தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் பெய்த தொடர் கனமழையால் 100க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் வீடுகள் உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர். அவர்களை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று மத்திய தொல்லியல் துறை சார்பில் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் ஆதிச்சநல்லூரில் உலகத்தரத்தில் அமைக்கப்பட்டு மழை வெள்ளத்தில் சேதமடைந்த சைட் மியூசியத்தினை பார்வையிட வருகை தந்தார். அவர் சைட் மியூசியத்தில் பாதிக்கப்பட்டுள்ள இடங்களையும் பார்வையிட்ட கனிமொழி பாதிப்புகள் குறித்து ஆய்வாளர்களிடம் கேட்டறிந்தார்.
இதற்கிடையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் காலில் கட்டுப்போட்டுக் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். அவரை பார்த்து காலில் என்ன என்று கேட்டார் கனிமொழி. காலில் வெரிக்கோஸிஸ் என்றார் அந்த செய்தியாளர். அதற்கு அப்படி என்றால் நீங்கள் ஓய்வு எடுக்க வேண்டும். ஏன் இப்படி அழைகிறீர்கள் என்று மிகவும் அக்கறையாக கேட்டார். இந்த செயல் அந்த பகுதியில் நின்ற அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அதைத் தொடர்ந்து கால்வாய் கிராமத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டனர். பின்னர் கிளாக்குளம் கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவரிடம் தங்கள் வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளது. ஆனால் அதிகாரிகள் வீடுகள் இடிந்து விழாமல் இருந்தால் அதற்கு அரசு அறிவித்த பணம் கிடைக்காது என்று அதிகாரிகள் கூறியிருந்ததாக பொதுமக்கள் அவரிடம் தெரிவித்தனர். உடனே அதிகாரிகளை அழைத்த கனிமொழி இதுபோல் உள்ள மக்களின் வீடுகளையும் சேதத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தினார். அதைத்தொடர்ந்து கிளாக்குளத்தில் சேதமடைந்த பள்ளிக்கட்டிடத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று பள்ளி மாணவ மாணவிகள் கனிமொழியிடம் மனு அளித்தனர். அதைப் பெற்றுக் கொண்ட கனிமொழி பள்ளி கட்டிடத்தினை நேரில் சென்று பார்வையிட்டார்.
அதைத்தொடர்ந்து தாதன்குளம் மற்றும் கருங்குளம் கிராமத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். பொதுமக்கள் தங்களுக்கு மகளிர் உதவித்தொகை கிடைக்கவில்லை என்றும், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கனிமொழி அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இதற்கிடையில் ஆதிச்சநல்லூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது அவர் பேசுகையில்,
ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறையினர் மிகவும் பாடுபட்டு உருவாக்கப்பட்டது இந்த ஆதிச்சநல்லூர் ஆன் சைட் மியூசியம். இந்த ஆன் சைட் மியூசியம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் இதுபோல் நடைபெறாமல் இருக்கவும், ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அனைத்தையும் பாதுகாப்பாக வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் அனைவரின் எண்ணமாக உள்ளது. மேலும் தமிழக தொல்லியல் துறை சார்பில் சிவகளையில் நடந்த அகழாய்வு பணியில் தோண்டப்பட்ட குழியில் உள்ள மழை நீரையும் அகற்றும் பணிகள் நடந்து வருவதாக அவர் தெரிவித்தார்.


