது?’ என்று திகைத்துக் கொண்டிருந்தபோதே, அரசாங்கத்திடம் இருந்து ‘இன்னும் ஒரு மாதத்திற்குள் வைப்புப் பணம் செலுத்தவில்லை என்றால் கல்லூரி அங்கீகாரம் நிரந்தரமாக ரத்துச் செய்யப்படும்’ என்ற அபாய அறிவிப்பு வந்து சேர்ந்தது.
நிர்வாகிகள் கைபிசைந்து நின்று கொண்டிருந்த நேரம், மதுரையைச் சேர்ந்த திரவியம் பிள்ளை, தாயுமானவர் சகோதரர்கள் கல்விப் பணிக்காக ஒரு லட்சம் நன்கொடைத் தரத் தயாராக இருப்பதாகக் கேள்விப்பட்டு கல்லூரி நிர்வாகிகள் மதுரைக்கே நேரில் சென்று, சகோதரர்களைச் சந்தித்தார்கள். அவர்கள் நன்கொடை தந்ததோடு, ‘ஒருவேளை நன்கொடைப் பணத்தை கல்விப்பணிக்காகச் செலவிட முடியாமல் தன் குடும்பத்தினர் வசம் பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டால், அந்தப் பணத்தை மீண்டும் கல்விப் பணிக்குதான் தன் குடும்பத்தினர் செலவழிக்க வேண்டுமென்று’ உயில் எழுதி, அதைப் பதிவும் செய்து விட்டார்!
இப்படியாகத்தான், இந்துக் கல்லூரி, 1/1936 முதல் ‘மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியாக பெயர் மாற்றம் பெற்றது.
திரு.முத்தாலங்குறிச்சி காமராசு அவர்கள் எழுதிய ‘தென்பாண்டிச் சீமை: சில சமுதாயக் குறிப்புகள் ‘ நூலை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்ட பதிவு. தகவல் சுரங்கம் இந்த நூல். படித்துப் பாருங்கள்.


