தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் குறித்து கனிமொழி எம்பி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் மற்றும் மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் வெள்ள பாதிப்புகள் மற்றும் அதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின்கீழ் சமுதாய திறன் பள்ளி துவக்க நிதி மற்றும் இணை மானிய நிதி 10 ஊராட்சிகளுக்கு ரூ.27,07,759/-க்கான நிதியினை பயனாளிகளுக்கு கனிமொழி எம்பி வழங்கினார்.
இதில், மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஓட்டப்பிடாரம் எம்.சி.சண்முகையா, விளாத்திகுளம் ஜி.வி. மார்க்கண்டேயன், திருவைகுண்டம் ஊர்வசி எஸ்.அமிர்தராஜ், மாவட்ட ஊராட்சி தலைவர் அ.பிரம்மசக்தி, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஆர்.ஜஸ்வர்யா, மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


