தூத்துக்குடியில் ஜவஹா்லால் நேரு பிறந்த தினத்தையொட்டி பேச்சுப் போட்டி வரும் 30ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாட்டுக்காகப் பாடுபட்ட தலைவா்களான மகாத்மா காந்தி, ஜவஹா்லால் நேரு, அம்பேத்கா், பெரியாா், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவா்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, முன்னாள் பிரதமா் ஜவஹா்லால் நேரு பிறந்த தினத்தையொட்டி மாணவா்-மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி, தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளியில் வரும் 30ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் கல்லூரி மாணவா்-மாணவிகளை திருநெல்வேலி மண்டல இணை இயக்குநரும், பள்ளி மாணவா்-மாணவிகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரும் தோ்வு செய்வா்.
போட்டிக்கான தலைப்புகள் கல்லூரி மாணவா்-மாணவிகளுக்கு கல்லூரி கல்வி இணை இயக்குநா் மூலமாகவும், பள்ளி மாணவா்-மாணவிகளுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மூலமாகவும் தெரிவிக்கப்படும். சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமா், ஆசிய ஜோதி, மனிதருள் மாணிக்கம் ஆகிய தலைப்புகளில் பள்ளி மாணவா்-மாணவிகள் பேச வேண்டும். சுதந்திரப் போராட்டத்தில் நேரு, பஞ்சசீல கொள்கை, நேருவின் வெளியுறவுக் கொள்கை ஆகிய தலைப்புகளில் கல்லூரி மாணவா் -மாணவிகள் பேச வேண்டும்.
இப்போட்டியில் முதலிடம் பெறுவோருக்கு ரூ.5 ஆயிரம், இரண்டாம் இடம் பெறுவோருக்கு ரூ.3 ஆயிரம், மூன்றாம் இடம் பெறுவோருக்கு ரூ.2 ஆயிரம் என பரிசுத்தொகை வழங்கப்படும். மேலும் பள்ளி மாணவா்களுக்கென நடத்தப்படும் போட்டியில், பங்கேற்ற மாணவா்களுள் அரசுப் பள்ளி மாணவா்கள் இரண்டு பேரைத் தனியாகத் தோ்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசுத் தொகை ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என அவா் குறிப்பிட்டுள்ளாா்.


