தாமிரபரணி தாத்தா செல்லக்கண்ணுவை பார்த்தவுடன் நிறைய பேச ஆரம்பித்தார்.
அவர் பேசட்டும் என காளியும் செல்வியும் அமைதியாக இருந்தார்கள்.
செல்லக்கண்ணு ஒரு பேனாவை எடுத்து அருகில் இருந்த லட்டர் பேடை எடுத்து, அதில் குறிப்புகளை எழுத ஆரம்பித்தார்.
தாமிரபரணி தாத்தா பேச ஆரம்பித்தார். “அறிஞர் ‘பேட்’ எழுதிய நூலில் 19-&ஆம் நூற்றாண்டில் ஆத்தூரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காரணத்தினால் கூடுதலாக, கூடுதல் கரை போடப்பட்டதாக எழுதியிருந்தார். தற்போது கூட ஆத்தூரில் இரட்டைக் கரை இருப்பதைக் காணலாம். இதுபோலவே தாமிரபரணி இருகரையையும் நாம் செப்பனிட்டுப் புதுப்பிக்கலாமே. ஆனால் ஏன் ஆட்சியாளர்கள் அதை செய்ய மாட்டேன்கிறார்கள்”.
தாமிரபரணி தாத்தாவின் பேச்சில் நியாயம் இருந்தது.
காளி சொன்னான். “அவர்கள் மணல் அள்ளுவதில் தான் குறியாக இருக்கிறார்கள். இதுவரை அவர்கள் மணல் அள்ளியதில் கிடைத்த பணத்தினை கொண்டு கரையை செம்மைபடுத்த, குளத்தினை தூர் வார பயன்படுத்தியிருந்தால் எவ்வளவோ நன்மையாக இருந்து இருக்கும்”.
அனைவரும் சோகத்துடன் தலையாட்டினார்கள். தாத்தா அடுத்தபடியாக பெரிய தகவல் ஒன்றை சொன்னார்.
“தாமிரபரணி நதியில் எட்டு நீர்த் தேக்கங்கள், அவற்றில் 11 கால்வாய்கள் இருக்கின்றன. மலையில் இருந்து ஏழு துணை நதிகளின் தண்ணீர் அதன் பிறகு சமதளத்தில் பல நதிகள் சேருகிறது. தாமிரபரணி நதியின் வடி நிலத்தில் சராசரி ஆண்டு மழையளவு 1082 மில்லி மீட்டர். நதியின் மொத்த வடிநிலப் பரப்பு 5,969 சதுர கி.மீட்டர்.
இதில் 5,317 கி.மீட்டர் அதாவது 89% திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கிறது. 652 சதுர கி.மீட்டர் அதாவது 11% தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கிறது. திருநெல்வேலி மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பான 6,780 சதுர கி.மீட்டரில் தாமிரபரணியின் வடிநிலப்பரப்பு 78%; தூத்துக்குடி மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பான 4,649 சதுர கி.மீட்டரில் தாமிரபரணியின் வடிநிலப்பரப்பு 14% தாமிரபரணியின் வடிநிலப்பகுதியில் இருக்கும் கிணறுகளின் எண்ணிக்கை 71,064 குளங்களின் எண்ணிக்கை 1,300. குளங்களின் நீர் கொள்ளளவு 196 மில்லியன் கன மீட்டர்”.
சொல்லிமுடித்து விட்டு அமைதியானார்.
“இத்தனை வசதி இருந்தும் தண்ணீரைச் சேர்த்துவைக்க முடிகிறதா?. மூன்று போகம் விளைய வைக்க முடிகிறதா?. இல்லையே. அது தான் ஏன்?” செல்லக்கண்ணு வருத்தப்பட்டார்.
தாத்தா சொல்லும் ஒவ்வொரு குறிப்பும் செல்வியை தலையை சுற்றுவதாக இருந்தது. ஆனாலும் இந்த மனிதன் மட்டும் இல்லையென்றால் தாமிரபரணியை பற்றி யார் குறிப்பு சொல்வார் என்பது போல இருந்தது.
“நதியின் வடிநிலப்பகுதியின் மொத்த நிலத்தடி நீர் இருப்பு 744,19 மில்லியன் கன மீட்டர். நீர்ப் பிடிப்பு பகுதியில் மழை மூலம் கிடைக்கும் தண்ணீர் அளவு 1,375.36 மில்லியன் கன மீட்டர்; ஆக மொத்தம் நீர் ஆதாரம் 2119.5 மில்லியன் கன மீட்டர். இதில் விவசாயத்திற்கு 2,645.00 மில்லியன் கன மீட்டர், வீட்டு உபயோகத்துக்கு 48.72 மில்லியன் கனமீட்டர், தொழிற்சாலை உபயோகத்துக்கு 32.98 மில்லியன் கன மீட்டர், கால்நடை, மீன் வளர்ப்பு மற்றும் இதர உபயோகங்களுக்கு 21.32 மில்லியன் கன மீட்டர் என மொத்தம் 2,748.02 மில்லியன் கன மீட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. தற்போது மொத்த நீர்ப் பற்றாக்குறை 628.47 மில்லியன் கன மீட்டர். இந்தப் பற்றாக்குறையை நதியை பாதுகாப்பதன் மூலமும் அணைகளின் பராமரிப்பு மற்றும் சிறந்த நீர் மேலாண்மைத் திட்டங்கள் மூலமும் மட்டும் தான் சரி செய்ய இயலும்”.
தாமிரபரணி தாத்தா சொல்ல சொல்ல செல்லகண்ணு குறிப்பு எடுத்துக்கொண்டார். “இவர் சொல்வது உண்மைத்தான். இந்த தகவல் அரசியல் வாதிகளுக்கெல்லாம் தெரியுமா? “ செல்வி மனதுக்குள் நினைத்துக்கொண்டாள்.
“இதற்கான திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க முடியுமா?” காளி செல்லக்கண்ணு அய்யாவை நோக்கி கேட்டான்.
“முடியும், நிச்சயம் முடியும். அதற்காகத்தானே நாம் இப்போது கூடியிருக்கிறோம்”. செல்லக்கண்ணு அய்யா நம்பிக்கை கொடுத்தார்.
“தாமிரபரணியில் வெள்ளக்காலங்களில் வீணாகச் செல்லும் தண்ணீரை நமது முன்னோர்கள் நன்றாக உருவாக்கிய குளங்களில் தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்கலாமே. சடையனேரி கால்வாய், நான்குநேரி பகுதிக்கு வெள்ளாங்குளியில் இருந்து உருவாக்கப்பட்ட வெள்ளக் கால்வாய் போன்றவற்றைப் பராமரித்து, தாமிரபரணித் தண்ணீரைச் சேகரித்தால் நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தில் நிலத்தடி நீர் வற்றவே வற்றாது . இதற்கு ஏற்பாடு செய்யலாமே”.
தாத்தா சொன்னவுடன் காளி கேட்டான்.
“ஆனால் இதற்கான ஏற்பாடுகளில் நமது விவசாயிகள் இறங்குகிறார்களா? பொதுமக்கள் கேட்கிறார்களா? அரசியல் வாதிகள் தான் கேட்கிறார்களா?”
“எங்கே யார் கேட்கப்போகிறார்கள். நம்ம நதியால எவ்வளவு நன்மை கிடைக்கிறது என்று கூட நமக்கு தெரியவில்லையே”. பெரும்மூச்சி விட்டு விட்டு தொடர்ந்தார் தாத்தா.
“தினமும் ஒரு மனிதனுக்கு 40 லிட்டர் தண்ணீர் விதம் பல கோடி லிட்டர் தண்ணீரைக் குடிதண்ணீருக்குத் தருகிறது தாமிரபரணி. இதனால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டம் மட்டுமல்லாமல் விருதுநகர் மாவட்டமும் நலம் பெறுகிறது. இந்த அருமையான பூமியில் மின்சாரம் தாயரிக்கப்படுகிறது. தொழிற்சாலைகளுக்கு இங்கிருந்து தண்ணீர் கொடுப்பதால் பல லட்சம் தொழிலாளர்கள் வாழ்கிறார்கள். விவசாயத்திற்குத் தண்ணீர் கொடுக்கப் படுகிறது. தற்போதும் தினமும் மணிக்கு பலகோடி லிட்டர் தண்ணீரைக் கொடுத்து விட்டு வற்றாத ஜீவ நதியாய், கம்பீரமாய்க் காட்சியளிக்கிறது தாமிரபரணி”.
கம்பீரம் என்றவுடனே தாத்தா மிகவும் கம்பீரமாக உட்கார்ந்து கொண்டு தனது சோகமான முகத்தில் இருக்கும் தாடியை தடவிக்கொண்டு பேசினார்.
ஆனால் உண்மையிலேயே தாமிரபரணி கம்பீரமாய் இருக்கிறாளா..? உடல் முழுவதும் ரணத்துடன், பொங்கி வரும் கண்ணீரை அடக்கி வைத்துக்கொண்டு கம்பீரமாய் இருப்பது போல நடிக்கிறாள்.
அவளை ரணப்படுத்துகிறோம்.
அவள் அசரவில்லை.
அவள் மடுவை அறுத்துக் கொண்டிருக்கிறோம்.
வடியும் ரத்தத்தோடு அவள் பால் தருகிறாள்.
அவளைக் குற்றுயிரும், குறையுருமாய் விஷத்தினை, வீட்டுக் கழிவு சாக்கடை நீரைக் கலப்பதால், கொடுத்துக் கொல்லத் துடிக்கிறோம்.
கண்ணீர் மல்க பால்தரும்; அந்த தாய்க்குத்- தன் பிள்ளைகளால் தன் உடல் எல்லாம் சாக்கடையை கலந்து ரத்தத்தில் விஷம் ஏறிவிட்டது. அந்த விஷத்தை நாம்தான் கொடுக்கிறோம் எனத் தாமிரபரணிக்குத் தெரிகிறது. அவள் நினைத்தால் வற்றி விடலாம். நம்மைத் தாகத்தில் வதைத்து விடலாம். நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தினைப் பாலை வனம் ஆக்கி விடலாம்.
ஆனால்; அவள் வற்றமாட்டாள். மக்கள் விடும் விஷத்தினைத் தன்னோடு வைத்துக்கொண்டு பிள்ளைகளுக்கு நல்ல பால் தான் இப்போது தருகிறாள்.
பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு என்பது போல, தாமிரபரணித் தாய் நம்மை பாதுகாக்கப் பாடுபடுகிறாள்.
ஆனால் முடியாத பட்சத்தில் அவள் உடலில் சாக்கடை எனும் ரூபத்தில் ஏறும் விஷம் முற்றி விடுமே. அப்படி முற்றி விட்டால் வீட்டுக்கு வீடு பைப் மூலம் தரும் தண்ணீரெல்லாம் விஷமாகி விடுமே.
அப்போது அவள் நினைத்தாலும் நம்மைக் காப்பாற்ற முடியாது.
நமக்கு அவளின் பெருமை பிடிபடவில்லை.
அவளைக் காப்பாற்ற நமது மனம் செல்லவில்லை.
நாம் செத்தாலும் பரவாயில்லை. தாயை அழித்து விட வேண்டும் என்றுதான் நினைக்கிறோமே; இது எந்தவிதத்தில் நியாயம்?
ஒன்று மட்டும் நிச்சயம்.
முதல் கட்டமாகத் தாமிரபரணியில் பற்றாக்குறையைக் கணக்கிட்ட அரசு விவசாயத்தினை நிறுத்திவிட்டது. மூன்று போகம் விளைய வேண்டிய இடம் ஒரு போகம் ஆகிவிட்டது.
இதே நிலை நீடித்தால், தொழிற்சாலை மின்சாரம், குடிதண்ணீர் எனப் படிப்படியாகத் தட்டுப்பாடு ஏற்படும். தொழில் சாலையை கூட குறைப்பார்கள். தொழில் இன்றி மக்கள் வாடும் நிலை ஏற்படும். அடுத்துத் குடிதண்ணீர், தட்டுப்பாடு ஏற்படும். அப்போது நெல்லை, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டம் பாலைவனமாக மாறிவிடும்.
அப்போது நாம் என்ன செய்ய முடியும். தாமிரபரணித் தாயைக் காப்பாற்றினால் மட்டுமே இந்த நாடு உயரும், நாமும் உயருவோம்.
பொதிகை மலைக் காட்டை காப்பாற்றச் சுடலை மாடன் வீதிக்கு வீதி வந்தது போல, தாமிரபரணியைக் காப்பாற்றப் பேச்சியும், இசக்கியம்மனும் வீதி வீதியாக வந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
தாமிரபரணித் தாய்க்கு நாம் நன்றி தெரிவிக்கவேண்டும் என்று அவள் நம்மைப் பார்த்துக் கெஞ்சவில்லை; ஆனால் கேடு செய்யாமல் இருக்கலாம் அல்லவா? மணலைத் திருடு கிறோம். ஊற்றை அழிக்கிறோம். சாக்கடையை எல்லாம் நதியில் திருப்பி விடுகிறோம். தொழிற்சாலைக் கழிவு நீரையும் இந்தத் தாமிரபரணியில்தான் விடுகிறோம்.
இதனால் ஒரு காலத்தில் மூலிகைத் தண்ணீராக இருந்த இந்தத் தண்ணீர் குஷ்ட நோயை உருவாக்கும் நிலையில் மாறிக் கொண்டிருக்கிறது. இங்கிருந்த அயிரை, கெளுத்தி, தேளி, கெண்டை போன்ற அபூர்வ மீன் வகைகள் எல்லாம் அழிந்து விட்டன.
ஒரு காலத்தில் தாமிரபரணித் தண்ணீர் கண்ணாடி போலத் தெளிவாக ஓடியது. ஆற்றில் எவ்வளவு ஆழம் இருக்கிறது என்று கூடக் கண்டு கொள்ளலாம். குண்டூசி விழுந்தால் கூட எடுத்து விடலாம். ஆனால் இன்று சாக்கடைத் தண்ணீர் நிறைந்து விஷமாக அல்லவா? ஓடிக்கொண்டிருக்கிறாள் தாமிரபரணி .
நினைத்து பாருங்கள்.! தாமிரபரணித் தாய் தற்போதும் கூட வற்றவில்லை. பெற்ற பிள்ளைகள் வாடிவிடக்கூடாது என்று பொறுமையாக இருக்கிறாள். அவள் பொருநை என்ற பொருமை தாய் அல்லவா..?
ஆனால் நீங்கள் விடுவதாகத் தெரியவில்லை.
உங்கள் எல்லோரும் தாமிரபரணி தாய் ஒன்றை சொல்லுகிறாள்.
கடைசி மரமும் வெட்டிஉண்டு
கடைசி நதியும் விஷம் ஏறிக்
கடைசி மீனும் பிடிபட
அப்போது தான் உறைக்கும் -இனி
பணத்தைச் சாப்பிட முடியாது என்று.
மீண்டும் மீண்டும் இந்த வாசகத்தினைச் சொல்லிக் கொள்ளுங்கள். நல்லதே நடக்கட்டும்.
நம் தாய் தாமிரபரணியின் ஓட்டம் என்றென்றும் நிலைக்கட்டும்.
தாமிரபரணியில் ஒரு காலத்தில் எங்குபார்த்தாலும் ஆற்று மணல் அலங்கரித்துக்கொண்டே இருக்கும்.
இதனால் தண்ணீர் மிக சுவையாகவும் சுத்தமாகவும் இருக்கும். ஆனால் ஒரு காலகட்டத்தல் தாமிரபரணியில் உள்ள ஆற்று மணலை ஏலத்துக்கு கொடுத்து தாமிர பரணியின் அழகை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்க ஆரம்பித்தனர். பாபநாசத்தில் இருந்து ஆத்தூர் வரை 1991ல் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஏலமிட்டு, முழுவது மாகவே தாமிரபரணியை கொத்தி குதறி ஆற்று மணலை அள்ளி விட்டனர். தொடர்ந்து அள்ளினால் என்னவாகும் என்பது இந்த பகுதியில் உள்ள மனிதர்களுக்கு தெரியவேண்டும். தெரியுமா? தெரிய வைப்பார்களா? மக்களுக்கு புரிய வைக்க என்ன செய்யவேண்டும். இதையெல்லாம் செய்ய வேண்டிய அரசு அமைதியாக இருக்கிறது. அப்படியென்றால் இதற் கெல்லாம் விழிப்புணர்வு யார் ஏற்படுத்தவேண்டும்.
நிச்சயம் நீதிமன்றம்தான் இதற்கான ஏற்பாடை செய்ய வேண்டும்.
அதற்கான நடவடிக்கையில் உடனே இறங்கினார் செல்லக்கண்ணு.
ஆனால் அதற்குள் தாமிரபரணியில் மணல் அள்ள தயராகி விட்டார்கள். ஊருக்கு ஊரு கைக்கூலிகளை பிடித்து ஒரே நாளில் பல நூறு லாரியை ஆற்றுக்குள் இறக்கி விட்டனர். மணல் லாரி அளவுக்கு அதிகமாக மணலை ஏற்றிக்கொண்டு கிளம்பியது.
சாலையில் யாரும் நிற்க முடியவில்லை. அந்த அளவுக்கு வேகமாக வாகனங்கள் செல்ல ஆரம்பித்தது.
யாருமே அதை கண்டு கொள்ளவில்லை. நமக்கென்ன என இருந்து கொண்டிருக்கிறார்கள். இதை நன்கு பயன்படுத்தினார்கள், மணல் மாபியாக்கள்.
ஆற்றுக்குள் பைப் லைன் போட்டு மறுகரைக்கு வாகனங்களை கொண்டு சென்றனர். அதுமட்டுமா? மணல் அள்ள ராட்சத இயந்திரங்கள் இறக்கப்பட்டன. இரவு வேளையில் கூட பிரகாசமாக விளக்கு போட்டு நதியை கூறு போட்டார்கள்.
அரசு திட்டங்களை வேகமாக செய்ய வேண்டிய இடத்தில் கூட மந்தமாக செய்து விட்டு, அரசு சொத்தை ஆட்டையை போடும் வேலையை மட்டும் இரவு பகலாக செய்தார்கள். என்ன செய்ய என்றே தெரியாமல் தவித்தனர், காளியும், செல்வியும் , தாமிரபரணி தாத்தாவும்.
ஆனால் செல்லக்கண்ணு தூங்க வில்லை.
முறைப்படி மனுவை போட்டு மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கை விசாரணைக்கு கொண்டு வந்தார்.
குறிப்பிட்ட நேரத்தில் தானே நேராக போய் வாதாட ஆரம்பித்தார்.
நதியின் பெருமையையும், நதி படும் பாட்டையும், இதுவரை நதிக்கு ஏதுவுமே செய்யாமல் மணலை மட்டும் அள்ளிச்செல்லும் பொதுப்பணித்துறை பற்றியும் அசராமல் வாதாடினார்.
ஆற்று மணலை அள்ளுவதால் ஏற்படும் பிரச்சனையை பிட்டு பிட்டு வைத்தார்.
செல்லக்கண்ணு வாதாடுவதை மற்ற வக்கீல்கள் வச்ச கண்ணு மாறாமல் பார்த்தனர்.
நீதியரசரும் அவர் பேச்சை நன்றாக கவனித்தனர்.
இரண்டு நாள் கழித்து நீதியரசர் தீர்ப்பை சொன்னார்.
தொடர்ந்து 5 வருடத்துக்கு தாமிரபரணியில் எங்கேயேயும் மணல் அள்ளக்கூடாது என தடை உத்தரவு வழங்கினார்.
தாமிரபரணி ஆர்வலர்கள் அனைவரும் துள்ளி உற்சாகத்தில் குதித்தனர்.
மீண்டும் நதியை காப்பாற்றி விட்டோம் என பெருமை பெற்றனர்.
தீர்ப்பு வந்தவுடன். அனைத்து லாரியும் தாமிரபரணி ஆற்றை விட்டு கிளம்பியது. இந்த கொள்ளையில் முக்கிய பங்கு வகித்தவர்கள் வெளியேறினர். ஆனால் ஆங்காங்கே புதைத்து வைத்த பைப் லைன் அனைத்தும் அப்படியே போட்டு விட்டு சென்றார்கள். உடைத்த கரையை சீர் செய்ய வில்லை. வாகனங்கள் சென்ற வழியை அடைக்க வில்லை. ஆற்றுக்குள் தோண்டிய குழியை மூட வில்லை. அவையெல்லாம் மரண குழியாக மாறியது. இதை யாருமே கண்டு கொள்ளவில்லை.
ஒரு இடத்தில் குழி தோண்டி விட்டு மறு இடத்தில் மேடாகவும் போட்டு விட்டு சென்றார்கள். எனவே அந்த இடமெல்லாம் உயிர் பலி வாங்கத்துடித்துக்கொண்டிருந்தது.
பைப் போட்ட இடங்கள் மூடியும் மூடாமல் கிடந்தது. அதில் சில இடங்களில் கம்பிகள் வெளியே தெரிந்து கொண்டிருந்தது. அந்த வழியாக ஆற்றுக்குள் நடந்தால் கூட அவர்களின் காலை அந்த கம்பிகள் கிழத்தெறிந்து விடும். அந்த அளவுக்கு கொடுறமாக இருந்தது.
மொத்தத்தில் தாமிரபரணி ஆறே உயிர் பலி வாங்கு ஆறாக மாறி விட்டது.
******
காலங்கள் கடந்தது.
இதுபோன்ற வழக்கு போட்டு பணம் பண்ண முடியாமல் செய்து விட்டார்களே என எரிச்சலில் பலர் சென்று விட்டார்கள்.
இதற்கெல்லாம் காரணமான செல்லக்கண்ணுவை இவர்கள் எதுவும் செய்ய இயலாது. ஏன் என்றால் அரசியில் பலத்துடன் அவர் இருந்தார். அதோடு மட்டுமல்லாமல் கரை படாத கரத்துக்கு சொந்த காரர். அவர் நியாயத்தினை தவிர வேறு எந்த பிரச்சனைக்கு போக மாட்டார். எனவே அவரை எதுவுமே செய்ய இயலாது. ஆனால் இவருக்கு வலது கையாக இருந்த தாமிரபரணி தாத்தா மீது மணல மாபியாக்களுக்கு கடுமையான கோபம் வந்தது.
மாரியப்பன் தான் முதல் ஆளாக இயங்கி க் இருந்தான்.அவனுக்கு காளி மீதும் செல்வி மீதும் ஏற்கனவே வருத்தம். தொடர்ந்து இந்த மூன்று பேரும் இணைந்து செயல்படுவது வேதனையைதந்தது. இவர்கள் மூவரும் இல்லையென்றால் நாம் இஷ்டம் போல இயங்கலாம். இவர்கள் மூவரையும் படிப்படியாக பிரச்சனையை அவர் மீது செலுத்திக் கொண்டிருந்தான்.
சரியான நேரத்தில் அவர்கள¬ பழி வாங்க வேண்டுமென நினைத்தான். அதில் தாத்தா பலிகிடாவாக மாறுவார் என யாருமே கற்பனை செய்து கூட பார்க்கவில்லை.
இதையெல்லாம் அறியாமல் பாவப்பட்ட ஒரு சுற்றுலா பயணி பேருந்து தாமிபரணி ஆற்றங்கரையில் வந்து நின்றது. சாமியை தரிசிக்க தென்னகத்துக்கு வந்தவர்கள். தாமிரபரணியில் குளிக்க ஆசைப்பட்டார்கள். இதனால் மணல் குவாரி அமைத்த இடத்துக்கு அந்த பேருந்து வந்து நின்றது.
அதில் இருந்து இறங்கிய பயணிகள், நதியை பார்த்த ஆனத்தத்தில் குளிக்க ஆற்றுக்குள் இறங்கினார்கள்.
முதலில் ஆனந்தமாகத்தான் குளித்துக்கொண்டிருந்தார்கள்.
அதில் 6 பேர் அருகில் உள்ள குழி அருகில் சென்றனர். அந்த குழி அருகில் தான் மரண நீர் சூழல் இருந்தது.
மறு நிமிடம்.
அங்கு நீர் சூழல் பெரிதாக சுழன்றது. மறுமிடம் அந்த 6 பேரையும் தனக்குள் இழுத்துசென்றது.
அய்யோ என்று அலறிய அந்த பயணிகள், தொடர்ந்து சத்தம் இட முடியாமல் தாமிரபரணி தண்ணீருக்கு அவர்கள் அனைவரும் அடங்கி விட்டார்கள்.
கரையில் இருந்து பார்த்தவர்கள், அதிர்ந்தே விட்டனர். மூழ்கியவர்களை கரையில் இருந்து பார்த்தவர்கள் அலறினர். அந்த கூச்சல் அருகில் இருந்த காவல் நிலையம் வரை கேட்டது.
அவர்கள் தீயணைப்பு படை வீரர்களுடன் அந்த பகுதிக்கு விரைந்தனர்.
( நதி தொடர்ந்து பயணிக்கும்)


