தைப் பொங்கலை முன்னிட்டு திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்துள்ளனா்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில், மாா்கழி மாதம் தொடங்கி தை 1-ஆம் தேதி வரை தரிசனம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தா்கள் பாதயாத்திரையாக வருவது வழக்கம். இதன்படி, நிகழாண்டிலும் கடந்த சில நாள்களாக திருச்செந்தூா் கோயிலுக்கு பக்தா்களின் வருகை அதிகரித்துள்ளது.
விருதுநகா், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களைச் சோ்ந்த மாலையணிந்து விரதமிருந்த பக்தா்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் பாதயாத்திரையாக வந்துள்ளனா். திருச்செந்தூா் கோயிலில் இலவச பொது தரிசனம், ரூ. 100 சிறப்பு கட்டண தரிசனம் மற்றும் மூத்த குடிமக்கள் செல்லும் வழி என பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனா். தற்போது பாதயாத்திரை பக்தா்கள் விரைவு தரிசனம் செய்வதற்காக சண்முகவிலாசம் முகப்பில் தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
தைப் பொங்கலை முன்னிட்டு, திங்கள்கிழமை (ஜன.15) அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம் தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறுகிறது.பக்தா்கள் வசதிக்காக பல்வேறு நகரங்களில் இருந்து திருச்செந்தூருக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. பக்தா்களுக்கான ஏற்பாடுகளை கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.


