தூத்துக்குடி மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்துகொண்டு புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
2024-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு நேற்று நள்ளிரவு பிறந்தது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு திருப்பலியும், உலக மக்கள் நன்மை கருதி கூட்டு பிரார்த்தனையும் நடந்தது. தூத்துக்குடி சின்ன கோவில், தூய பனிமய மாதா ஆலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் புத்தாணடு சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.
இதேபோல் தூத்துக்குடி சிவன் கோவில், பெருமாள் கோவில்களில் புத்தாண்டினை முன்னிட்டு அதிகாலை முதலே பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். இதுபோல் மாநகர் பகுதியில் அமைந்துள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
புத்தாண்டினை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோவில், நவதிருப்பதி, புன்னை நகர் வனதிருப்பதி உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து முக்கிய கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. புத்தாண்டை மக்களும் சந்தோஷமாக வரவேற்று வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.


