தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் பெய்த கனமழையால் ஏராளமான பகுதிகள் பாதிக்கப்பட்டது. குறிப்பாக திருநெல்வேலி திருச்செந்தூர் ரயில் தண்டவாளத்தில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் ஜல்லி கற்கள் அரித்து தண்டவாளங்கள் அந்தரத்தில் தொங்கியது. அந்த சமயம் திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் 800க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சிக்கிக் கொண்டது. நீண்ட போராட்டத்திற்கு பின்னர் பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இதற்கிடையில் சேதமடைந்த ரயில்வே தண்டவாளங்கள் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. முதல் கட்டமாக கடந்த 2 ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் டீசல் எஞ்சின் மூலம் மீட்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மாலை திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி நோக்கி ரயில் பாதையில் மின்சார எஞ்சின் சோதனை ஓட்டம் நடந்தது.
அதன் பின்னர் தண்டவாளத்தின் உறுதித்தன்மை நன்றாக இருப்பதாக கூறி ரயில்வே நிர்வாகத்திற்கு அறிக்கை வழங்கி உள்ளனர். இந்த நிலையில் தென்னக ரயில்வே தலைமை பொறியாளர் நெல்லை திருச்செந்தூர் இடையே ரயில் போக்குவரத்துகான ஆய்வுப்பணிகள் இன்று நடந்தது.
தென்னக ரயில்வே தலைமை பொறியாளர் பென்னி தலைமையிலான குழுவினர் ரயில் என்ஜினில் நெல்லையிலிருந்து திருச்செந்தூர் வரை தண்டவாளத்தின் உறுதி தன்மை, சிக்னல், மின்பாதை ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் வழியாக மின்சார ரயில் எஞ்சின் வந்தது. இதற்காக அருகில் இருந்த பொதுமக்கள் கடந்துசெல்லும் கிராசிங் கேட்டுகள் அனைத்தும் அடைத்து வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து ரயில் எஞ்சின் செய்துங்கநல்லூரை சுமார் 50 கிலோ மீட்டர் வேகத்தில் கடந்து சென்றது. இதை அங்கு பணியில் இருந்த பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.


