தூத்துக்குடி மாவட்டத் தமிழ்வளர்ச்சித் துறை சார்பில் மேல்நிலைப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் 09.01.2024 அன்று காலை 9.00 மணிக்கு தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.
கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் 10.01.2024 அன்று காலை 9.00 மணிக்கு தூத்துக்குடி ஹோலிகிராஸ் ஹோம்சயின்ஸ் கல்லூரியில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பம் மற்றும் விதிமுறைகள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாக அனைத்து மேல்நிலைப் பள்ளிகளுக்கும் மற்றும் திருநெல்வேலி மண்டல இணை இயக்குநர் வாயிலாக அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும்.
போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள மேல்நிலைப் பள்ளியில் 11, 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் தங்கள் பள்ளித் தலைமையாசிரியரையும் கல்லூரி மாணவர்கள் தங்கள் கல்லூரி முதல்வரையும் அணுகி விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து ஒப்பம் பெற்று போட்டி நடைபெறும் நாளன்று காலை 9 மணிக்கு வருகை தந்து போட்டியில் கலந்து கொள்வதற்கான வருகைப் பதிவேட்டில் ஒப்பமிட வேண்டும். போட்டிக்கான தலைப்புகள் போட்டி நாளன்று வழங்கப்படும்.
ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு முதற்பரிசாக ரூபாய் 10,000-மும், இரண்டாம் பரிசாக ரூபாய் 7000-மும், மூன்றாம் பரிசாக ரூபாய் 5000-மும், சான்றிதழ்களும் வழங்கப்படும். போட்டிகளில் முதற் பரிசுப் பெற்றவர்கள் மட்டும் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பப்படுவார்கள். மாநிலப் போட்டித் தொடர்பானத் தகவல் பின்னர் தெரிவிக்கப்படும்.
மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் திருமதி செ.கனகலட்சுமி அவர்கள் போட்டியின் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார். இந்த அரிய வாய்ப்பினை மேல்நிலைப் பள்ளியில் 11, 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.


