கே.பாக்யராஜ் (பிறப்பு: சனவரி 7, 1953) ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளன்கோயில் என்னும் ஊரில் பிறந்தவர். பெற்றோர் பெயர் கிருஷ்ணசாமி-அமராவதி அம்மாள் மூன்றாவது மகனாக பிறந்தார். செல்வராஜ், தன்ராஜ் என இரு அண்ணன்கள் உண்டு . தமிழ்த் திரையுலகில், நடிகர், வசன எழுத்தாளர் , திரைக்கதை அமைப்பாளர் , இயக்குனர், சிறப்பு வேடமேற்கும் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பத்திரிகையாளர் எனப் பன்முகம் கொண்ட ஒரு கலைஞர். இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக, 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள் ஆகிய படங்களில் திரைப்படக்கலை பயின்றவர்.
திரையுலக வாழ்க்கை
1977-ஆம் ஆண்டில் இயக்குனர் பாரதிராஜாவின் முதல் படமான 16 வயதினிலேவில் உதவியாளராக, தமது திரை வாழ்க்கையை துவங்கினார். பின் பாரதிராஜாவின் இரண்டாவது படமான கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் உதவி இயக்குனர் மற்றும் கவுண்டமணியுடன் ஒரே ஒரு காட்சியில் தோன்றி நடித்திருந்தார். பாரதிராஜாவின் மூன்றாவது படமான சிகப்பு ரோஜாக்கள் படத்தில் இரண்டு காட்சிகளில் நினைவில் நிற்கும்படியான, உணவு விடுதிப் பணியாளர் வேடம் ஏற்று நடித்தார். இப்படத்திற்கு வசனமும் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது அடுத்த படமான புதிய வார்ப்புகள் படத்தில் பாரதிராஜா, பாக்யராஜை வசனகர்த்தாவாக மட்டுமன்றி, கதாநாயகனாகவே அறிமுகம் செய்தார்.
ஒரு இயக்குனராக தமது முதல் படமாக பாக்யராஜ் உருவாக்கியது சுவர் இல்லாத சித்திரங்கள் (1979). (இடைக்காலத்தில் அவர் ராஜேஷ் கதாநாயகனாக அறிமுகமான கன்னிப்பருவத்திலே படத்தில் வில்லன் வேடம் ஏற்று தனது இருப்பைப் பதிவு செய்திருந்தார்). முதல் படத்தில் சுதாகர் கதாநாயகனாகவும் சுமதி நாயகியாகவும் நடிக்க, ஒரு குணச்சித்திரப் பாத்திரத்தை பாக்யராஜ் ஏற்றிருந்தார். நகைச்சுவையும், சோகமும் சரிபாதியாக அதில் அமைந்திருந்தது.
அடுத்து, சொந்த தயாரிப்பான ஒரு கை ஓசை திரைப்படம் துவங்கி தனது முத்திரையை பதிக்கத் தொடங்கினார்.அஸ்வினி இணைந்து நடித்த இப்படத்தில் அவர் வாய் பேச இயலாத ஊமைக் கதாநாயகனாக மேற்கொண்ட பாத்திரம் இரசிகர்களின் மனம் கவர்ந்தது.
அடுத்து வெளியான மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா ஆகியவை பாக்யராஜின் முத்திரையை முழுமையாகக் கொண்டு வெற்றிப் படங்களாயின. அடுத்து மர்மங்கள் மற்றும் அதிரடி கொண்ட அதேசமயம் தனது முத்திரையுடனும் கூடிய ஒரு படமாக விடியும் வரை காத்திரு என்னும் திரைப்படத்தைப் பாக்யராஜ் இயக்கி நடித்தார். பாக்யராஜ் தனது முத்திரையை முழுமையாகப் பதிந்து வெற்றி ஈட்டிய திரைப்படங்களாக அந்த 7 நாட்கள், தூறல் நின்னு போச்சு போன்றவை கருதப்படுகின்றன. டார்லிங், டார்லிங், டார்லிங் வெற்றிப்படத்தை இயக்கி அதில் நடித்த பூர்ணிமாவை மனைவியாக ஏற்றுக் கொண்டார். பின், 1982 ம் ஆண்டு வெளியான முந்தானை முடிச்சு. ஊர்வசி அறிமுகமான இத்திரைப்படம் சென்னையிலும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் வெள்ளி விழா கொண்டாடியது. இதில் பாக்யராஜ் கையாண்ட சில விஷயங்கள் (முருங்கைக்காய் போன்றவை) இன்றளவும் பேசப்படுகிறது. அதேபோல் சின்ன வீடு, எங்க சின்ன ராசா, இது நம்ம ஆளு போன்ற படங்களுக்கு பெரிய வசூலையும், விருதுகளையும் பெற்றுத்தந்தன.


