குருவம்மாள் சொன்னாள். “நாங்க போராட்டத்துக்கு வரத்தாயராக இருந்தோம். ஆனால் மாரியப்பன் வந்தான். யக்கா. போராட்டத்துக்கு போக வேண்டாம். ஆளுக்கு 200 ரூபாய் தாரேன்னு சொன்னான். நாங்க போரட்டத்துக்கு வந்தா எப்படியும் பஸ் காசு, சாப்பாட்டு காசுன்னு தலைக்கு 100 ரூபாய் செலவாயிரும். ஆனால் வீட்டில இருந்தா 200 ரூபாய் தாரேன்னு சொன்னவுடனே அத்தனை பேரும் வீட்டிலேயே இருந்துட்டோம். இதுக்கு போய் நீ இப்படி கோபப்படுத்தியே?”
செல்வி அதிர்ந்தே போய் விட்டாள்.
“அடப்பாவிகளா? கொள்கை, நம்பிக்கை, இது எல்லாம் எப்போது தமிழர்களிடம் குறைந்தது. பணம் கொடுத்தால் போதும் என்ற மன நிலைக்கு எப்போது வந்தார்கள் இந்த மக்கள்”. செல்வி மனதுக்குள் வேதனையடைந்தாள்.
இனி இவர்களிடம் பேசி புண்ணியம் இல்லை. எனவே அவளிடம் சத்தமே காட்டாமல் இருவரும் கிளம்பினார்கள்.
அவர்களுடைய மொபைட்டில் இறங்கி வருத்தமாக வீடு வந்து சேர்ந்தனர். சோறு பொங்கி சாப்பிடவேண்டும் என்று கூட நினைக்கவில்லை.
ஆனாலும் இந்த மாரியப்பன் இப்படி செய்கிறான் என்றால் அடுத்தப்படியாக ஒரு மணல் கொள்ளையர்கள் அரசு போர்வையில் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் இறங்க போகிறார்கள். அவர்களிடம் இருந்து எப்படி நாம் தாமிரபரணியை காக்காப் போகிறோம் என்பது தான் அறியாமல் இருந்தது.
தாத்தா வருவார், பசியோடு இருப்பார். அவருக்காவது சோறு பொங்க வேண்டும் என்று பொங்க ஆரம்பித்தாள் செல்வி.
பேசாமல் அமைதியாக இருந்தான் காளி. தாத்தா வந்தார்.
“குருவம்மாளை பார்த்தீங்களே என்ன சொன்னா?”
“மாரியப்பன் கிட்ட பணத்தை வாங்கிட்டு போராட்டத்துக்கு வரலை”.
சிரித்தார். “அப்படின்னா இனிமே நாமா போராட்டம் நடத்துனுமுன்னா. காசு கொடுக்கணும். அவங்களுக்கான போராட்டம் என்றாலும் காசுக்கொடுக்கணும்”.
வறட்சியாக சிரித்தான் காளி.
“ஆளும் கட்சி கூட்டம் போட்டாலும் 200 ரூபாய் கொடுத்து பிரியாணி பார்சலும், வேனையும் அமத்தி கொடுத்தாத்தான் வாராங்க. இதுக்கு மகளிர் குழு தலைவி புரோக்கர் வேலை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. எதுக்கு மகளிர் குழு ஆரம்பிச்சாங்களோ. அதுவே இன்னைக்கு மாறிப்போச்சு”. தாத்தா புலம்பினார்.
“என்னைக்கு இந்த பஞ்சாயத்து தேர்தல் ஆரம்பிச்சோ. அன்னைக்கே லஞ்ச லாவன்யம் பெருகி போச்சு. ஒரு ஊருல ஐந்து பேரு போட்டி போட்டா ஐந்து பேரு கூடவும் கூட்டம் கூட்டமாக போறாங்களே. ஆம்பிள்ளைக்கு ஹோட்டர், பெண்களுக்கு பிரியாணி பொட்டணம், அப்புறம் கையில் 200 ரூபாய் வாங்கிட்டு சந்தோசமா வீட்டுக்கு வாறாங்க. இவங்க யாருக்குத்தான் ஓட்டு போடுவாங்களோ? தெரியலை. திருவிழா என்றால் ஒரு காலத்தில் கோயில் கொடை மட்டும்தான் இருந்தது. ஆனால் இன்னைக்கு தேர்தலும் திருவிழா ஆகிட்டே”.
தாத்தா புலம்பலை தொடர்ந்து காளி சொன்னான்.
“நல்லவங்க தேர்தலுல இனிமே நிக்க முடியாது. காசு இல்லாதவன், அந்த பக்கம் எட்டியே பார்க்க முடியாது”.
“உண்மைத்தான். பஞ்சாயத்து எலக்சனுக்கு 5 லட்சம் செலவு பண்ணி ஜெயிச்சா. அவன் அந்த பணத்தை எடுக்க என்ன செய்யலாம். மண்ணை விக்கலாமா? இல்லை மக்களை விக்கலாமா? இல்லாட்டு பஞ்சாயத்துல என்னைத்தை விக்கலாமுன்னு அலைய ஆரம்பிச்சிட்டானுவளே. இவனுவளை எப்படி திருத்த”.
தாத்தாவின் புலம்பல், பழைய காலத்தினை நோக்கி சென்றது.
“அந்த காலத்தில காமராஜர் பணக்காரங்களுக்கு பதவியை கொடுக்கணுமுன்னு சொல்லுவாராம். காரணம் அவன் தான் பணத்துக்கு ஆசை படமாட்டான். தன் கை காசை மக்களுக்கு செலவழிப்பான்னு நினைச்சாரு. அவரு நினைச்ச மாதிரி அப்போ பணக்காரங்க மக்களுக்கு சேவை செஞ்சாங்க. அரசாங்க காசு மேலே ஆசைப்படமாட்டாங்க”.
காளி தான் படித்ததை அவரிடம் சொன்னான்.
“ நானும் கேள்வி பட்டு இருக்கேன் தாத்தா அந்த காலத்தில கக்கன் மாதிரி போலீஸ் மந்திரியும் காமராஜர் காலத்தில தான் இருந்தாங்க. இராத்திரி இரயிலை விட்டா பிளாட்பார்முல படுத்து கிடந்தாருன்னு சொல்லுவாங்க. அந்த மாதிரி எந்த தலைவர் இனிமேல் வரப்போகிறாங்க”.
தாத்தா ஆணித்தரமாக சொன்னார்.
“இல்லை. இருப்பாங்க எங்கேயாவது ஒரு தலைவர் இருக்கத்தான் செய்வாங்க. நிச்சயம் இருப்பாங்க. இந்த காலத்திலும் ஒரு கர்மவீரர் வாழ்ந்து கிட்டத்தான் இருப்பாங்க. அவங்களை நாம தான் கண்டு பிடிக்கணும்”.
“அவங்களை கண்டு பிடிக்கது இருக்கட்டும் .அதுக்கு முன்னால நாம எப்படியாவது மணல் குவாரியை நிறுத்தப்பார்க்கணும்”.
“நிச்சயம் நம்மால முடியாது. அதற்கு யாரை பார்க்கலாம். யார் மூலம் அதை நிறைவேற்றலாம்”.
“எங்களுக்கு அ-னுபவம் பத்தாது தாத்தா. நீங்கத்தான் அதுக்கு ஏத்த ஆளைகண்டு பிடிக்கணும்”. செல்வி அவர்கள் பேச்சுக்கு முற்று புள்ளி வைத்தாள்.
அன்று இரவு மூன்று பேருக்குமே தூக்கம் வரவில்லை.
செல்வி, காளி, தாத்தா மூன்றுபேரும் யோசனை செய்து விட்டு படுத்தார்கள்.
ஆனால் அடுத்த வாரமே அரசு மணல் குவாரிக்கு உத்தரவு இட்டு விட்டது. அதிர்ந்தே போய் விட்டார்கள். மீண்டும் ஒரு ஆட்டம் போடப்போகிறார்கள். இராட்சத இயந்திரங்கள் இறக்கப்போகிறார்கள். மணல் அள்ள லாரிகளை கொண்டு வரப்போகிறார்கள். நீர் ஊற்றை அழிக்கப்போகிறார்கள்.
மாவட்ட ஆட்சி தலைவர் வெளியிட்ட அறிக்கையில் தாமிபரணியில் மணல் அள்ள மக்கள் தேவைக் காகவும், கட்டிட வேலைக்காகவும் அரசு மணல் குவாரி அமைக்கப் பட்டுள்ளது. இதில் அரசு விதித்துள்ள சட்ட விதி படி மணல் அள்ளவேண்டும். வனத்துறை இடத்துக்குள் மணல் அள்ளக்கூடாது. வண்டல் மணணை இலவசமாக விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டும், அருகில் உள்ள தொல்லியல் களத்தில் இருந்து 100 மீட்டர் தள்ளியே மணல் அள்ள வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து இருந்தார்.
இதை புதிதாக பார்த்தவர்கள் பராவாயில்லை மாவட்ட ஆட்சி தலைவர் கட்டுப்பாட்டுக்குள் அரசு மணல் குவாரி இயங்கும் என நினைத்தார்கள். ஆனால் உண்மையில் அப்படி நடக்கவா போகிறது. காளிக்கும் தாத்தாவுக்கு மட்டும் தெரியும். நிச்சம் இவர்கள் அளவுக்கு அதிகமாக மணலை அள்ளி, குழி தோண்டப்போகிறார்கள். வரம்பு மீறி ராட்சத இயந்திரத்தினை பயன்படுத்தப்போகிறார்கள். தட்டிக்கேட்பர்களை ரவுடிகளை கொண்டு அடிப்பார்கள். வெளியே அரசு மணல் குவாரி. ஆனால் உள்ள அரசியல் வாதிகளின் மணல் குவாரி. மொத்தத்தின் என் தாமிரபரணி ஆற்றின் மடியில் இருந்து மடுவை அறுக்கப்போகிறார்கள்.
அறிவிப்பு வருவதற்குள். ஆற்றுக்குள் குறிப்பிட்ட இடத்துக்குள் மண் அள்ள ஆயத்தமானவர்கள். டாரஸ் வண்டிகளும் இராட்சத இயந்திரங்களும் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதியில் இருந்த வந்தன. அருகில் இருக்கும் கிராமங்களில் உள்ள அனைவருக்கும் தினமும் 200 ரூபாய் படி வழங்கப்படும். அருகில் உள்ள பத்திரிக்கை நிருபர்களை கவனிப்பது. பஞ்சாயத்து தலைவர், சேர்மன், கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர், மாவட்ட சேர்மன், லோக்கல் எம்.எல்.ஏ, லோக்கல் எம்.பி என உள்ளாட்சி பிரதிநிதிகளை பேசி முடித்தனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் பெயருக்கு ரசீது புக்கோடு போய் அமர்ந்தனர். யாராவது எதிர்த்து பேசினால் அவர்கள் வேறு மாதிரி கவனிக்கப்பட்டனர். அரசு திட்டங்களை நிறைவேற்ற இதுபோன்ற முனைப்பை எந்த அரசு அதிகாரியும், அரசியல் வாதிகளும் எடுப்பதே இல்லை. ஆனால் ஆற்று மணல் குவாரி என்றால் மட்டுமே இவர்கள் வேகமாக செயல்படுகிறார்கள்.
பல்வேறு ரவுடிகள் இறக்கப்பட்டனர். யார் தேவையோ அவர்களை தவிர யாரும் உள்ளே நுழைய கூடாது. யார் புகைப்படம் எடுத்தாலோ. அல்லது யாராவது அத்து மீறி உள்ளே நுழைந்தோலோ அவர்கள் கதி அதோ கதித்தான்.
இப்போது இதோ படுத்து உறக்கம் வராமல் தவித்துக்கொண்டிருக்கும் இந்த மூன்று பேர் மட்டுமே தாமிரபரணியை காப்பாற்ற உள்ளனர். பெரும் பாலும் மற்றவர்கள் அனைவரும் எதிரணியானார்கள். இதில் தாமிரபரணியை காப்பாற்ற வேண்டும் என நினைக்கும் 70 சதவீதம் பேர் நமக்கு எதுக்கு வீண் வம்பு, நாம எந்த வம்பு தும்புக்கும் போக வேண்டாம் என நினைத்தார்கள். அவர்கள் ஒதுங்கி இருந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர்.
மறுநாள் விடிந்தது.
அதிகாலை சூரியன் பார்த்து நமஸ்கரித்து விட்டு, “சூரிய பகவானே தாமிரபரணியை காப்பாற்று அப்பா?” என கூறினார் தாத்தா.
“தாத்தா, சூரிய பகவான் நினைத்தால் காப்பாற்ற முடியாது, நாம் நேற்று இரவு பேசினோமே. அதுபோல ஒரு கர்மவீரர் வந்தால் மட்டும்தான் நதியை காப்பாற்ற முடியும்”.
என்ன செய்ய என்று நினைக்கும் போதுதான் தாத்தாவுக்கு அந்த மிகப்பெரிய அரசியல் வாதி நினைவுக்கு வந்தார்.
“காளி நாம உடனே சென்னை செல்ல வேண்டும்”.
“எதுக்கு தாத்தா”.
“இந்த கதைக்கு என் நண்பன் உதவுவான்”.
“யாரு தாத்தா”.
“நம்ம ஊருத்தான் பேரு செல்லக்கண்ணு”.
இந்த பெயரை அடிக்கடி கேள்வி பட்டிருக்கான் காளி. “அவர் மிகப்பெரிய கட்சியோட முக்கிய பிரமுகர். நம்ம ஊருக்காரர் தான். தாமிரபரணின்னா அவருக்கு உசிரு. ஆனால் அவர் அரசியல் வாதி. அரசியல் வாதி எப்படி நமக்கு உதவியா இருப்பாரு”. ஆச்சரியப்பட்டான் காளி.
தாத்தா சொன்னார், “அவரு எந்த காரணத்தை கொண்டும் காசுக்கு ஆசைப்படமாட்டார். ஒரு சமயம் 1 கோடி ரூபாயை கட்சி இவருக்கு நிதியா கொடுத்தாங்க. அதில் 5 ஆயிரம் கூட போட்டு கட்சிக்கே அந்த பணத்தை நிதியாக கொடுத்துட்டாரு”.
“அப்படியா?” ஆச்சரியப்பட்டாள் செல்வி.
“ஆமாம் அரசு கூட அவருக்கு வாழ் நாள் சாதனையாளருன்னு 25 லட்ச ரூபாய் பரிசை கொடுத்தாங்க. கூட 5 ஆயிரம் போட்டு முதல்வர் கையில கொடுத்து முதல்வர் நிதிக்கு வச்சிகிடுங்கன்னு அசால்டா வீட்டுக்கு வந்துட்டாரு”.
“ அடடே ஆச்சரியமா இருக்கே”.
“எல்லோருமே காமராஜர் காமராஜர் கரை படாத கரத்துக்கு சொந்தகாருன்னு சொல்லுவங்க”.
“ஆனா அரசியல்வாதியில இன்னொரு வாழும் காமராஜரு இவரு. இவரை நாம் உடனே போய் பார்க்கணும்”
“சரி இன்னைக்கே நாம கிளம்புவோம்”.
மூன்று பேரும் நெல்லை எக்ஸ்பிரஸ் இல் பொது கோட்சில் ஏறி அடித்து பிடித்து சீட்டு போட்டு உட்கார்ந்தார்கள்.
மறுநாள் காலை சென்னையில் செல்லக்கண்ணு அய்யாவை அவரது வீட்டில் போய் பார்த்தார்கள்.
தாத்தாவும் அவரும் நண்பர்கள் என்பதால் இவரும் சந்தோசமாக பேசினார்கள். “எப்படியாவது மணல் குவாரியை முதல்வர் கவனத்துக்கு கொண்டு போய் நிப்பாட்டணும்”. தாத்தா சொன்னார்.
“எனக்கு நீங்க ஒரு காரியம் செய்யணும். எப்படியாவது மணல் குவாரி போட்டோவை எடுத்து தரணும்”.
காளி அமைதியாக இருந்தான்.
“கடந்த 5 வருடத்துக்கு முன்னால் நடந்த மணல் குவாரியில் போட்டோ எடுக்க விடலை. அதனால இவங்க தாமிரபரணியை நச்சி பிச்சி வைச்சிருந்ததை நாங்கள் கமிஷன் வரும் போது எடுத்து வைத்திருந்தோம்”.
யோசித்தார் செல்லகண்ணு. “சரி அந்த புகைப்படம் போதும்”.
“அய்யா. வழக்கறிஞர் வேணுமே”.
சிரித்தார். “பணம் வைத்து இருக்கிறீர்களா?”
மூன்று பேரும் அசட்டு சிரிப்பு சிரித்தனர். “இந்த இடத்தில் எந்த வைக்கீலும் வேண்டாம். நானே வாதாடுகிறேன். நிச்சயமாக ஸ்டே வாங்கிருவோம்”. நம்பிக்கையோடு சொன்னார். மூன்று பேருக்கும் நம்பிக்கை ஏற்பட்டது.
அன்று இரவு வேளையில் அவரோடு தங்கியிருந்தார்கள். அவர் தாமிரபரணியை பற்றி நிறைய பேசினார்கள்.
செல்லகண்ணு கேட்டார்.
“தாமிரபரணி இப்போ எப்படி இருக்கு”
“தாமிரபரணியைக் காப்பாற்ற நாம் என்ன செய்ய வேண்டும்? இதுதான் நமது முன்னால் நிற்கும் மிகப்பெரிய கேள்வி. நமக்கு உயிர் தரும் தாமிரபரணிக்கு நாம் எப்படி உயிர் கொடுக்கப்போகிறோம்.இதுதான் இப்போது நாம் எடுக்க வேண்டிய முடிவு. மிகப் பழமையான பாசனக் கட்டமைப்பைக் கொண்ட, கால்வாய்கள் அனைத்தும் தூர்ந்தும், கொள்ளளவு குறைந்தும் இருக்கு. பாவநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு நீர்த்தேக்கங்களுக்குள் பல அடி உயரத்துக்குச் சகதி நிரம்பியிருக்கிறது. 1992&இல் வந்த வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட பாறைகள், பெரும் மரங்கள் எல்லாம் அப்படியே அணைக்குள் கிடக்கின்றன. இதுவரை இந்த அணைகள் தூர்வாரப்படவே இல்லை”.
தாத்தா சொல்லிவிட்டு அமைதியாக இருந்தார் செல்லகண்ணு “உச்” கொட்டினார்.
“கால்வாய்களும் தூர்ந்திருப்பதால் தண்ணீர் கடத்தும் திறனும் குறைந்திருக்கிறது. கரைகள் சிதலமடைந் திருப்பதால் நீர்க்கசிவு மூலம் ஏராளமான தண்ணீர் வீணாகிறது. தவிர, அணைகளில் நீர்மட்டத்துக்கு மேல் வளரும் கொடிப்பாசி என்னும் தாவரங்களாலும், முட்புதர்களாலும் தண்ணீர் கொள்ளளவு குறைந்து விட்டது. நீரோட்டத்தில் தடையும், கரைகளில் சேதங்களும் கணிசமாகவே ஏற்பட்டிருக்கிறது”.
செல்லகண்ணு தாத்தாவை பார்த்துக்கொண்டிருந்தார். தாத்தா தொடர்ந்தார்.
“இவை தவிர, மக்கள் குப்பைகளையும், கட்டிட இடிபாடுகளையும் கால்வாய்களில் கொட்டுவதால் நீரோட்டம் மேலும் தடைப்படுகிறது. குடியிருப்புப் பகுதிகளில் இருந்து வெளியேறும் சாக்கடைக் கழிவுகளும் கால்வாய்களில் திறந்து விடப்படுகின்றன. இவை தவிர, தாமிரபரணியின் தண்ணீரால் பலன் பெறும் ஏராளமான பாசனக் குளங்களும் மேடு தட்டித் தூர்ந்து போயிருக்கின்றன. அணைகள், நீர்த்தேக்கங்கள், கால்வாய்களை, குளங்களைத் தூர்வார வேண்டும்; ‘ஷட்டர்களைப்’, பழுது நீக்கிப் பாதுகாக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் பிரதான கோரிக்கையாக உள்ளது. இதை முதல் கட்டமாக, படிப்படியாக, செய்யவேண்டும்”.
“இதற்கு தனியாகவே ஒரு வழக்கு தொடர வேண்டும் போல தெரிகிறதே”-. செல்லகண்ணு ஆதங்கப்பட்டார்.
“தாமிரபரணியில இப்போ வெள்ளப்பெருக்கு குறைஞ்சு போயிட்டு , ஒரு காலத்தில அதாவது 1810-&இல் ஏற்பட்ட வெள்ளத்தில் கரையோரத்தில் இருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. தாமிரபரணியின் துணை நதியான கடனா நதி பாயும் ஆழ்வார் குறிச்சியில் மட்டும் 500 வீடுகள் சேதம் அடைந்தன. உயிர்ச்சேதமும் ஏற்பட்டது. 1827&இல் ஏற்பட்ட வெள்ளம் திருநெல்வேலி நகரை மூன்று நாட்களுக்கு தன்பிடியில் வைத்திருந்தது. திருவைகுண்டம் கோயிலையும் வெள்ளம் சூழ்ந்தது. மூன்று நாட்களாகச் சிலர் கோயில் கோபுரத்தில் ஏறி உயிர் பிழைத்தனர்.
1869&ஆம் ஆண்டு வெள்ளத்தில் பாலங்கள் சேதமடைந்தன. திருவைகுண்டம் பாலத்துக்குமேல் 5 அடி உயரத்துக்குத் தண்ணீர் ஓடியது. 1874&இல் பயிர்கள் சேதமாகின. 1877&இல் டிசம்பர் 6ஆம் தேதி நள்ளிரவில் திருநெல்வேலி கொக்கிரகுளம் ஆட்சியர் அலுவலகத்தை வெள்ளம் சூழ்ந்தது. அதே ஆண்டு, டிசம்பர் 17&இல் மீண்டும் வெள்ளம் சூழ்ந்தது. 1895 வெள்ளத்தில் தைப்பூச மண்டபத்தில் இருந்த 18 பேர் அடித்துச் செல்லப்பட்டார்கள். அவர்களில் ஒரு சிறுவன் மட்டும் உயிர் தப்பினான். கடைசியாக 1992&இல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சேர்வலாறு பாலம் அடித்துச் செல்லப்பட்டது. கருங்குளம் கிராமத்தினை வெள்ளம் சுற்றியது. வெள்ளம் அடித்துச் சென்றவர்களில் இரண்டு பேர் இறந்தனர். ஒருவர் 3 நாள் கிளையைப் பிடித்துக்கிடந்து, தீயணைப்பு படை மூலமாகக் காப்பாற்றப்பட்டார். ஆனால் இப்போது அவ்வளவு வெள்ளம் வரவேயில்லை”.
செல்லகண்ணு சொன்னார்.
“தாமிரபரணியில் இதுபோன்ற வெள்ளம் வரும் போது தேக்கிவைக்கவும், அதைப் பாதுகாக்கவும் நீர்த்தேக்கம் இல்லை என்பது வேதனையான ஒன்றாக உள்ளது. ஆகவே தற்போது கிடப்பில் கிடக்கும் திட்டங்களை உடனே செயல்படுத்தவேண்டும்”. என்றார்.
“நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தினைப் பொறுத்தவரைத் தாமிரபரணி மட்டும் இல்லையென்றால் பாலைவனம்தான். எனவே எல்லோரும் தாமிரபரணியைக் காப்பாற்ற வேண்டும்; காப்பாற்ற முடியாவிட்டாலும் தாமிரபரணியை மாசுபடுத் தாமல் இருந்தாலே போதும். இது தான் நமது மக்களின் கடமை. இன்றிலிருந்தாவது அதற்காக, சபதம் எடுக்க வேண்டும்.
தாமிரபரணியை நாம் காப்பாற்றுகிறோமா? இந்தத் தாமிரபரணிக்கு நாம் நன்றிக் கடனாக ஏதாவது செய்கிறோமா? கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்”.
தாத்தா சொல்லும் போதே அவர் கண்களில் இருந்து கண்ணிர் வடிந்தது. “சேய். நம்ம நதியை யாரிடமிருந்தெல்லாம் காப்பாற்றுவோம். மணல் கொள்ளையர்களிடமிருந்தா. இல்லை நதியின் அருமை நமக்கு தானே என தெரிந்தும் குப்பைகளை கொட்டும் மக்களிடமிருந்தா? இல்லை. இது எதுவும் தெரியாமல் இருக்கும் அரசியல்வாதியிடமிருந்தா?”
தாத்தா தேம்பி அழ ஆரம்பித்து விட்டார்.
( நதி தொடர்ந்து பயணிக்கும்)


