கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் நடந்த மலர் காவடி விழாவில் ஏராளமான பக்தர்கள் மலர் காவடி எடுத்து மலையை சுற்றி கிரிவலம் வந்தனர்.
கழுகுமலையில் பிரசித்தி பெற்ற குடவரை கோயிலான கழுகாசலமூர்த்தி கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் மலர் காவடி விழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு மலர் காவடி விழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு கழுகாசலமூர்த்தி, வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. காலை 11 மணிக்கு வேளாங்குறிச்சி ஆதினம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், திருக்கயிலாயப் பரம்பரை மெய்கண்ட சந்தானம் பேரூர் ஆதீனம் 25-வது குருமகா சந்நிதானங்கள் சாந்தலிங்க மருதாசல அடிகளார், கோவை கௌமார மடாலயம், தமிழ்நாடு முருக பக்தர்கள் பேரவை மாநில சிறப்பு தலைவர் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், மானாமதுரை ஸ்ரீ மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம் சுவாமி மாதாஜி, சுவாமி ஆத்மானந்தா, கோவில்பட்டி வேதாந்தானந்தா மடம் ஸ்ரீலஸ்ரீ முத்தானந்த சுவாமிகள் சுவாமி சிவராமானந்தா, அன்னபூரணபுரம் ஆஞ்சநேயர் மடாலயம் சுவாமி இராகவானந்தா, பனையூர் மாதாஜி நித்யானந்த ஸரஸ்வதி, சுவாமி மேகானந்தா ஸரஸ்வதி ஆகியோர் அருளுரை வழங்கினர். தொடர்ந்து கோயில் வளாகத்தில் இருந்து மலர் காவடி ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். இதில், குழந்தைகள் முதல் பெரியோர் வரை 1008 பேர் மலர் காவடிகள் எடுத்து மலையை கிரிவலமாக சுற்றி வந்து கோயிலை சேர்ந்தன்.

நண்பகல் 12.30 மணிக்கு கழுகாசலமூர்த்தி, வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அர்ச்சனையும், தொடர்ந்து மலர் காவடியில் கொண்டு வரப்பட்ட பூக்களால் புஷ்பாஞ்சலியும் நடந்தது. இதில் விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், கழுகுமலை மற்றும் சுற்றுவட்டார பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மகேஷ்வர பூஜையை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை முருக பக்தர்கள் பேரவை அறக்கட்டளை நிறுவனத்தில் மற்றும் கழுகாசலமூர்த்தி திருக்கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.



