படைப்பாளர் முத்தாலங்குறிச்சி காமராசு அவர்களைப் பற்றி:
முத்தாலங்குறிச்சி காமராசு அவர்கள் ஒரு வரலாற்று எழுத்தாளர்.
பேருந்து நடத்துநராக வாழ்க்கையைத் தொடர்ந்து மேடை நாடக நடிகராய், நெல்லை வானொலி நாடக எழுத்தாளராய், நூல் ஆசிரியராக, திரைத்துறை நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர்.
கடந்த 23 வருடங்களாகத் தாமிரபரணியில் வைகாசி விசாகம் அன்று பிறந்த நாளை கொண்டாடி, தாமிரபரணியைக் காக்க உறுதி மொழியை தன் நண்பர்களுடன் எடுத்து வந்தார். தற்போது நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தாமிரபரணியைச் சுத்தம் செய்யும் பணியைக் கடந்த 5 வருடங்களாக நடத்தி வருகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் இவர் எழுதிய 58 நூல்களிலும் தாமிரபரணி புகழ் எழுதப்பட்டிருக்கும்.
ஒரு நதியைப்பற்றி அதிக நூல் எழுதியவர். தாமிரபரணியைத் தலைப்பாகக் கொண்டு தலைத்தாமிரபரணி, தாமிரபரணி கரையினிலே, தவழ்ந்து வரும் தாமிரபரணி, நவீன தாமிரபரணி மகாத்மியம், தரணி போற்றும் பரணி உள்பட 50க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
இவரின் ‘நவீன தாமிரபரணி மகாத்மியம்’ என்னும் நூல் உலக நதிகள் வரலாற்றில் முதல் முதலாக பார்கோடு வசதியுடன் உருவாக்கப்பட்ட நூலாகும்.
‘களரி என்பது தமிழர் கலை’ என்னும் நூல் இதில் இவர் மூன்று பாகங்களாகப் பிரித்து எழுதி முடித்துள்ளார். இதில் முதல் பாகம் களரி அடிமுறை 1 என்ற பெயரில் புத்தகமாக வெளியாகி உள்ளது.
20 ஜமீன்தார்கள் வரலாற்றைத் தொகுத்து தென்னாட்டு ஜமீன்தார்கள் என்ற 1000 பக்கம் நூலை எழுதியது. மேற்குத்தொடர்ச்சி மலையில் பொதிகை, அத்ரி, தோரணமலை, குற்றால மலைகள் குறித்து சித்தர்களின் சொர்க்கபுரி பொதிகை மலை, அத்ரிமலை யாத்திரை, தோரண மலை யாத்திரை என்று பல நூல்கள் எழுதியுள்ளார்.
தமிழ் வளர்க்கப் பாடுபட்ட சித்தர்கள் அறிஞர்கள் சமாதுகளைத் தேடி அதைப் தினசரி நாளிதழ்களில் தொடராய் எழுதி அருள்தரும் அதிசய சித்தர்கள் என்ற பெயரில் நூல் எழுதியுள்ளார்.
தற்போதும் எழுத்து பணியோடு, தாமிரபரணியைச் சுத்தப்படுத்தி மரங்கள் நடும் பணி, மறைந்து போன சுதந்திரப் போராட்ட தியாகிகள் வரலாற்றைத் திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
75 வருடம் சிறப்பு மிக்க சைவசித்தாந்த நூல் பதிப்பு கழகம், விகடன் பிரசுரம், தினத்தந்தி பதிப்பகம், தி இந்து தமிழ் திசை பதிப்பகம், சூரியன் பதிப்பகம், காவ்யா பதிப்பகம்,தினமலரின் தாமரை பிரதர்ஸ் மீடியா, பொன்சொர்ணா போன்ற பிரபலமான பதிப்பகங்களில் எழுதிவருகிறார்.
ஆதிச்சநல்லூர், கொற்கை போன்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரங்களை ஆய்வு செய்து நூல் எழுதியுள்ளார். ஆதிச்சநல்லூரில் 2004 ல் நடந்த ஆய்வறிக்கையை சமர்ப்பிக்காத மத்திய அரசைக் கண்டித்து மதுரை உயர்நீதிமன்றத்து மூலம் வழக்கு தொடர்ந்து வெற்றி கண்டவர்.
மேற்குத் தொடர்ச்சி மலையில் பொதிகை மலை, தோரண மலை, அத்ரி மலை, குற்றால மலை குறித்து களப்பணி செய்து நூல் எழுதியுள்ளார். தொடர்ந்து of மகேந்திரகிரி மலை குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். பல ஊடகங்களில் 3,500க்கு மேற்பட்ட படைப்புகளைத் தந்துள்ளார்.
தாமிரபரணியை மூன்றாகப் பிரிந்து தலைத்தாமிரபரணி , இடைத்தாமிரபரணி , கடைத்தாமிரபரணி என்று மூன்று பாகங்களாக எழுதியுள்ளார்.
தென்பாண்டிச்சீமையிலே பாகம் -1, பாகம்-2 என இரண்டு நூல்களை தலா 1000ம் பக்கம் கொண்டது. இதில் முதல் நூல் காஞ்சிபுரம் உலக தமிழ் அரங்கத்தில் முதல் பரிசு பெற்றது. இந்தநூலின் இரண்டு பாகங்களுமே ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தினை பறைசாற்றும் விதமாக உருவாகி இருப்பது சிறப்புக்குரியது.
இவரைப் பாளையங்கோட்டை சாராள்சாரா டக்கர் கல்லூரி மாணவி அந்தோணியம்மாள் ஆய்வு செய்து எம்.பில் பட்டம் பெற்றுள்ளார். மேலும் சிலர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
சொந்தமாகத் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் பொன்சொர்ணா கலைக்கூடம் என்ற புகைப்பட நிறுவனத்தை நடத்தி வருவதோடு, பொன்சொர்ணா பதிப்பகத்தினை நடத்தி, தனது நூல்களை வெளியிட்டு வருகிறார். அதோடு மட்டுமல்லாமல் தனது மகன் அபிஷ் விக்னேஷ் மூலமாக மீடியா கிருக்கன் என்ற யூ டியூப் சேனலும், தனது சிஷ்யர் சுடலைமணி செல்வன் மூலமாக ஸ்ரீவைகுண்டம் டூடே நீயூஸ் என்ற யூ டியூப் சேனலும் நடத்தி வருகிறார்.
நெல்லையிலிருந்து வெளிவரும் மாத இதழ் சான்றோர் மலரில் ஆசிரியர் குழுவில் இவர் பணியாற்றி வருகிறார். பிரபல பதிப்பகமான காவ்யா காலாண்டு இதழில் ஆசிரியர் குழுவில் இவர் பணியாற்றி வருகிறார். மும்பையில் இருந்து வெளிவரும் வார இதழ் வணக்கம் மும்பை இதழில் சிறப்புச் செய்தியாளராக பணியாற்றி வருகிறார். தூத்துக்குடி மாவட்ட கலை இலக்கிய மற்றும் இசை சங்க உறுப்பினர்.
கலை நன் மணி முத்தாலங்குறிச்சி காமராசு அவர்களுக்கு 2020 ஆண்டு தமிழக அரசு தமிழ்ச்செம்மல் விருது வழங்கி கௌரவித்து உள்ளது.


