டிசம்பர் 2023 , 17 ந்தேதி ஆரம்பித்த தாமிரபரணி வெள்ளம், மக்களை திக்கு முக்காட செய்து விட்டது. அதைப்பற்றி கடந்த வாரம் மிகவும் சிறப்பாக வணக்கம் மும்பை செய்தி வெளியிட்டு இருந்தது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி கரையில் தொடர்ந்து 1 வாரமாக மக்களின் இயல்பு நிலையை பாதித்து விட்டது. சிரபுஞ்சியில் ஆண்டுதோறும் பெய்யும் மழையின் அளவு சராசரியாக 115 செண்டி மீட்டர் தான். ஆனால் டிசம்பர் 17, 18 ஆகிய இரு தினங்கள் தென் மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த மழையின் அளவு 116 சென்டி மீட்டர். ஆக. இந்தியாவிலேயே அதிக மழை பொழியும் நதியாக தாமிரபரணி பெயர் எடுத்து விட்டது. அதுவும் ஒரே நாளில். தாமிரபரணியில் அளவுக்கு அதிகமாக ஓடிய தண்ணீர் மக்களையெல்லாம் திண்டாட வைத்து விட்டது.
பாபநாசம், மணிமுத்தாறு, கடனா அணைகளில் இருந்து சுமார் 60,000 கன அடி தண்ணீர் திறக்கப் பட்டது. அதாவது அணைக்கு வரும் தண்ணீர் முழுவதையும் அப்படியே திறந்து விட்டு விட்டனர். குளம், கண்மாய், மழை நீர் என அனைத்தும் தாமிரபரணி ஆற்றில் சேர்த்து லட்சம் கன அடியைத் தாண்டி தாமிரபரணியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 95 சென்டி மீட்டர் மழை பெய்த காயல்பட்டினம் பகுதிக்கு தாமிரபரணி செல்லும் போது, ஆற்றின் நீரளவு 2 லட்சம் கன அடியை தொட்டு இருக்கலாம் என்கிறார்கள் நீர்நிலை வல்லுநர்கள்.

40,000 கன அடியை மட்டுமே கொள்ளவு கொண்ட தாமிரபரணியில் நான்கு மடங்கு அதிக தண்ணீர் சென்றது. அதன் வேகமும் பல மடங்கு அதிகரித்தது. முறப்பநாடு அருகில் தாமிரபரணி தண்ணீர், அருகில் உள்ள படுகையூர், சிவன்கோயிலை தாண்டி, குட்டைக்கால் குளத்தில் போயய் விழுந்தது. பல குளங்களும் தாமிரபரணியும் ஒரே அளவு நீர் அளவில் ஓடிக்கொண்டிருந்தது. கருங்குளம் தண்ணீர் செய்துங்கநல்லூர் தூதுகுழி குளம் வரை வந்தது. தாமிரபரணியின் கடைக்கோடி வந்த போது அதன் வேகமும் பரப்பும் எல்லை தாண்டிச் சென்றது. புதிதாக கட்டப்பட்ட ஏரல் ஆற்றுபாலத்தினை சுக்கு நூறாக உடைத்தெறிந்தது. பாபநாசம் அணையின் நீர்ப் பிடிப்பு பகுதிக ளில் 55 சென்டி மீட்டர் மழை கொட்டியது. நெல்லை மாவட்ட சராசரி மழை அளவே 68 சென்டி மீட்டர் தான். ஓராண்டு மழையை விட ஒரே நாளில் அதிக மழை கொட்டித் தீர்த்தது.
1923 ல் வந்த தாமிரபரணி வெள்ளம் குறித்த ஆங்கில இந்து பத்திரிகையில் கூட, நெல்லை சந்திப்பில் 3 முதல் 5 அடி உயரத்தில் தண்ணீர் சென்றதாகத் தான் குறிப்பிட்டுள்ளது. ஆனால் இப்போது பத்து அடிக்கும் குறைவில்லாமல் தண்ணீர் சென்றது. சுலோச்சன முதலியார் பாலத்தின்கீழே வழக்கமாக ஓடும் தாமிரபரணி சற்றே உயர்ந்து, ஐம்பதடி உயரத்தை தொட்டுச் சென்றது.
திரைப்படங்களில் மட்டுமே பார்த்திருந்த ஹெலிகாப்டர், தங்களுக்கு மேலிருந்து உணவுப் பொட்டலங்களை வீசிய புதிய அனுபவத்தையும் மக்கள் பெற்றனர். ஹெலிகாப்டர் தாழப் பறந்து வந்ததால், காற்றின் வேகத்தில் வீட்டுக் கூரைகள் பிய்ந்துபோகும் சூழல், உயரத்தில் இருந்தபடி உணவுப் பொட்டலங்களைப் போட்டால் அவை விழும்போதே கிழிந்தன. மொட்டை மாடிகளிலும் வெட்டவெளியிலும் இருந்தவர்களே பத்திரமாக உணவுப் பொட்டலத்தைப் பெற வாய்த்தது, என்கிறார் எழுத்தாளர் நாறும் பூ நாதர்.
பெரு வெள்ளத்தில் பெரும் சோகம் என்னவெனில், தன் வாழ்நாள் முழுவதும் சேமித்து வைத்து இருந்த வீட்டுப் பொருட்களை வெள்ளத்தில் காவுக் கொடுத்தது தான். முட்டிக் கொண்டு வரும் கண்ணீரோடு அம்மக்கள் கையைப் பிசைந்து கொண்டு நிற்கிறார்கள். எல்லா சாலைகளிலும் தண்ணீரில் பொதும்பிப் போன பொருட்களை அள்ளிப் போட்டுக் கொண்டு நாலைந்து வாகனங்களாவது செல்வதை தவறாமல் காண முடிந்தது. அதுவும் ஏரல் நகரமே போர்களம் போல காட்சியளித்தது.
தாமிரபரணி நதியில் ஐந்து மாவட்ட மக்களின், குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்த பல நூறு நீரேற்று நிலையங்கள் அழிந்து போய் விட்டது. சிறு, குறு வியாபாரிகள் பேரிழப்பை சந்தித்து இருக்கிறார்கள். ஏரல் வியாபாரிகள், கடைக்குள் இருந்த பொருட்கள் அனைத்தையும் தெருவில் கடைக்கு முன்னே குவித்துப் போட்டனர். மின் அணுச் சாதனங்கள் அனைத்தும் நாசமாகி விட்டன.
நெல்லையில் வெள்ளம் புகுந்த வீடுகளில் அரையடி உயரத்திற்கு சகதி தேங்கி இருந்தது. அதைச் சுத்தம் செய்யவே பல நாள்கள் ஆகி விடும் போல தெரிகிறது. ஆற்றோர வீடுகளில் வசித்த ஏழை எளிய மக்கள், தவணை முறையில் வாங்கிய டி.வி, பிரிட்ஜ், வாஷிங் மிசின் போன்றவை முற்றிலும் நாசமடைந்து போயின. சட்டி பானைகள் கூட மிஞ்சவில்லை. மாற்று உடையும் படுக்கப் பாயும் கூட இல்லாத அளவுக்கு வெள்ளத்தில் அனைத்தையும் இழந்து தவிப்பவர்கள் பலர், அவர்கள் வாழ்க்கையை பூஜ்ஜியத்தில் இருந்தே மீண்டும் தொடங்க வேண்டும். இது அரசுக்கு மட்டுமல்ல தாமிரபரணி கரை மக்களுக்கும் ஒரு சவாலாகும்.

மக்களின் ஒரு அதிஷ்டம் என்னவென்றால் தாமிரபரணி அமைதியாகத்தான் ஓடியது. காற்று அடிக்க வில்லை. மரங்கள் பெரிய அளவில் சாயவில்லை. மின்கம்பங்களும் பெரும்மளவில் சரியவில்லை. எனவே மீட்பு பணி மிகவும் சுலபமாக இருந்தது.
ஆறு மற்றும் குளங்களுக்கு அருகில் இருந்த வயல்வெளிகள் ஆற்று மணலால் மூடிக் கிடக்கின்றன. சாலை கள் பல அரித்துச்செல்லப்பட்டு பல மீட்டருக்கு அப்பால் வயல்களை ஆக்கிரமித்து விட்டன. பல இடங்களில் வயல் வெளிகளில் ஓரடிக்கு மேலாக ஆற்று மணல் மேவிக் கிடக்கிறது. அரசு இயந்திரம் வேகமாக முடுக்கிவிடப்பட்டிருந்தது. மின் கம்பங்கள் உடனடியாக சீர் செய்யப்பட்டன. தூத்துக்குடி மாவட்டத்தில் 90 சதவீத பகுதிகளுக்கு மின் விநியோகம் சீராகி விட்டது. சாலைகள், பாலங்கள் பலவும் சேதமடைந்துள்ளன. சாலைகளை வேகமாக சீரமைத்து வருகிறார்கள். புது வருடங்களில் பெரும்பாலும் அனைத்து இடங்களிலும் போக்குவரத்து துவங்கி விடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த பெரு வெள்ளம் ஏழை, எளிய மக்களையே அதிகம் வஞ்சித்தது. உணவுக்கும் காத்திருக்க வைத்தது. அடுத்து என்ன செய்யப் போகிறோம் என திகைக்க வைத்தது. அந்த வெள்ள நீரில் பல லட்சம் ஏழைகளின் கண்ணீரும் சேர்ந்தே கடலுக்குச் சென்றது.
மூன்று நாள்கள் தண்ணீருக்குள் இருந்த உறவுகளை தேடி கரையில் காத்து கிடந்த மக்கள் ஏராளம். எங்கிருந்தோ வந்த படகோட்டிகள் இனம், இடம் தெரியாத இடத்தில் உயிரை பணயம் வைத்து மக்களை மீட்டுக்கொண்டு வந்த போது ஏற்பட்ட சந்தோசம் அளவிட முடியாதது. ஊருக்குள் சாதி சமய ஏற்பாடு இன்றி மக்கள் வசித்ததும், கிடைத்ததை வைத்து சாப்பிட்டதும் மனிதநேயத்தின் உச்சம். எப்போதும் இல்லாத படியாக சமூக வலைதளங்களும் , ஊடகங்களும் வெள்ளவரலாற்றை விதவிதமாக திகில் ஊட்ட உலகமே தாமிரபரணி கரையை நோக்கியது. மக்களுக்கு உதவ தாங்களால் இயன்ற பொருள்களை சேகரித்துக்கொண்டு ஓடோடி வந்தார்கள். எங்கு திரும்பினாலும் உதவி செய்யும் உள்ளங்கள். உதவிகளை போதும் போதும் என்று மக்கள் சொல்லும் வண்ணம் அள்ளிக்கொடுத்தனர். எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி என வித்தியாசம் பாராமல் பொருள்களை மக்களிடம் அள்ளிக்கொடுத்தனர்.
மனிதநேயம் ஒருபக்கம் இருந்தாலும் கூட தாமிரபரணி கரை மக்கள் கற்றுக் கொண்டது ஏராளம். அவற்றையெல்லாம் நடைமுறைக்கு கொண்டு வர பாடுபடவேண்டும். அதற்கு அரசோடு நாமும் முயற்சி செய்யவேண்டும்.
குறிப்பாக தாமிரபரணியை சுத்தப்படுத்த வேண்டும். சாக்கடையை கலக்க கூடாது. நீர்கருவைகளை அகற்ற வேண்டும். கரைகளை செம்மைபடுத்தி மரங்களை நடவேண்டும் என பல வருட கோரிக்கை உள்ளது. அதுபோலவே நீர் நிலைகளில் கால்வாய், குளங்களை தூர்வாரி கரைகளை சுத்தப்படுத்தி மேம் படுத்த வேண்டும் என பல கோரிக்கை உள்ளது. இதை பல ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். தாமிரபரணி குறித்து என்னுடைய வழக்கு ஒன்று கூட மதுரை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
ஆனால் யாரையும் எதிர்பாராமல் தாமிரபரணி தன்னை தானே சுத்தப்படுத்திக்கொண்டது. தன் வழிப்பாதையை ஆக்கிரமிப்பை அகற்றி ஓட ஆரம்பித்து விட்டது. அமலை செடிகளை அப்புறப்படுத்தி தற்போது தூய்மை நதியாக மாறி விட்டது. 500 கோடி செலவழித்தாலும் அரசு செய்ய முடியாத சுத்தப்படுத்துதலை தாமிரபரணி தனக்கு தானே செய்து கொண்டது. ஆனால் மக்களின் வாழ்வாதரத்தையும் கேள்வி குறியாக்கி விட்டது. எனவே இனிமேலாவது தாமிரபரணியை சாக்கடை கலக்காத நதியாக மாற்றி, அதன் கரைகளை செம்மைப்படுத்தி, பனை மரங்கள் போன்ற மரங்களை நட்டு பாதுகாக்க வேண்டும். ஆற்றுக்குள் உள்ள நீர்கருவைச் செடிகளை முழுவதுமாக அப்புறப்படுத்தவேண்டும்.
தற்போது அனைத்து துறைகளும் வேகமாக வேலை செய்கிறது. குறிப்பாக மின்சாரதுறை, நெடுஞ்சாலைத்துறை, வருவாய் துறை, உள்ளாட்சித்துறை போன்றவை மிகவும் துரிதமாக செயல்பட்டு வருகிறது. ஆனால் நீர்வளத்துறை தனது குளத்தில் உள்ள தண்ணீரை உடைந்த உடைப்பு வழியே கடலுக்கு அனுப்பி விட்டு, வறண்ட பூமியாக உள்ளது. சில இடங்களில் ஊர் மக்களே தங்கள் ஊர் குளங்களை அடைத்துக்கொண்டனர். குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே கால்வாய் கிராமம் திருவரங்கப்பட்டி மக்கள் தங்கள் குளத்தினை தாங்களே அடைத்து தண்ணீரை தேக்கிக்கொண்டனர். ஆனால் மற்றவர்கள் தங்கள் நீர் நிலைகளை கண்டு கொள்ளவே இல்லை. ஒருவருக்கும் ஒரு ஏக்கர் வரை நிலம் வெள்ளத்தில் அழிந்து கிடக்கிறது. அதை கூட பாதுகாக்காமல் மக்கள் கொண்டு வரும் இலவச பொருள்களை வாங்க டோக்கன் வாங்க வரிசையில் நிற்கிறார்கள். இது மிகப்பெரிய கொடுமை. அதாவது ஐந்து நாள்கள் தான் உண்மையான மனிதாபிமானம். அதன் பிறகு நடந்தது அனைத்துமே மக்களை சோம்பேறியாக்கும் இலவச பொருள்கொடுக்கும் வைபவமாக போய் விட்டது. ஏற்கனவே விவசாய தொழிலை அடித்து வெளுத்து நொறுக்கிய நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம் போல மக்கள் இலவசடோக்கனுக்காக சோம்பேறியாக காத்துக்கிடக்கிறார். 1 லட்சம் வரை இழப்பை சந்தித்த மக்கள் அதை நிரந்தரமாக மீட்க என்ன செய்ய வேண்டும் என்று புரிந்து கொள்ளாமல் 500, 1000 என கிராமத்துக்கு வருகின்ற இலவசத்திறக்காக காத்துக்கிடக்கிறார்கள். இது மிகவும் வேதனையளிக்கிறது.

இது ஒரு புறம் இருந்தாலும் விவசாயத்தினை காக்க வேண்டும். காரணம் தாமிரபரணி வெள்ளத்தையும் 100க்கணக்காக குளத்தில் இருந்த தண்ணீரையும் கடலில் விட்டு விட்டோம். தற்போது விவசாயத்துக்கே தண்ணீர் இல்லாத நிலையில் இருக்கிறோம். அதற்கு காரணம் நீர் வளத்துறை போதிய அளவு பணி செய்யவில்லை. இந்த இடத்தில் விவசாயிகளுக்கும் நீர்வளத்துறைக்கும் ஒன்று சொல்லுகிறேன்.
ரயில்வே துறையில் ஆங்கிலேயர் காலத்தில் மழை காலங்களில் கூட ரயில் தண்டவாளத்தினை செப்பனிடவும், சாதாரண காலங்களில் தினமும் ரயில் தண்டவாளங்களை பராமரிக்கவும் ஆட்களை நியமனம் செய்தார்கள். தினமும் பராமரித்தனர் . அந்த பணி தற்போதும் தொடர்ந்து நடக்கிறது. ஆகவே தான் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் கொட்டும் மழையில் ரயிலை நிற்க வைத்து 800 பயணிகளை காப்பாற்றினார்கள்.
இதுபோலவே நீர் வளத்துறையில் ஆங்கிலேயர்கள் காலத்தில் குளங்களையும் கரைகளையும் வருடந்தோறும் பராமரிப்பது, தினமும் கண்காணிக்க லஸ்கர் என்ற பணியாளர்களை நியமித்து இருந்தனர். இவர்கள் அணையில் உள்ள மணல் வாரி ஷட்டரை பராமரித்தல், கிரிஸ்போடுதல் ஒவ்வொரு குளத்து மடைகள் மற்றும் வடிகால்களை பராமரித்தல், உள்பட பணிகளை செவ்வன செய்வார்கள். அவர்களுக்கு உதவியாக விவசாயிகள் செயல்படுவார்கள். ஆனால் தற்போது அந்த பணி செய்யப்படவே இல்லை. அனைத்து அணைகளிலும் , வடிகாலிலும் மடைகளை முறையாக திறந்து விட்டிருந்தால் ஊருக்குள் நிச்சயம் வெள்ளம் புகுந்து இருக்காது. ஆக்கிரமிப்பு செய்து நீர் நிலைகளில் வீடுகளை கட்டாமல் இருந்தால் இதுபோன்ற ஒரு அழிவு ஏற்பட்டு இருக்காது. தற்போது நடைபெற்று இருக்கும் இழப்பை அந்தந்த ஊர் விவசாயிகள் மூலம் செப்பனிடும் திட்டம் இருந்து இருந்தால் இதற்குள் அனைத்து குளத்துக் கரைகளும் திருவரங்கப்பட்டி கிராமத்தினை போல் அடைப்பட்டிருக்கும்.
ஆனால் இது பணி நடைபெறவில்லை. எனவே வருங்காலத்தில் ரயில்வே ஊழியர்களை போல நீர்வளத்துறை ஊழியர்களை செம்மைபடுத்தி அவர்களுக்கு பணியை கண்டிப்புடன் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் இந்த வருடம் விவசாயம் அழிவை சந்தித்தைபோல நிரந்தர அழிவு ஏற்பட்டு விடும்.
வெள்ளக்காலத்தில் முதல் ஐந்து நாள்கள் மட்டுமே பெரும் போராட்டம் மக்கள் மத்தியில் இருந்தது. வெள்ளம் வடிந்தவுடன் வெளியே இருந்து உதவிகள் மிக அதிகமாக வந்தது. இதுவரை இதுபோன்ற உதவிகளை வேறு எங்கும் கிடைத்தது போல தெரியவில்லை. அந்த அளவுக்கு மனிதநேயம் தாமிரபரணி ஆற்றங்கரையில் வெளிப்பட்டது. ஆனால் அது எல்லாம் நிரந்தரம் அல்ல? ஒவ்வொரு வீட்டிலும் 1 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டிருக்கும். எனவே இலவசத்தினைக் கொடுத்து அவர்களை திசை திருப்புவதை விட, அவர்களுக்கு நிரந்தர தீர்வு காண, வட்டியில்லா கடன், மானியக்கடன் கொடுக்க அரசு ஏற்பாடு செய்யவேண்டும்.

ஒரு அழிவு பல முன்னேற்றத்துக்கு இடம் கொடுக்கும் . ஆனால் இலவசம் சோம்பேறி ஆக்கிவிடும். ஏற்கனவே 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் விவசாய கூலி ஆட்கள் இல்லாமல் ஆக்கி விட்டது. தற்போது கூட அழிந்து கிடக்கும் வயல்வெளியை கவனிக்காமல் யார் இலவச பொருள்கொண்டு வருவார் என காத்துக்கிடக்கும் மக்களை நினைக்கும் போது எதிர்காலம் பெரும் இருட்டாகவே உள்ளது. இந்த மனநிலை வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்பை விட கொடுமையானது. மக்களை உழைப்பின்றி சோம்பேறியாக வைக்கும் மனநிலைக்கு கொண்டு வந்து விடும்.
எனவே முன்னேற என்ன வழி என்பதை தாமிரபரணி மண்ணின் மைந்தர்களுக்கு அரசு விதைக்க வேண்டும். இலவசத்தினை கொடுக்காமல், அவர்கள் வாழ்வாதரத்தினை நிரந்தரமாக உயர்த்தவும் , பாதுகாக்கவும் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் தாமிரபரணியை பாதுகாக்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஊருக்குள் இலவசம் கொண்டு வரும் அரசிடம் தயவு செய்து எங்கள் கண்மாயை சீரமைத்து உடனே தாருங்கள் என கேளுங்கள். ஒரு நபருக்கு ஆயிரம் ரூபாய் இலவசம் என லட்சக்கணக்கான பணத்தினை வாரி கொட்டும் அரசியல் வாதிகள் ஒவ்வொரு ஊரில் உள்ள குளங்களையும், சாலைகளையும் சீரமைத்தால் போதும் நிரந்தர தீர்வு கிடைத்து விடும்.
( நதி வற்றாமல் ஓடும்)


