தைப்பூசம் என்பது தென் இந்தியர்கள் வாழும் நாடுகளில் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் ஒரு விழா ஆகும். தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர். தைப்பூசம் ஆண்டுதோறும் தை மாதம் பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும். நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். இவ்விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. இது கேரளாவில் தைப்பூயம்என்று அழைக்கப்படுகிறது.
தைப்பூசம் விழாவானது பழங்காலந் தொட்டே தமிழகத்தின் முருகன், சிவன் கோயில்களில் கொண்டாடப்பட்டு வந்துள்ளது. சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு தைப்பூசம் கொண்டாடப்பட்டது குறித்து தேவாரப் பதிகங்களில் குறிப்புகளுள்ளன. குறிப்பாக பொருந்திய தைப்பூசமாடி உலகம் பொலிவெய்த என்று திருஞானசம்பந்தர் பாடியுள்ளார். பிற்கால சோழர் ஆட்சியில் தைபூசத்தன்று கோயில்களில் கூத்துகள் நடத்தபட்டன. குறிப்பாக திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயிலில் தைப்பூசதை ஒட்டி நான்கு நாட்கள் கூத்துகள் நடத்ததாக கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு முருகனை வழிபடுவர். முருகன் பிறந்த தினமாக அறியப்படுவதால் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் . மேலும் காவடி எடுத்தல் மற்றும் பால் குடம் தூக்குதல் போன்ற நிகழ்வுக்கு பிறகு கோவிலில் அன்னதானம் வழங்ககப்படும் . மக்கள் கோவில்களில் முருகனை வேண்டி வழிபடுவது வழக்கம்.
கடற்கரை தலமான திருச்செந்தூரிலும் தைப்பூசம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதம் முதலே பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து பாதையாத்திரையாக செந்தூர் நோக்கி படையெடுக்கின்றனர். பெரும்பாலோனோர் மாட்டு வண்டி அல்லது டெம்போ வண்டி பிடித்து பாடல் கட்டி கூட்டம் கூட்டமாக நடந்து வருகிறனர். வண்டியை மின் விளக்குகளால் அலங்கரித்து முருகப்பெருமானை மலர்களால் அலங்கரித்து வண்டியிலேற்றி வண்டி முன் செல்ல விரதமிருந்தவர்கள் பின்னால் நடந்து வருகின்றனர்.ஆடலும் பாடலுமாய் திருச்செந்தூர் நோக்கி விரைகின்றனர்.


