முன்கதை சுருக்கம்
ராஜதுரையின் கிராமத்தில் எதிரிகள் தீ வைத்தனர். அடிக்கடி தீ வைக்கிறார்கள் இனிமேல் ஓலை குடிசை கட்டக்கூடாது என ராஜதுரையின் ஊர் மக்கள் பிடிவாதமாக இருக்கிறார்கள். இதனால் சொந்தமாக செங்கல் சூளை உருவாக்கும் முதலாளியை ஊருக்கு கூட்டிக்கொண்டு வருகிறார்கள். அனைவருக்கும் ஓடு வீடு கட்டிகொடுக்கும் முயற்சியில் ஈடுபடுகிறான் ராஜதுரை. அவனை மற்ற சமூகத்தினர் பொறாமையில் கொலை பலியில் சிக்க வைத்து விடுகிறார்கள். இதனால் தாமிரபரணி ஆற்றங்கரையில் இருந்து சிற்றாற்றங்கரைக்கு ஓடினான் ராஜத்துரை. அங்கே உள்ள அரண்மனையில் ராஜதுரையை வேலைக்கு சேர்த்து விட்டாள் அவள் அக்காள் கற்பகம். ஆனால் கற்பகம் மீது காம மோகம் கொண்ட தலைமை காவலன் அவள் கற்பை சூறையாட நாள் குறித்தான். எதிர்பாராத விதமாக அவனும் கொலையாகிறேன். அந்த பலியும் அவன் மேல் விழுகிறது. எனவே போலிசுக்கு பயந்து சென்னை ஓடுகிறான். அங்கு சுவாமி தாஸ் நாயுடு என்பவரை சந்திக்கிறான். அவர் வீட்டில் வேலை பார்க்கும் ஆங்கில பெண் ஒருவரையும் சந்திக்கிறான். அவளை மணம் முடித்து பர்மாவில் வாழுகிறான். அங்கே அவனுக்கு வெள்ளத்துரை என்ற மகன் பிறக்கிறான். கொலை குற்றத்தினை மறந்து செல்வச்செழிப்பாக வாழ்கிறது அந்த குடும்பம். ஆனால் இரண்டாம் உலகப்போரில் உடமைகளை எல்லாம் இழந்து சொந்த ஊருக்கு அகதிகளாக இவரது குடும்பம் வரும் நிலை ஏற்படுகிறது.
இனி.
63. சொந்த கிராமத்தில் சூனியம் வைத்த மக்கள்
ராஜத்துரை, மனைவி லெட்சுமியும், மகன் வெள்ளத்துரையும், இறுக்கிக் கட்டிப்பிடித்துக்கொண்டார். “ஜப்பான் நாட்டுக்காரன் நம்மை நிச்சயம் தாக்க மாட்டான். நிச்சயம் நாம் உயிர் பிழைத்து விடுவோம்” என்று நம்பிக்கையோடு சொன்றார்.
உண்மைதான் மகாத்மா காந்திக்கு ஜப்பானில் மிக மரியாதை இருந்தது. அவரது அகிம்சா வழி, எந்த உயிருக்கு தீங்கு செய்ய கூடாது என்ற உன்னத தத்துவம் ஜப்பான் காரர்களுக்கு மிகவும் பிடித்து இருந்தது. இதனால் ஜப்பான் படை வீரர்கள் இந்தியர்களை கண்டால் குண்டு வீசுவது கிடையாது. மாறாக அவர்களை காப்பாற்றவே நினைப்பார்கள். இதனால் ராஜத்துரை வந்த கூட்டத்தினை மூன்றாவது கண்டத்தில் இருந்தும் காப்பாற்றப்பட்டார்.
அனைவரும் பெரும் மூச்சு விட்டார்கள்.
தொடர்ந்து கடினமான பயணம். லெட்சுமி அழுதே விட்டாள். அவளால் நடக்கவே முடியவில்லை “ஏங்க என்னை இங்க எங்கேயாவது வெட்டி புதைத்து விட்டு, நீங்க நம்ம பையனை மட்டும் கூட்டிட்டு போங்க” என்றாள்.
ராஜத்துரை இரண்டு பேரையும் கட்டிபிடித்துக்கொண்டு அழுதார். பர்மாவில் இருக்கும் போதெல்லாம் மனைவியையோ, மகனையோ கண்டிப்பிடித்து பேச -கூட நேரமில்லை. வேலை பணம் என ஓடிக்கொண்டே இருந்தார். இப்போது தான் அவர்கள் இருவரையும் நினைத்துப் பார்க்கிறார். இப்போது பணம் எல்லாம் போய் விட்டது. பாசம் மட்டுமே அருகில் இருந்தது.
ஆனால் அவருக்கு நம்பிக்கை இருந்தது. நிச்சயம் ஊர் போய் சேர்ந்துவிடும்போம். அது வரைக்கும் தாக்குப்பிடிக்க வேண்டும். எனவே இரண்டு பேருக்கும் உற்சாகம் கொடுத்து அவர்களை மலையில் இருந்து இறக்கினார்.
அந்த கரடுமுரடான பாதை வழியாக சீனாவில் இருந்து இந்தியாவுக்கு நுழைந்தார்கள்.
தொடர்ந்து டிரக் மூலமாக இவர்களை மலையில் இருந்து இறக்கினார்கள். லெட்சுமியை இதுவரை தான் கவனிக்காவிட்டாலும் மகாராணியாகவே வைத்திருந்தார் ராஜத்துரை. அங்கே இவர் கஷ்டப்பட்டாலும் கூட மர வீட்டில் ராணி போலவே லெட்சுமி வாழ்ந்து வந்தாள். அவரது மகன் வெள்ளத்துரைக்கு எந்தவித குறையும் கிடையாது. இதே போல் 10 வருடம் இருந்திருந்தால் பர்மாவில் தவிக்க முடியாத நபராக ராஜத்துரை ஆகி இருப்பார்.மிகப்பெரிய செல்வந்தராக ஆகி இருப்பார். இப்போது கூட அவர் லட்சாதிபதிதான். ஆனால் காலம் கடந்திருந்தால் இவரை யாரும் இந்தியன் என்றே சொல்ல முடியாத அளவுக்கு பர்மாவின் பூர்வீக குடியாக மாறியிருப்பார். ஆனால் இவரது போதாத காலம் தற்போது உலகப்போரில் சிக்கி மீண்டும் சொந்த ஊருக்கு வந்துக்கொண்டிருப்பார்.
இந்திய ரயில்வே சந்திப்பு நிலையமான தீம்மாக்கூர் என்னும் இடத்துக்கு ஒரு வழியாக வந்து சேர்ந்தனர். அந்த இடத்தில் மிக பிரபலமான இந்தியர்கள் இவர்களை எதிர்நோக்கி காத்து இருந்தார்கள். இவர்களை அன்போடு அழைத்து சென்று கௌரவித்தனர்.
இவர்களுக்கு சொந்த மண்ணில் கால் வைத்த வுடன் சந்தோஷம் பிறந்தது. இதுவரை உடலில் ஏற்பட்ட வலி எல்லாம் போய் விட்டது. இன்னல்கள் எல்லாம் தீர்ந்துவிட்டது என்று ஆனந்தம் அடைந்தனர். மனதில் சந்தோசம் இருந்தாலும் கூட பாவம் இவர்களின் உடல், உயிரை தவிர அனைத்து உடமைகளும் தற்போது இவர்களிடம் இல்லை. அவற்றையெல்லாம் சுமக்க முடியாமல் அந்தந்த இடத்தில் பல பொருள்களை விட்டு விட்டு வந்து விட்டனர். உயிர் பிழைத்தால் போதும் என உடமைகளை இழந்திருந்தனர். சில இடங்களில் மலையில் ஏறும் போது பல பொருள்களை அப்படியே போட்டு விட்டு வந்தனர். உடுத்திய உடைகளோடு இந்தியாவுக்குள் நுழைந்து விட்டனர். மறு உடை உடுத்த இல்லை. சாப்பிட உணவும் இல்லை. அங்கே சென்றால் தங்கவும் இடமில்லை. ஒரே நாளில் நிர்கதியாக நிற்கிறார்கள்.
இந்தியா அவர்களுக்கு அனைத்து பாதுகாப்புகளையும் வ்ழங்கியது. அவர்களை அழைத்து சென்று முதலில் உணவு வழங்கினார்கள். அது மட்டுமா? இவர்கள் தமிழ் காரர்கள் என்பதால் இவர்களுக்கு இட்லி உள்பட தமிழ் கலாச்சார உணவு சுடச்சுட வழங்கப்பட்டது.
அந்த தலைவர் இவர்களிடம் வந்து இந்தியில் சொன்னார்.” உங்களுக்கு என்ன வேணுமோ. அந்த சௌகர்யம் எல்லாமே உங்களுக்கு செய்து தருகிறோம். நீங்கள் சந்தோசமாக இருங்கள்” என்றார்.
அதன் பின் அவர்களை அங்குள்ள அறையில் குடும்பம் குடும்பமாக தங்க வைத்தனர். அவர்கள் குளித்து விட்டு ஒரு நாள் முழுவதும் ஓய்வு எடுத்தனர்.
மறு நாள் காலை எழுந்தார்கள்.
தொடர்ந்து இந்தியாவில் பாதுகாப்பு இருந்ததே தவிர பயணம் சவாலாக வந்தது. பல நதிகளை கடக்க பாலமோ இரும்புப் பாதையோ இல்லை. அந்த இடத்தில் எல்லாம் ரயிலை விட்டு இறங்கி படகில் ஏறி தான் மறுகரைக்கு கடக்க வேண்டும்.
அதற்கு தயரானார்கள் ராஜத்துரை குடும்பத்தினரும், அவர்களுடன் வந்தவர்களும்.
யோசித்தார் ராஜத்துரை, “நான் பர்மாவுக்கு போகும் போது எப்படி கட்டிய துணியுடன் லெட்சுமியை கூட்டிக்கொண்டு போனேனோ அதுபோலவே தற்போது திரும்பியுள்ளேன். ஆனால் தற்போது தனது குழந்தை வெள்ளத்துரை மட்டும் தங்களோடு இருக்கிறான். மற்றப்படி தான் உழைத்து சேர்ந்த பணம், செல்வாக்காய் வாங்கி வைத்திருந்த பொருள் , பணக்காரன் என்ற அதிகாரம் எல்லாமே நம்மை விட்டுப்போய் விட்டது”.
கண் கசிந்தது. ஆனாலும் தன்னை அடக்கி கொண்டார். ஊருக்கு சென்றால் எல்லாம் சரியாகிவிடும். பொருள் போனால் என்ன? இனிமேல் முதலில் இருந்து துவங்கி விட வேண்டியது தான். தனது உடலில் வலு இருக்கும் வரை உழைத்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.
அவர் மனதில் அந்த எண்ணம் வந்தது. ஆனால் அதே நேரம் அவரது மனம் வேறு அலைபாய்ந்தது. “நாம் வெளிநாட்டுக்கு செல்லும் போது இரண்டு கொலை கேஸ் நம் மீது இருந்ததே. அந்த கேஸ்ஸின் நிலை எப்படி இருக்குமோ. கே¬ஸ் முடித்து இருப்பார்களா? இல்லை. ஊருக்கு சென்றவுடன் தன்னை கைது செய்து விடுவார்களா? அப்படி கைது செய்து விட்டால், தன் குடும்பத்தினை யார் காப்பாற்றுவார். விவரம் தெரியாத வெள்ளத்துரை தன் குடும்பத்தினை காப்பாற்றுவானா?. எதுவுமே தெரியாமல் இருக்கும் தனது மனைவி வெளிநாட்டு காரிப்போல உருவத்தில உள்ளாளே. இவள்தான் குடும்பத்தை காப்பாற்ற முடியுமா?”
“அய்யோ எனக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது எப்படியாவது நான் என் குடும்பத்தனை காப்பாற்றி கொள்ளுவேன்”.
அப்படியே கண்ணை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தார் ராஜத்துரை.
“என்னங்க ஒரு மாதிரி இருக்கீங்க”.
“இல்லை”. சிவந்த கண்களுடன் மனைவியை பார்த்தார்.
“என்ன பொருள் எல்லாம் போயிட்டேன்னு கவலைப்படுதீங்களா-?”
“ம். இல்லை”. குழப்பமாக தலையாட்டினார்.
“ஏங்க நாம சம்பாதித்த பொருள்தான் போனால் போகுது விடுங்க”.
அமைதியாக இருந்தார் ராஜத்துரை.
“நாங்க இரண்டு பேரும் உங்களுக்கு உயிரோடு இருக்கிறோமே போதாதா?” என்றாள் லெட்சுமி.
“சரித்தான்”. கிளம்ப ஆயத்தமானர்கள். எனவே வெறுங்கையை வீசி மூன்று பேரும் அங்கிருந்து கிளம்பினர்.
போர் பயம் இவர்களை விட்டு சென்றுவிட்டது. ஆனால் உடலில் பல பிரச்சனை ஏற்பட்டது. லெட்சுமிக்கு கால் நடக்கவே முடியவில்லை. கம்பீரமாக இருந்த ராஜத்துரைக்கு கூட அடிக்கடி நடந்த திகில் நிகழ்ச்சியால் கொஞ்சம் மன அழுத்தம் அதிகரித்து இருந்தது. இருதயத்தில் « வறு வலி ஏற்பட்டது. ஆனால் அதையெல்லாம் தன் மனதுக்குள் வைத்துக்கொண்டார். இவர்களோடு 7 மாத கர்ப்பிணியாக ஒரு பெண் வந்திருந்தாள். அவளை இந்த பயணத்தில் கூட்டி வருவதே சவாலாக இருந்தது. அவளை மிகவும் கஷ்டப்பட்டு அவளது குடும்பத்தினர் கூட்டி வந்தனர்.
அந்த ரயில் நிலையத்தில் இருந்து கல்காத்தா வந்து சேர்ந்தனர். இந்த ஊர் பெயரை காளி காத்தா என்பதில் இருந்து தான் மருவியது என்பார்கள். காளி காத்த இடமே கல்காத்தா. இப்போது பர்மாவில் இருந்துவ வந்த அகதிகளை காப்பாற்றும் பூமியாக கல்காத்தா விளங்கியது. கல்காத்தாவில் உள்ள இந்தியர்கள் பர்மாவில் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க தங்களது இல்லங்களை தந்து உதவினார்கள். ஒவ்வொரு வீட்டின் உரிமையாளர்களும் தாங்கள் குதிரை வண்டியுடன் ரயில் நிலையத்துக்கு வந்து காத்துக்கிடந்தனர். அவர்கள் ஒவ்வொரு குடும்பத்தையும் தனது வீட்டுக்கு கூட்டி சென்று வேண்டிய உதவிகளை செய்தார்கள். உணவு உடைகளை கொடுத்து கௌரவித்தார்கள். அவர்களை தங்களோடு தங்களாக தங்க வைத்து கொண்டனர். மருத்துவ உதவிகள் செய்து கொடுத்தனர். அதற்கு சல்லி காசு கூட அவர்களிடமிருந்து வாங்கவில்லை. அது மட்டுமில்லாமல் அரசிடம் இருந்து பணமும் அவர்கள் பெற்றுக்கொள்ள வில்லை. சில நாட்கள் அவர்களோடு தங்கியிருந்தார்கள். அதன் பின் அவர்களோடு இருக்க இயலவில்லை. காரணம் தாங்கள் தாங்கள் தங்களது சொந்த ஊருக்கு கிளம்பவேண்டுமென ஆங்கிலயே அரசு உத்தரவிட்டது.
எனவே அகதிகள் அனைவரும் தெற்கு நோக்கி கிளம்பினர். இவர்களுக்கு கல்காத்தா ரயில் நிர்வாகமும் வேண்டிய உதவிகளை செய்தது. காலை மதியம் இரவு எந்தெந்த இரயில் நிலையத்தில் ரயில் நிற்குமோ அங்கே சுமார் 1000 பேருக்கு உணவு தயார் செய்து வைத்திருந்தனர். கீழே இறங்கி அவர்கள் உணவு சாப்பிடும் வரை ரயில் நிற்கும். இவர்கள் சாப்பிட்ட பிறகே ரயில் கிளம்பும். எவ்வளவு பெரிய மனிதாபிமானம். அடிக்கு மேல் அடி விழுந்தாலும் ஆறுதலாக இருந்தது. வடஇந்தியர்கள் இவர்களே அன்போடு வரவேற்று பாசத்தோடு உணவு வழங்கினார்கள். பாசத்தோடு பேசினார்கள். பெரும்பாலுமே வந்தவர்கள் அனைவருக்கும் இந்தி நன்றாக தெரியும் . எனவே இவர்களுக்கு மொழியும் தங்குதடையாக இருக்கவில்லை. எனவே சந்தோசமாக சொந்த ஊரில் இருப்பது போலவே ரயிலில் பயணம் செய்தனர்.
ஆனாலும் இவர்களை பிரச்சனை விடவில்லை. பல நதிகளை கடக்க வேண்டும். இவர்கள் வந்த சமயத்தில் ஒவ்வொரு நதிகளிலும் வெள்ளம் கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்தது. இந்த நதியை கடக்க அப்போது ரயில்வே தண்டவாளமும் கிடையாது. எனவே படகின் மூலம் மறுகரைக்கு வந்தே மற்றொரு ரயிலில் பயணம் செய்ய வேண்டும். வெள்ளக்காலத்தில் தண்ணீர் இழுப்புக்கு ஏற்ப படகு செல்லும், மரண பயம் என்று சொல்வார்களே அதுபோன்ற ஒரு பயத்துடனே பயணம். படகில் ஏறி மறுகரை வரும் வரை உயிர் அவர்களுக்கு சொந்தமில்லை. அடப்பாவமே உடமைகளை இழந்து, உடலையும் உயிரையும் மட்டுமே கையில் பிடித்துக்கொண்டு சொந்த ஊருக்கு வரும் அபலைகளுக்கு இதுபோல அனுபவம் உயிர் போய் வந்தது போலவே இருந்தது. படகு பயணத்தின் மூலம் மறு கரைக்கு வந்து, அங்கிருந்து மற்றொரு ரயிலில் ஏறி மீண்டும் பயணித்தார்கள்.
எவ்வளவு கடினமான பயணம். ஏழு கடல் தாண்டி , ஏழு மலை தாண்டி ராஜாவை மீட்க இளவரசன் செல்லுவான் என பாட்டி சொன்ன கதையையெல்லாம் கேட்டிருப்போம். இங்கேயும் ராஜத்துரை அது போலவே தான் 7 கடல் 7 மலை தாண்டி தனது குடும்பத்தோடு பயணத்தினை செய்து கொண்டிருந்தார். ஒவ்வொரு சவாலையும் சமாளித்துக்கொண்டு பயணத்தினை மேற்கொண்டார்.
ஆற்றுக்கு மறு கரையில் அடுத்த ரயிலில் ஏறினார். அந்த ரயில் மீண்டும் தெற்கு நோக்கி ஓட ஆரம்பித்தது. தொடர்ந்து கோதாவிரி, கிருஷ்ணா நதிகளை தாண்டி சென்னைக்கு வந்து சேர்ந்தார்கள்.
ரயில் நிலையத்தில் தமிழ் பேசும் மதராஸி வாலாக்களை பார்த்த பிறகு அப்பாடா என பெரும் மூச்சு விட்டனர். இந்தியாவுக்குள் வந்தவுடனே உயிருக்கு உத்திரவாதம் கிடைத்தாலும் தனது தாய் மண்ணனான தமிழ் மண்ணில் மிதிக்கும் போது கிடைக்கும் ஆனந்தமே ஆனந்தம் தான்.
அங்குதான் யாருமே எதிர்பாரத விதமாக மற்றுமொரு சோகம் அவர்களுக்காக காத்து இருந்தது.
ஆம். உடன் வந்த 7மாத கர்ப்பிணி பெண் தீடீரென்று மயங்கி விழுந்தார். அதிர்ச்சியோடு அனைவரும் அவள் அருகில் ஓடினார்கள். அதுவரை மலை ஏறி, படகு ஏறி, இரயில் ஏறி வந்த அந்த கர்ப்பிணியின் உடல் தாங்க வில்லை. அவளின் வயிற்றில் இருந்து குழந்தை தானாகவே வெளியேற ஆரம்பித்து விட்டது. இதனால் அவளுக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டது.
உடன்வந்தவர்கள் கூடி நின்று தங்களின் புடவையால் அவள் உடலை மறைத்தார்கள். இதற்கிடையில் முகாமில் இருந்த மருத்துவர்கள் ஓடியே வந்து அவளுக்கு முதலுதவி செய்தனர். ஆனால் அவளை காப்பாற்ற முடியவில்லை. அவள் உயிர் பிரிந்தது. பாவம் அவள் வயிற்றில் இருந்த சிசுவும் வெளி உலகை காணாமலேயே இறந்து போய் விட்டது. வந்தவர்கள் அனைவரும் அதிர்ந்து அமர்ந்து விட்டனர். அவளது உறவினர்கள் கதறி அழுதனர். லெட்சுமியும் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்து விட்டாள். ஆனால் அவர்கள் கண்ணில் இருந்து கண்ணீர் வரவில்லை. பர்மாவில் இருந்து ஒவ்வொரு இடமாக கண்ணீர் வடித்து இறுதியில் தமிழகத்தில் வந்தவுடன் கண்ணீரும் வற்றி விட்டது.
சிறிது நேரத்தில் அவளது உடலை அனாதையாக தூக்கிச்சென்றனர். எங்கே புதைக்கப்போகிறார்களோ? அல்லது எரிக்க போகிறார்களோ? தெரியவில்லை. அவளை புதைக்கும் வரை உறவினர் காத்து இருப்பதாகவும் தெரியவில்லை. அவர்கள் அதைப்பற்றி கவலைப்படவும் இல்லை.
தனது உறவு பெண் இறந்தாள். அவளை நீராட்ட நீர்மாலை எடுத்து வந்து, அவளுக்கு வேண்டிய காரியங்களை செய்து அவளை தங்கள் குல வழக்கப்படி ஊர்வலமாக கொண்டு சென்று அடக்கம் செய்வார்கள். நாலுபேர் பாடைக்கட்டி அவள் உடலை தூக்கி வருவார்கள். உறவினர்கள் புடை சூழ அவளை வழியனுப்பி வைப்பார்கள். அதுவும் கர்ப்பிணி பெண் கருவோடு இறந்தால், அதன் சடங்கு வேறு மாதிரியாக இருக்கும். இங்கே அவளை ஒரு துப்புறவு பணியாளர், ஒரு போர்வையில் சுருட்டி, உறவினர்கள் கண் முன்னே குப்பை தள்ளு வண்டியில் போட்டு தள்ளிக்கொண்டு செல்கிறான். ஒரு மாலை கூட போட வில்லை. ஐயகோ 10 நிமிடம் வரை அவள் விழித்திருந்தாள். வலி தாங்காமல் அலறியிருந்தாள். அம்மா என்று தாயின் மடியில் படுத்திருந்தாள். 10 நிமிடத்தில் உயிர் போய் விட்டது. உறவும் போய் விட்டது.
உயிரற்ற உடல் பிணம். பிணம் ஆகி விட்டால் இந்த பூமியில் தங்காது. உறவும் கண்டு கொள்ளாது. எரித்துவிடுவார்கள் அல்லது புதைத்து விடுவார்கள் என்பதெல்லாம் உண்மைத்தான். இப்படி குப்பை வண்டியில் எறிந்து விடுவார்களா? என்ன?
அந்த பெண்ணின் தாய் அழுதுகொண்டே சொன்னாள். “என்னங்க அவள் வலி தாங்க மாட்டாள். அந்த வண்டிக்காரனை கொஞ்சம் மெதுவா கொண்டு போக சொல்லுங்க”.
சிரித்தார் தந்தை. “இதுவரைக்கு பட்ட பாடு போதாத? இனிமேலா வலிக்க போகுது”. எல்லோரும் கதறி அழ ஆரம்பித்தார்கள்.
“ஏங்க அவளை அடக்கம் பண்ணிட்டு போவுமா?”
தந்தை மௌனமா இருந்தார். மீண்டும் அந்த பெண் அவரிடம் அழுத்தி கேட்டாள்.
“பர்மாவில போட்ட குண்டுல அவ செத்து போயிருந்தா. இருந்து அடக்கம் பண்ணிட்டா வருவ. சரி சொந்தமண்ணில வந்தாவது செத்து இருக்காளே. நல்லதுன்னு நினை”. என்று விரக்தியாக சொன்னவர். மறு நிமிடம் மனைவியை கட்டிப்பிடித்துக்கொண்டு கதறி அழ ஆரம்பித்தார். அவள் அருகில் இருந்தவர்கள் அனைவரும் கதற ஆரம்பித்து விட்டனர். ஆனால் அவர்கள் கதறல் எல்லாம் கேட்காமல் அந்த பெண்ணின் உடல் ரயில்வே நிலையத்தில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டு, அங்கிருந்த குப்பை வண்டியில் தூக்கிப்போடப்பட்டது.
மனிதனின் உடலுக்கு இதுதான் மரியாதை. பாவம் இவளை அலங்கரிக்கப்பட்ட வண்டியில்தான் சுடுகாட்டுக்கு கொண்டு செல்லவில்லை. ஒரு குப்பை வண்டியிலா தூக்கிப் போட்டுச்செல்வார்கள்.
பிணமும் அவர்கள் கண்ணைவிட்டு மறைந்தது. அவளும் அவர்கள் மனதை விட்டு மறைந்தாள்.
சிறிது நேரத்தில் சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு ரயில் கிளம்ப தயாரானது. அதற்கான அழைப்பு குரல் ஒலிக்க ஆரம்பித்தது. அனைவரும் ஓடிப்போய் ஏற ஆரம்பித்தனர். சிறிது நேரத்தில் ரயிலும் கிளம்பி விட்டது.
வீடுமனை எல்லாவற்றையும் பர்மாவில் விட்டு விட்டோம். உடமைகளை வரும் வழியில் ஒன்றொன்றாக இழந்தோம். இறுதியில் தாயகத்தில் உயிர் இரண்டையும் இழந்து விட்டோம். ஒன்றுமே இல்லாமல் தங்களது பிறந்த மண்ணுக்கு கிளம்புறோம்.
ராஜத்துரை நினைத்தார்.
“எங்கே செல்லுவோம். யாரை பார்ப்போம். சொந்த ஊர் எப்படி இருக்கும். யாரெல்லாம் இருப்பார்கள். நம்மை அவர்களுக்கு தெரியுமா? நாம் தங்க வீடு கிடைக்குமா? என்ன செய்யப்போகிறோம்”. தெரியாமல் தவித்தார். ஆனால் தன் மனதில் உள்ள குழப்பத்தை மனைவியிடமும், குழந்தையிடமும் காட்டவில்லை.
மறு நாள். காலையில் திருநெல்வேலியில் வந்து ரயில் நின்றது. வெளியே வந்தார்கள். அவர் அவர்களுக்கு உறவினர்கள் வந்தார்கள். அவர்களை பாசத்தோடு கூட்டிச்சென்றார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அனைதது அகதிகளும் சென்று விட்டனர்.
அந்த ரயில் நிலையத்தில் ராஜத்துரை குடும்பம் மட்டும் அனாதையாக நின்று கொண்டிருந்தது.
இங்கே ராஜத்துரைக்கும் உறவு என்று யாரும் இல்லை. அதனால் யாரும் வரவில்லை . அதேபோல் லெட்சுமியை பார்க்கவும் யாரும் வரவில்லை. பாவம் அவளுக்கும் தான் சொந்தம் என்று யாருமே இல்லையே?. வெள்ளத்துரை கேட்டான்.
“யம்மா நாம சொந்த ஊருக்குத்தானே போறோம் . அங்க இருந்து யாரும் நம்மள பாக்க வரலியாம்மா?” என்றான்.
அவனை இறுக்க அணைத்துக்கொண்டாள். “நமக்கு சொந்தம் அதிகமா இருக்காங்க. அதனால அவங்க வருவாங்க. இவங்க வருவாங்கன்னு எல்லோரும் போட்டிப்போட்டுக்கிட்டு வாரமலேயே இருந்துட்டுட்டாங்க” என்றாள் லெட்சுமி.
புரிந்தும் புரியாமலும் நின்றான் வெள்ளத்துரை.
அப்போது ஒருவர் வந்தார். “நீங்க எந்த ஊருக்கு போனும்”.
ஊரைச் சொன்னார் ராஜத்துரை.
“அந்த பக்கம் வழியாத்தான் நான் மாட்டு வண்டி கொண்டு போறேன். வேணுமுன்னா என் வண்டியில ஏறிக்கிங்க” என்றான்.
“சரி என மூவரும் கிளம்பினார்கள். அவன் வண்டி சக்கடா வண்டித்தான். கூடாரம் எதுவும் இல்லை. பர்மாவில் வில்லு வண்டியில் தான் ராஜத்துரை குடும்பம் எங்கே செல்லவேண்டும் என்றாலும் செல்வார்கள். ஆனால் இங்கே அப்படியொரு நிலை இல்லை. சக்கடா வண்டியில் ஏறினார்கள். இரண்டு காளையும் ஒட்டங்காளை. கிளம்ப ஆயத்த மானது. அப்போது ரயில்வே ஊழியர் ஒருவன் ஓடியே வந்தான். “இந்தாங்க மூனுபேருக்கும் காலை டிபனும், மதியம் சாப்பாடும் இருக்கு” என்று கொடுத்தான். இன்னொருவர் ஓடியே வந்தார். “இந்தாங்க. இதுல ஒரு சேலை, ஒரு வேஷ்டி, சின்னபையனுக்கு சட்டை, மூனு சமுக்காளம் இருக்கு கொண்டு போங்க”. என்றான். இன்னொருவர் ஓடியே வந்தார். “இதுல கொஞ்சம் அரிசியும், காய்கறியும் இருக்கு” என்று கொண்டு வைத்தான்.
ராஜத்துரை “ரொம்ப நன்றிங்கய்யா” என்றார்.
பர்மாவில் இவர் சம்பாதித்த பொருள்களை எத்தனை ஏழை எளியவர்களுக்கு அள்ளி அள்ளி கொடுத்திருப்பார். இப்போது இங்கே அவர் கையேந்தி நிற்கும் நிலமை. பரவாயில்லை. இறைவன் எப்போதுமே எவரையும் ஒரே நிலையில் வைத்திருக்க மாட்டான். ஏற்றம் இறக்கமாகத்தான் வைத்திருப்பான்.
ம். ஏற்றமாக ஏறும் போது பல வருடம் பிடித்தது. ஆனால் இறங்கும் போது ஒரே வாரத்தில் இறங்கி விட்டதே.
சக்கடா வண்டி கிளம்பியது. ஒட்டங்காளையை வேகமாக ஓட்டினான் அந்த வண்டிக்காரன்.
“மத்தியான வெயிலுக்குள்ள ஊருக்கு போவணும். இல்லாட்டி எங்கேயாவது தங்கி, மாட்டுக்கு தண்ணீ காட்ட வேண்டி இருக்கும்” என்று சொன்னவன். மாட்டை விரட்டினான்.
“ஐய்யா மெதுவா போங்க” என்றார் ராஜத்துரை.
ஆனால் அவரது சொல் அவனது காதில் விழவில்லை.
சத்தமாக இவரால் கூறவும் முடியவில்லை. இவர் என்ன அவனை வாடகைக்காகவே அவனை அமர்த்தியிருக்கிறார். ஓசித்தானே. பிறகு எப்படி அதிகாரம் செய்ய முடியும்.
ரயில் நிலையத்தில் இவரை விட்டு பிரிந்த குடும்பம் எங்கே செல்கிறது. எப்படி செல்கிறது என இவர் கேட்கவும் இல்லை. இவரையும் யாரும் கேட்கவில்லை. தப்பித்தால் போதும் என ஓடிவிட்ட்£ர்கள். கிட்டத்தட்ட 15 நாள்கள் ஒன்றாக பர்மாவில் இருந்து கஷ்டப்பட்டு வந்தவர்கள், ஒரு நிமிடத்தில் சொந்தங்கள் கிடைத்தவுடன் தன் குடும்பத்தை மறந்து விட்டார்கள். “சே. என்னடா உலகம் இது”.
அந்த வண்டிக்காரன் சொன்ன படியே மதியம் வெயிலுக்குள் ஊர் வந்து சேர்ந்தான்.
அந்த சின்ன பஜாரில் அவர்களை ஒரு மரத்து மூட்டில் இறங்கி விட்டிருந்தான். காலை டிபனை எடுத்து மதியம் சாப்பிட்டார்கள். இரவு சாப்பாட்டுக்கு மதியம் சாப்பாட்டை பயன்படுத்தி கொள்வோம் என்று வைத்துக்கொண்டனர்.
அதன் பின் தனது சொந்த ஊருக்கு நடக்க ஆரம்பித்தனர். பையன் தலையில் ஜமுக்காளம் துணிமணிகளை ஏற்றி விட்டார். அரிசி சாப்பாட்டை தனது தோளில் வைத்துக் கொண்டார். தனது மனைவியை “மெதுவாக நடந்த வா” என கூறிவிட்டு நடக்க ஆரம்பித்தார். பாவம் அவள் நடந்து வருவதே கடினம். அவளுக்கு சுமை எதுவும் ஏற்றிவிடக்கூடாது.
ஒரு காலத்தில் இந்த வழியாகத்தான் நடந்து வருவார்கள். ஒத்தையடி பாதைத்தான். சுமார் 2 கிலோ மீட்டர் வயல் வரப்பு வழியே நடந்துதான் கிராமத்துக்கு செல்லவேண்டும். ஒரிடத்தில் ஆலங்கால் எனும் வாய்க்காலை கடக்க வேண்டும். அடுத்து நம்பியான் குளத்தினை கடக்க வேண்டும். தொடர்ந்து மாவடிக்காலை கடந்து தனது ஊருக்குள் செல்ல வேண்டும். கடினமான பயணம் தான். கரடு முரடான மலையில் ஏறி இறங்கிய லெட்சுமிக்கு இந்த வயல் வரப்பில் நடப்பதும் கடினமாகத்தான் இருந்தது. நேற்று இரவு மழை பெய்து இருக்கும் போல, ஆகவே வரப்பு வேறு வழுக்கியது. ஆனாலும் சமாளித்து நடந்தார்கள்.
ஊரை பற்றி நினைத்தார் ராஜத்துரை. இதே வரப்பு வழியாகத்தான் இந்த ஊரை விட்டு ஓடினோம். வீடுகளை அப்போது கட்டிக்கொண்டிருந்தார்கள்.அதற்காக தான் எத்தனை முயற்சி எடுத்தேன். செங்கல் சூளை கொண்டு வந்தது. கோயில் கொடையில் சண்டைப்போட்டது. மக்கள் தீ விபத்தில் சிக்கிய போது உதவியது. எல்லாம் ஒரு நொடியில் அவர் கண் முன்னால் வந்து போனாது. எல்லோரும் கட்டி முடித்துஇருப்பார்களா? தாத்தா பொன்னுநாடார், உலக்க நாடார் எல்லாம் இருப்பார்களா? அல்லது அவர்கள் இறந்து இருப்பார்களா? நமக்கு தெரிந்தவர்கள் யார் இருப்பார்கள். நமக்கு தங்க உதவி கிடைக்குமா? யோசித்துக்கொண்டே சென்றார்கள்.
நிச்சயம் உதவி கிடைக்கும். ஏன் என்றால் இந்த ஊருக்கு நான் அந்த அளவுக்கு உதவி செய்து இருக்கிறேன். மனதுக்குள் ஆணிதரமாக நம்பிக்கை வைத்திருந்தார்.
மதியம் இரண்டுமணிக்கெல்லாம் ஊர் போய் சேர்ந்துவிட்டார்கள்.
ஊரைப்பார்த்த வுடன் இவருக்கு சந்தோசமாக இருந்தது. ஆகா. நான் ஆசைப்பட்ட படியே எல்லாமே காரை கட்டிடமாக இருக்கிறது. அந்த குடியிருப்பு மட்டும் மிக உயரமாய் காணப்பட்டது. ஆம் ஆற்று வெள்ளம் நமது மக்களை பாதிக்க கூடாது என இந்த இடத்தினை ராஜத்துரைதான் தேர்வு செய்து இருந்தான். பல தெரு நேர்த்தியாக இருந்தது. ஊருக்கு செல்லும் சிறு பாதை சிமெண்ட பாதையாக இருந்தது.
ஆற்றங்கரையில் இந்த குடியிருப்பு இருந்தாலும் எவ்வளவு வெள்ளம் வந்தாலும் அழியாது. இது எல்லாமே ராஜத்துரை திட்டம் தான். அவன் கோயில் அருகே உள்ள மேட்டில் இந்த குடியிருப்பை அமைக்க «வ்ணடும் என எண்ணி அந்த பணியை முடுக்கி விட்டிருந்தான். எனவே அதுபோலவே அந்த பணியும் நடந்து இருந்தது. ஆனால் இப்போது இங்கே வசிப்பவர்களுக்கு இந்த தகவல் எல்லாம் தெரியுமா?
ஒரு வழியாக நடந்து போய் ஊர் சங்கமடத்துக்கு அருகில் நின்றான்.
யார் இது புதுசா இருக்கு. என பலரும் வந்து பார்த்தார்கள் ஆனால் யாரும் உதவி செய்ய வில்லை. வித்தியசமான வயதான ராஜத்துரை, அவரது மனைவி வெள்ளக்காரி, கரிக்கட்டை போன்று காட்சியளிக்கும மகன் வெள்ளத்துரை. இவர்கள் மூவருமே இந்த ஊருக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் போல தெரிந்தார்கள். எனவே அவர்கள் இவர்களை எச்சில் இலைப்போல பார்த்தார்கள். சொல்லப்போனால் தங்கள் ஊர், தங்கள் இனம், தங்கள் உறவு என நினைக்கவே இல்லை.
அப்போது தான் அந்த ஊரில் துணிகளை வெளுக்கும் செல்லையா வந்தார்.
ராஜத்துரையை நன்றாக பார்த்தார். “ஏய்யா நீர் நம்ம ராஜத்துரைதானே”.
“ஆமாம்”. ராஜத்துரைக்கு கண்ணீர் வந்தது. இவர் ஒருவருக்காவது நம்மை அடையாளம் தெரிகிறதே.
கட்டிப்பிடித்துக்கொண்டார் செல்லையா.
“ஏய்யா நீர் போட்ட பிச்சைய்யா இந்த ஊரு. இந்த ஊரு இன்னைக்கு மாட மாளிகையா இருக்குன்னா நீரு போட்ட பிச்சையா. இன்னைக்கு இந்த மக்க நல்லா வேலை செய்யுதாவன்னா, சொகுசா இருக்காவன்னா அதுக்கு நீர் கொண்டு வந்து செங்க சூளைத்தான் காரணம்”.
லெட்சுமிக்கு தன் கணவரை பார்க்க பெருமையாக இருந்தது. வெள்ளத்துரையும் தனது அப்பாவை கட்டிப் பிடித்துக்கொண்டு நின்றான்.
செல்லையா கேட்டார் “என்னய்யா ஆச்சி”.
“பர்மாவில இத்தனை நாளு இருந்தேன். அங்க குண்டு போட்டுட்டாவ? அதனால வந்துட்டேன். இவ என் பொண்டாட்டி, இவன் என் மவன்”.
“யய்யா இவிய என்ன வெள்ளகாரிச்சி மாரி இருக்காவ. இவிய நம்ம ஊரு காரவியளா. இல்லை வெள்ளக்காரியா?”
“நம்ம ஊரு காரித்தான். ஆனா பாக்க வெள்ளக்காரி மாதிரி இருக்கா”.
“அப்ப நம்ம குட்டி ராஜத்துரை அய்யா மட்டும் ஏன் கரிக்கட்டை மாறி இருக்காவ”.
“அவன் நம்ம ஊரு கலரு”.
சிரித்தான். “கரிக்கட்டை மாறி இருந்தாலும் களையாத்தான் இருக்காவ. ஆமாம் ராஜத்துரை அய்யா எங்க தங்க போறீய”.
“அதுதான் தெரியலை”.
“இந்த ஊரே நீர்போட்ட பிச்சைதான் . யாரு இடம் தாராமல போயிருவா. இப்பவே கேட்டுருதேன். ஆனா பழைய ஆளுக யாரும் இல்லைய்யா. இருந்தா இப்போ உம்ம கவனிக்கிறதே வேறு மாரி இருக்கும். ம். உலக்கநாடார், பொன்னு நாடாரெல்லாம் இருந்தா உடனே உமக்குவேண்டிய உதவியை செஞ்சிருவாவ. இவிய எல்லாரும் புதுசு. இருந்தாலும் கேப்போம்”.
சிறிது நேரத்தில் செல்லையா ஊரை சத்தம் காட்டினார். ஊரே சங்க மடம் முன்னால கூடியது.
செல்லையா பேசினார்.
“அய்யாமாரே நல்லா கேளுங்க இந்த அய்யா உங்க ஊரு காரருத்தான். நம்ம ஊரு இவ்வளவு சிறப்பா இருக்க இவரு உழைப்பு தான் காரணம் . இவியத்தான் போராடி இந்த ஊரை அமைச்சாவ. செங்க சூளையை நம்ம ஊருக்கு கொண்டு வந்தாவ. கடைசியில பாவிக இவிய மேலே கொலை பழியை தூக்கிப்போட்டுட்டானுவ. அப்பவே ஊரை விட்டு ஓடிப்போயிட்டாவ. இவ்வளவு நாளும் பர்மாவில இருந்தாவ. அங்க குண்டு போட்டதால எல்லாத்தையும் இழந்துட்டாவ. இப்போ இங்க வந்து இருக்காவ. போவும் போது தனித்தான் போனாவ. இப்ப கூட இரண்டு உசிர கூட்டிட்டு வந்து இருக்காவ. அய்யாமாரே எல்லாருக்கிட்டேயும் இரண்டு வீடு இருக்கு. யாரவது ஒரு வீட்டை கொடுத்தா அவிய இருந்து கிடுவாவ. பொறவு வீடு கட்டிட்டு போயிருவா”
எல்லோரும் சிறிது நேரம் அமைதியாக இருந்தனர். அதன்பின் ஒருவருக்கு ஒருவர் அமைதியாக பேசிக் கொண்டனர்.
“என்ன அய்யாமரே என்ன உங்களுக்குள்ளே கிசு கிசுன்னு பேசுதிய. என்ன பேசுதீயன்னு கொஞ்சம் சொல்லுங்களேன்”.
“இல்லை செல்லையா. எங்க சொந்த காரருன்னு சொல்லுத. ஆனா எங்களுக்கு இவரு யாருன்னு தெரியலை. எங்க வீட்டில நெல்லை போட்டு வச்சிருக்கோம். அதை எங்க போய் மாத்த முடியும். அதனால சங்கமடத்தில தங்கிட்டு காலையில வேற ஊருல போய் தங்க சொல்லும் வே” என கூறிவிட்டு அவர் அவர்கள் கிளம்பினர்.
செல்லையா இடை மறித்தார். “அய்யாமாரே நான் சொல்றதை கேளுங்க. அவரு நம்ம மக்க முன்னேத்தத்துக்கு நிறைய உழைச்சிருக்காரு. இப்போ பாடத பாடு பட்டு வந்துருக்காரு. அவருக்கு நம்மாள ஏண்ட உதவி பண்ண வேண்டாமா?”
ஒருவன் நின்று திரும்பினான். மறு நிமிடம் வார்த்தைவை விட்டான்.
“அதுக்காக இரண்டு கொலை செஞ்ச மனுசனை எங்க வீட்டுக்குள்ளே கொண்டு வைக்க சொல்லுதீயா. இங்க கொலை பண்ணிட்டு ஓடுனமாறி. அங்க என்ன பண்ணிட்டு இங்க வந்தாவளோ. வேலியில போற ஓணனை தூக்கி சேலைக்குள்ள விடச்சொல்லுதீயோ. நீ. பெரிசா பேசுதீயே உன் வீட்டுல தங்க வைக்க வேண்டியது தானே”.
செல்லையாவுக்கு கோவம் வந்தது.
“போங்கய்யா போங்க. நான் என் வீட்டில தங்க வைக்கத்தான் போறேன். இங்க பாருங்கய்யா. உங்களுக்கு வீடு கட்டும் போதே வண்ணானுக்கு ஒரு வீடு நாசுவனுக்கு ஒரு வீடுன்னு கட்டி கொடுத்தாரு இந்த மனுசன். அதுவும் எங்க பேருல பட்டா போட்டு கொடுக்கணுமுன்னு மனுகொடுத்துட்டு போனவரு. அதனாலத்தான் இன்னைக்கு நான் உங்க ஊருல வெளுத்தாலும் சொந்த வீட்டில இருந்த மகிழ்ச்சியில இருக்கேன். நீங்க நன்றியை மறக்கலாம். ஆனா நான் நன்றியை மறக்க மாட்டேன்”.
“என்னத்தையும் பண்ணு”. அனைவரும் அந்த இடத்தினை விட்டு கிளம்பினார்கள்.
“கொலை காரன்னு சொல்லுதீயளே. அவர் கொலை செஞ்சதை பாத்தியளா? உங்க குடும்பம் நல்லா வாழணுமுன்னு கொலை பழியை சுமந்தவரு அவரு. உங்களுக்காக வாழ்ந்தவரு. கொலை பழியை எதிர்க்க முடியாம பயந்து ஓடி ஒளிஞ்சவரு. இன்னைக்கு ஒடிஞ்சி போய் வந்து நிக்காரு. அவரை விரட்டுதிய. நீங்களெல்லாம் மனுசனா?”
“சே. சொந்த ஊரை நம்பி வந்தா, நீங்களே வந்தவருக்கு சூனியம் வைக்கியளே. இது நியாயமா?”
செல்லையா பேச்சை யாருமே கேட்பதாக தெரியவில்லை.
சிறிது நேரத்தில் அனைவரும் கிளம்பி சென்று விட்டார்கள். அதோடு மட்டுமல்லாமல் தங்களது வீட்டு கதவுகளை தாங்களே அடைத்தார்கள். அந்த கதவு அடைக்கும் சத்தம் ராஜத்துரை மூஞ்சியில் அடிப்பது போல இருந்தது.
அனைவருக்கும் ராஜத்துரையை தெரிந்து இருக்கிறது. ஆனாலும் கொலை காரன் என்ற முத்திரையினால் இடம் தர மனது இல்லை.
செல்லையா இவர்களை தனது வீட்டுக்கு அழைத்து சென்றார். அவன் வீட்டு அருகில் உள்ள சிறிய அறையை திறந்து கொடுத்தார். மண் சுவர்தான். கூரை வீடு, இவர் வீடு ஓட்டு வீடுத்தான். ஆனால் இவரது நோயாளி மனைவி அதில் படுத்து கிடந்தாள்.
வெளுப்புக்குள்ள துணிகளையெல்லாம் தேய்த்து அதில் வைத்து இருந்தார். அருகில் சிறு அடுப்பங்கரை, எதிரே வெள்ளாவி போடும் அடுப்பு.
அந்த சிறிய வீட்டில் இவர்களை உட்கார வைத்து சாப்பாடு போட்டார்.
இரவு 8 மணிக்கு படுக்க ஆரம்பித்தார்கள்.
செல்லையா சொன்னார். “யய்யா கவலை படாதீங்க. நாளைக்கு காலையில உங்களை சேம்பர் முதலாளிகிட்ட கூட்டிட்டு போறேன். அங்க நிறைய வீடு கிடக்கு. அதுல ஒரு வீட்டை வாங்கி அங்கேயே வேலை செஞ்சிகிட்டு இருந்துக்கிடலாம்” என்றார்.
ராஜத்துரைக்கு மனது ஒரு மாதிரியாக இருந்தது. நெஞ்சு வலிப்பது போல இருந்தது. இதுவரை ஒன்றும் தெரியவில்லை. எதிர்பார்போடு வந்த சொந்த ஊர் காரர்கள் உறவு காரர்கள் பேசியது, மனதை வலிக்க செய்தது. அவர்களுக்காக தன் மீது கொலை பழி சுமந்தப்பட்டது. ஆனால் தற்போது அவர்களே கொலையாளி என்று சொன்னது வலியை மேலும் அதிகரித்தது. முகமெல்லாம் வேர்த்தது. ஆனால் எதையும் அவர் வெளியே காட்டவில்லை.
“செல்லய்யா.நான் ஒண்ணு சொன்னா தப்பா எடுத்துக்க கூடாது”. என்றார் ராஜத்துரை.
“என்னய்யா”.
“எனக்கு கொஞ்சம் பயமாகத்தான் இருக்கு”
“எதுக்குய்யா?”.
“நான் கொலை எதுவும் பண்ணலை. எம்மேலே கொலை பலி விழுந்துட்டு. போலீஸ் ரிக்கார்டு படி நான் தான் இரட்டை கொலையை செய்தவன். நாளைக்கு காலையில என்னை போலீஸ் வந்து அரெஸ்ட் செஞ்சாலும் செஞ்சிரும்”.
“என்னய்யா சொல்லுதீய?”.
“நான் கொலையாளி என்கிறதை எல்லோரும் மறந்திருப்பாங்கன்னு நினைச்சேன். ஆனா என்னை யாருன்னு தெரியாத ஊர் மக்களே நான் செஞ்ச கொலையை பத்தி பேசுதாங்க”.
செல்லையா அமைதியாக இருந்தான்.
“அப்படின்னா. நான் இன்னைக்கு போலீஸ் ஸ்டேசன் வழியர்த்தான் ஊருக்குள்ள வந்திருக்கேன். நான் யாருன்னு நிச்சயம் போலீஸ் விசாரிச்சிருக்கும். அப்படி விசாரிச்சா போலீசு நிச்சயம் என்னை கைது பண்ணிரும்”.
“அது வருடம் ஆயிருச்சே. போலீஸ் மறந்து இருக்குமே.”
“அதெப்படி மறக்கும் . அது போலீஸ் ரிக்காடு. எப்படியும் நம்மள கைது செய்துரும்”.
லெட்சுமி வெள்ளத்துரையை கட்டிப்பிடித்துக்கொண்டு அழுதாள்.
செல்லையா தேற்றினாள். “அழாதீங்கம்மா. அழாதீங்க”.
ராஜத்துரை செல்லையாவை பார்த்தார். “செல்லையா. நான் சின்ன வயதிலே என் அப்பா அம்மாவை இழந்துட்டேன். ஊர் மக்கள் நல்லா இருக்கனுமுன்னு உழைச்சேன். எதையும் எதிர்பார்த்து உழைக்கலை. அதனால அந்த மக்க என்னை விரட்டினது எல்லாம் எனக்கு வருத்தம் இல்லை. ஆனா அன்னைக்கு நான் தனி மரமா இருந்தேன். எம் மேலே கொலை பலி போட்ட உடனே ஊரைவிட்டு ஓடிப்போயிட்டேன்”.
மூச்சு விட்டுக்கொண்டார்.
“ஆனா இப்போ அப்படியில்லை. போலீஸ் என்னை பிடிச்சிட்டு போனா என் பெண்டாட்டியையும் பிள்ளை¬யும் நீர்தான் பாக்கணும். என் பெண்டாட்டிக்கு எதுவுமே தெரியாது. அவ பச்சை பிள்ளை. அவளுக்கு ஒரு காய்கறி கூட நான் தான் வாங்கி கொடுப்பேன். அவளுக்கு வெளி உலகமே தெரியாது. அவளை நீர் தான் பாத்துக்கணும். எம் பையன் இன்னும் இரண்டு மூனு வருசத்தில பெரிய ஆளா மாறிடுவான். அதுக்கப்புறம் அவன் அம்மாவை பாத்துக்கிடுவான். அது வரைக்கும் நீர்த்தான் பாத்துக்ணும்”.
செல்லையா கையை பிடித்தார் ராஜத்துரை.
“அய்யா. என்ன இப்படி சொல்லுதீய. உங்களுக்கு ஒண்ணும் ஆவாது”.
“இல்லை செல்லையா நீர்தான் என் தகப்பன் மாரி. எனக்கு இந்த ஊருல நிறைய உறவு இருக்குன்னு வந்தேன். நான் இந்த இனத்துக்காக உழைச்ச உழைப்புக்கு எனக்கு உதவி கிடைக்குமுன்னு தப்பு கணக்கு போட்டுட்டேன். நான் இங்க வந்திருக்க கூடாது. அப்படியே பம்பாயி டெல்லின்னு போயிருக்கனும். தெரியாம வந்துட்டேன். கல்காத்தாவில கூட இருக்க சொன்னவ நான் கேட்கலை. இப்ப நானே வலையில வந்து விழுந்த எலி மாறி ஆயிட்டேன். இனிமே இங்கிருந்து தப்பிக்க முடியாது. நிச்சயம் என்னை போலீஸ் பிடிக்கும். என் மனைவியையும் மகனையும் நீருதான் பாக்கணும். எனக்கு சத்தியம் பண்ணிகொடும்”.
செல்லையா ராஜத்துரையை கட்டிப்பிடித்தார்.
“யய்யா இங்க பாரும். உம்ம போலீஸ் பிடிக்காது. அப்படியே பிடிச்சா நீர் தைரியமா போரும். உம்மை நான் எப்படியாவது வக்கீலை வச்சி வெளியே கொண்டு வருவேன். அது மட்டுமில்லையா. நீர் ஜெயில இருந்து வருத வரைக்கும் உம்ம மனைவி என் மவ. உம்ம பிள்ளை என் பேரப்பிள்ளை. நான் அரணா இருந்து காப்பாத்துவய்யா”.
நான்கு பேரும் அழ ஆரம்பித்து விட்டார்கள்.
நான்கு பேர் அழுகையும் படுக்கையில் கிடந்த செல்லையாவின் மனைவிக்கு கேட்டு இருக்க வேண்டும். அவள் இறுமிய படி “யாரு வந்திருக்கா” என்றாள்.
“ம். உம் மவளும் பேரனும் வந்திருக்காவ”. என்றான் செல்லையா.
அது அவளுக்கு கேட்டதோ இல்லையோ, ஆனால் பதில் எதுவும் சொல்லவில்லை.
அன்று இரவு வெகுநேரம் வரை தூக்கம் வராமல் தவித்து க்கொண்டிருந்தார் ராஜத்துரை. அவருக்கு வேர்த்துக்கொண்டிருந்தது.
என்னங்க ஒரு மாரி வேக்குது.
“ ஒன்னுமில்லை. இடம் மாறுதுல்ல, அதான் புளுங்குது”
ரயில்வே நிலையத்தில் கொடுத்த வேஷ்டியை கட்டினார். மூன்று பாயையும் விரித்தார் . நடுவில் படுத்துக்கொண்டார். அவரை மகனும் மனைவியும் இறுக்கி பிடித்த படியே இருபுறமும் படுத்து தூங்கி ஆரம்பித்தனர்.
இன்று இரவு தான் அவரோடு அவர்கள் இருக்கப் போகிறார்கள் என்பதும். இனி எப்போதுமே பிரிந்து தான் வாழப் போகிறார்கள் என்பது அப்போது அவர்களுக்கு தெரியவில்லை.
*******
மறு நாள் காலை விடிந்தது.
மூன்று பேரும் நன்றாக தூங்கி கொண்டிருந்தார்கள்.” சரி தூங்கட்டும். பாவம் அழுப்பு. எத்தனை நாள் கஷ்டப்பட்டார்களோ” என நினைத்தார் செல்லையா. சரி நாம் ஆற்றுக்கு போய் விட்டு வருவோம் என கிளம்பினார்.
அப்போது தான் ராஜத்துரை சொன்னபடியே சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஜீப் அந்த ஊருக்கு வந்தது. சங்கமடத்தின் அருகில் வந்து வண்டி நின்றது.
போலீஸ்காரர்கள் ஜீப்பை விட்டு இறங்கினார்கள்.
அங்கிருந்தவர்களிடம் கேட்டனர்.
ராஜத்துரை எங்க இருக்கான்.
தெரியலை எஜமான். சொன்னவனை லத்தியால் ஓங்கி அடித்தார் ஏட்டையா. “ஏலே நேத்து சாயங்காலம் வந்திருக்கான். ஊருக்குள்ள தெரியாமலேயா இருக்கும்”.
“எஜமான் அடிக்காதீய. வண்ணான் வீட்டிலத்தான் இருக்கான்”.
“எங்களே வண்ணான் வீடு”.
“அன்னா தெரியுது பாருங்க. வெள்ளாவி அடுப்பெல்லாம் இருக்கு பாருங்க. அங்கத்தான்”.
போலீஸ் அந்த வீட்டை நோக்கி கிளம்பியது.
போலீஸ் வந்த விவரம் செல்லையாவுக்கு தெரிந்தது. அவர் ஆத்தில் இருந்து வீட்டுக்கு ஓடியே வந்தார்.
அதற்குள் போலீஸ் செல்லையா வீட்டுக்குள் சென்று ராஜத்துரை படுத்திருந்த அறையை எட்டிப்பார்த்தனர்.
அங்கே
ராஜத்துரையை கட்டிப்பிடித்தப்படி, லெட்சுமியும், வெள்ளத்துரையும் படுத்துக்கிடந்தனர்.
சர்க்கிள் அதை பார்த்து , “ஏட்டு தூங்குகிறவன் எந்திருக்கட்டும் கொஞ்சம் வெயிட் பண்ணுவோம்” என்றார்.
பாவம் தூங்குகிறவனை பார்க்க அவருக்கு பாவமாக இருந்தது. மேலும் அவன் கட்டையெல்லாம் படித்திருந்தார். அவருக்கு இவன் கொலை செய்திருக்க வாய்ப்பே இல்லை என்பது போலத்தான் தெரிந்தது. ஆனாலும் சட்டம் தன் கடமையை செய்ய «வ்ணடும் அல்லவா?
சர்க்கிள் ஜீப்பில் போய் அமர்ந்து கொண்டார்.
செல்லையா ஓடியே வந்தான். “ஏஜமான். ஏஜமான்” என்று சர்கிள் இன்ஸ்பெக்டர் முன்பு துண்டை எடுத்து கையில் போட்டுக்கொண்டு முட்டிப்போட்டு நின்றான்.
“யோவ் போய் அவனை எழுப்பி கொண்டு வாருமே”. என்றார் சர்கிள்.
சரி எஜமான். செல்லையா தனது வீட்டை நோக்கி ஓடினார்.
ராஜத்துரையை எழுப்பினார்.
“யய்யா. யய்யா எழுந்திருங்கய்யா”. என்றார்.
ஆனால் அவர் அசைவில்லை.
லெட்சுமி விழுந்து கொண்டாள். வெள்ளத்துரையும் விழித்து கொண்டான். லெட்சுமி ராஜத்துரையின் உடலை தொட்டுப்பார்த்தாள். ஜில் என்று இருந்தது. அவரது மூச்சை தொட்டுப்பார்த்தாள். மூச்சே இல்லாமல் மூர்ச்ச¬யாக கிடந்தார் ராஜத்துரை.
“என்னங்க” லெட்சுமி சத்தமிட, நிலமையை புரிந்து கொண்டு “யயயா” என அலறினார் செல்லத்துரை.
(முத்துக்கிளி தொடர்ந்து கூவுவார்)


