உலக அமைதி நாள் (கத்தோலிக்க திருச்சபை) என்பது ஒவ்வொரு ஆண்டும் சனவரி மாதம் முதல் நாள் கத்தோலிக்க திருச்சபையால் கொண்டாடப்படுகின்ற சிறப்பு நிகழ்வு ஆகும். உலக மக்கள் அனைவரும் விரும்பி எதிர்பார்க்கின்ற அமைதி உருவாகிட இறைவனை நோக்கி வேண்டுதல் எழுப்பவும், அமைதியின் இன்றியமையாமை பற்றி அனைவரையும் சிந்திக்கத் தூண்டவும் இந்நாள் பயன்படுகிறது. கத்தோலிக்க திருச்சபை கொண்டாடுகின்ற உலக அமைதி நாளைத் திருத்தந்தை ஆறாம் பவுல் 1967ஆம் ஆண்டில் ஏற்படுத்தினார். முதல் உலக அமைதி நாள் 1968, சனவரி முதல் நாள் கொண்டாடப்பட்டது.
உலக அமைதியை வளர்ப்பதற்காக மக்களின் சிந்தனையைத் தூண்டும் வண்ணம் கத்தோலிக்க திருச்சபை ஒவ்வொரு உலக அமைதி நாளுக்கும் ஒரு மையப் பொருளை அறிவிப்பது வழக்கம்.

உலக அமைதியின் தேவையை வலியுறுத்திக் கொண்டாடப்படுகின்ற மற்றொரு நாளும் அனைத்துலக அமைதி நாள் என்னும் பெயரைக் கொண்டுள்ளது. அது ஐக்கிய நாடுகள் பொது அவையின் பிரகடனத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. ஐநாவின் அனைத்துலக அமைதி நாள் முதன்முறையாக 1981ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.


