தென்மாவட்டங்களில் கடந்த வாரம் பெய்த தொடர்மழையால் ஏராளமான குக்கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் இதுபோல் பெரிய மழை வெள்ளத்தினை தற்போது இருக்கும் சந்ததியினர் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அப்படி பெய்த இந்த பேய் மழையால் கிராமத்து மக்கள் தங்களின் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வரும் நிலைகளை பார்க்க முடிகிறது.
வாழ்நாளில் இதுவரை சிறுக சிறுக சேமித்து வைத்திருந்த டிவி முதல் வீட்டில் உபயோகத்திற்கு அனைத்து பொருட்களையும் இழந்து தவித்து வருபவர்களின் நிலையை நினைத்து பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது. ஆனால் அதை களத்தில் சென்று நேரில் பார்த்த போது கண்களில் கண்ணீர் வருகிறது.
இந்த சூழலில் தான் மழை பெய்த நாள் முதல் தற்போது வரை பல்வேறு இடங்களுக்கு சென்று செய்திகள் சேகரிக்க சென்றேன். ஆனால் சில இடங்களில் சில கிராம மக்கள் எனது காதுக்கு கேட்கும்படியே கூறுகிறார்கள். இவ்வளவு நாள் செய்தியாளர்கள், இந்த டிவி காரர்கள் எங்கு சென்றார்கள். இப்போது எதற்கு இங்கு வந்தார்கள் என்று காதுகொடுத்து கேட்க முடியாத அளவிற்கான வார்த்தைகளால் பேசுகிறார்கள்.
ஒன்றை இந்த இடத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன். மழை வெள்ளம் உங்கள் கிராமத்திற்கு மட்டுமோ அல்லது உங்கள் வீட்டுக்கு மட்டுமோ வரவில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 90 சதவீத இடங்கள் இந்த மழையாலும், தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டது. இந்த மழையாலும் வெள்ளத்தாலும் தான் நீங்கள் உங்கள் ஊரை விட்டு வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டது. அதே சூழல் தான் செய்தியாளர்களுக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
தங்கள் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து வீடுகள் சேதமடைந்து விட்டது என்று கூறுகிறீர்கள். ஆனால் எனது வீடு எனது சொந்த கிராமத்தில் 18ம் தேதி பெய்த மழையில் இடிந்து விழுந்தது. பொருட்கள் அனைத்தும் வீட்டிற்குள் சிக்கி கொண்டது. ஆனால் அதை கூட பார்க்கவோ, பொருட்களை பாதுகாப்பாக எடுத்து வைக்கவோ முடியாத சூழலில் நான் மாட்டிக் கொண்டேன். மேலும் தொடர்ந்து மூன்று தினங்கள் கருங்குளம் பகுதியை சூழ்ந்திருந்த வெள்ளத்தால் நான் அந்த மூன்று தினங்களும் வீட்டிற்கு செல்ல முடியாமல் தவித்து வந்தேன். இருந்த இடத்தில் இருந்து கிடைத்த செய்திகளையும், சக செய்தியாளர்கள் கொடுத்த அந்தந்த பகுதி மழை பாதிப்பு செய்திகளையும் தான் பதிவு செய்து வந்தோம்.
மேலும் நான் செய்துங்கநல்லூரில் முத்தாலங்குறிச்சி காமராசு அவர்கள் ஸ்டுடியோவில் பணியாற்றி வரும் கடையில் கூட இந்த மழை நீரால் மின்சாதனங்கள் சேதமடைந்துள்ளது.
நான்கு தினங்களுக்கு பின்னர் தான் ஊரை விட்டு வெளியேச் செல்லும் அளவிற்கு தண்ணீர் குறைந்தது. அதன்பின்னர் தான் ஒவ்வொரு கிராமமாக, நகரமாக பாதிக்கப்பட்ட இடத்திற்கும், கிராமத்திற்கும், விவசாயி மக்களிடமும், வணிகர்களிடமும் சென்று அவர்கள் பிரச்சனைகளை வெளியே கொண்டு வந்தோம். தற்போதும் அப்படியான செய்திகளை வெளியே கொண்டு வந்து கொண்டிருக்கிறோம்.
எனக்கு மட்டும் தான் இந்த பிரச்சனை இல்லை. என்னைப்போல் செய்தியாளராக பணியாற்றி வரும் பலருக்கு இந்த மழை பெரிய பிரச்சனையை தந்துள்ளது. அனைத்து செய்தியாளர்களுமே இந்த இந்த செய்தித்துறையை மட்டுமில்லாமல் அது சார்ந்த ஒரு தொழில் செய்து வருபவர்கள்.
ஸ்ரீவைகுண்டம் தினகரன் செய்தியாளர் ஞானதுரை அண்ணன் வீடு மழை வெள்ளத்தால் சூழ்ந்து வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளது. ஏரல் நியூஸ் தமிழ் செய்தியாளர் மணி அண்ணன் போட்டோ ஸ்டுடியோவில் இருந்த கம்யூட்டர், கேமரா, பிரிண்டர் போன்ற சாதனங்கள் முழுவதுமாக சேதமடைந்துள்ளது.
அதே போல் ஏரல் ஜெயா தொலைக்காட்சி செய்தியாளர் பொன்ராஜ் அண்ணனின் மனைவி மழை வெள்ளம் வந்த அன்று பிரசவ வலியால் அவதியடைந்துள்ளார். அவரது ஊரை வெள்ள நீர் சூழ்ந்து ஊரைவிட்டு வெளியே செல்லமுடியாமல் இடுப்பளவு தண்ணீரில் தென்திருப்பேரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மனைவியை சேர்த்துள்ளார். அவர் குடியிருந்த வீடும் மழை வெள்ளத்தில் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளது.
இப்படி ஒவ்வொரு செய்தியாளரும் இந்த மழையால் மிகவும் கஷ்டப்பட்டுள்ளனர். ஆனால் தங்களைத் தேடி செய்தி எடுக்க வரவில்லை என்று கூறும் பொதுமக்கள், நம்மை போல் தானே செய்தியாளரும், அவரும் இதே போல் மழை வெள்ளத்தில் சிக்கித்தான் இருந்திருப்பார் என்று அறிந்து பேசவில்லை என்பது வருத்தமளிக்கிறது. இருந்தாலும் எங்களது கடமையை நாங்கள் செய்ய தயங்குவதில்லை.


