விடியல் ட்ரஸ்ட் நிறுவனம் விளாத்திகுளம் பகுதியை மையமாகக் கொண்டு சின்னூர் மற்றும் கழுகுமலை பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் பொருட்டு நபார்டு வங்கியுடன் இணைந்து நீர் வடிப் பகுதிகளை அமைப்பது போன்ற பணிகளை செய்து வருகிறது. மேலும் டாடா பவர் நிறுவனத்துடன் இணைந்து (பெரு – நிறுவன சமூகப் பொறுப்பு ) CSR – திட்டம் மூலம் கங்கைகொண்டான் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஐந்து பஞ்சாயத்து கிராமங்களை தேர்வு செய்து மகளிர்க்கு தையல் இந்திரங்களை பொது இடத்தில் நிறுவி அதன் கிராமப்புற பெண்களுக்கு வாழ்வாதாரத்தை உருவாக்குவது, காவேரி மருத்துவமனையுடன் இணைந்து கிராமங்களில் உள்ள அனைத்து கிராம மக்களுக்கும் இலவச மருத்துவ முகாம்களை நடத்துவது மற்றும் கிராம இளைஞர்களுக்கு கணினி கல்வியை கொடுப்பது போன்ற பணிகளை செய்து வருகிறது. சென்ற வாரம் தூத்துக்குடி தென்காசி திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பெய்த தொடர் கன மழையால் அப்பகுதி மக்கள் உணவு மற்றும் உறைவிடம் இல்லாமல் பெரும் துயரத்தை அனுபவித்து வருகிறார்கள். அதனை கருத்தில் கொண்டு விடியல் ட்ரஸ்ட் நிறுவனர் முனைவர் திரு.கே.ஜோதிமணி அவர்கள் பல்வேறு பெரு நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு நிதி உதவி அளிக்குமாறு கேட்டிருந்தார்கள். அதன் பொருட்டு அமேசான் பிரைம் மற்றும் Donatekart உதவி பொருட்கள் வழங்க முன் வந்தன. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மிகவும் பாதிப்படைந்த பகுதியைத் தேர்வு செய்து உதவி பொருட்களை வழங்க விடியல் ட்ரஸ்ட் முடிவு செய்தது. அந்த நிறுவனங்களுடன் இணைந்து விடியல் ட்ரஸ்ட் நிறுவனமும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், ரவை, மசாலா பொருட்கள் மற்றும் போர்வைகள் போன்றவற்றை மக்களுக்கு வழங்க முடிவு செய்தார்கள். விடியல் ட்ரஸ்ட் நிறுவனர் முனைவர் திரு.கே.ஜோதிமணி அவர்கள் தலைமையில் விடியல் டிரஸ்ட் நிறுவனத்தின் சார்பாக திரு.அசோக்குமார், திரு.கார்த்திக், திரு. மார்ஷல், திரு. வின்பர்ட் ஆகிய பணியாளர்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருள்களை வழங்குவதற்காக உதவி செய்தனர். உதவிப் பொருள்கள் கிடைக்கப்பெற்ற அனைத்து வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட மக்களும் தங்களது நன்றியை தெரிவித்து சென்றனர்.


