திருசெந்தூர் ரயில் கடந்த 17 ந்தேதி பெய்த தீடீர் மழையால் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதில் 800 பயணிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். உணவின்றி தவித்தனர். குழந்தைகள் பால் இன்றி தவித்தனர். இந்த பயணிகளுக்கு மேலப்புதுக்குடி மக்கள் உணவு வழங்கிய வகைக்கு அந்த ஊர் மக்களுக்கு பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது. அது போலவே ரயில் தண்டவாளம் வழியாக நடந்து வந்தவர்கள் தாதன்குளத்துக்கு வந்து சேர்ந்தனர். அந்த பயணிகளை தாதன்குளம் மக்கள் உபசரித்து உணவு வழங்கி பராமரித்து பின் செய்துங்கநல்லூருக்கு வாகனம் மூலம் அனுப்பி வைத்தார்கள். இதனால் பயணிகள் தாதன்குளம் மக்களை வெகுவாக பாராட்டி சென்றனர். தற்போது பயணிகளுக்கு உணவு வழங்கிய தாதன்குளம் மக்களுக்கு ரயில்வே நிர்வாகம் பரிசு தொகையை வழங்கியுள்ளது. இதற்காக ரயில்வே நிர்வாகத்தினை சேர்ந்த அதிகாரிகள் வணிக ஆய்வாளர் அரவிந்த், வணிக அலுவலர்கள் காந்தி மதி நாதன், ரோகினி ஆகியோர் தாதன்குளம் வருகை தந்தனர். நிதியை ஊர் பெரியவர் பாலகிருஷ்ணன், சுந்தர், மரியராஜ், செல்வி மற்றும் ஊர் பொதுமக்கள் வாங்கி கொண்டனர். அரசு தரும் நிதிக்காகவோ பேருக்காகவோ நாங்கள் உதவி செய்யவில்லை. முழுக்க முழுக்க மனிதாபிமானம் தான் காரணம். எங்கள் மக்களுக்கு ஏதாவது உதவ வேண்டும் என்றால் தாதன்குளத்தில் பாலக்காடு ரயிலை நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், ரயில் நிலையத்தினை புதுப்பித்து ரயில் நிலைய பிளாட்பாரத்தினை நீட்டி எக்ஸ்பிரஸ் ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ரயில்வே அதிகாரி ஆவண செய்வதாக வாக்களித்துள்ளார்.
இதற்கிடையில் அவர்களுக்கு கொடுத்த நிவாரண தொகை யை முதல்வர் நிவாரண நிதிக்காக கனிமொழி எம்.பியிடம் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைத்து கொடுத்தனர். ரயில்வே அதிகாரியிடம் கொடுத்த இரண்டு கோரிக்கையையும் வ்லியுறுத்தினர். கனிமொழி எம்.பி. ஆவண செய்வதாக வாக்களித்தார்கள். நிதியை சுந்தர், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, கண்ணன், ருத்தம்மாள், செல்வி உள்பட ஊர் மக்கள் கொடுத்தனர். கனி மொழி எம்.பியுடன் மாவட்ட ஆட்சி தலைவர் லெட்சுமி பதி, தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உள்பட பலர் இருந்தனர்.


