இராணி வேலுநாச்சியார் பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் சிவகங்கைப் பகுதியின் இராணி மற்றும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய பெண் விடுதலைப் போராட்டத் தலைவி. இவரே இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை ஆவார்.
1730-ஆம் ஆண்டு, இராமநாதபுரம் சமஸ்தானம் மன்னர் செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி – சக்கந்தி முத்தாத்தாளுக்கு ஒரே பெண் மகளாகப் பிறந்தார் வேலுநாச்சியார். ஆண் வாரிசு போல வளர்க்கப்பட்டார். ஆயுதப் பயிற்சி பெற்றார்; பல மொழிகள் கற்றார். 1746-இல் சிவகங்கைச் சீமை மன்னர் முத்துவடுகநாதத்தேவருக்கு மனைவியானார்.
1780- ஆண்டு ஜூன் மாதம் ஒரு படை திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டது. ஹைதர் அலி 5000 குதிரை வீரர்களையும் 5000 போர்வீரர்களையும், பீரங்கிப்படை ஒன்றையும் அனுப்பி வைத்தார். படை வைகை ஆற்றின் வழியில் சோழவந்தானையும், பிறகு சிலைமானையும், அதன் தொடர்ச்சியாக திருப்புவனம், முத்தனேந்தல்,நகரங்களை வென்ற பிறகு, கடைசி யுத்தமாக மானாமதுரை நகரத்தில் போர் பயிற்சி பெறாத மக்களின் துணைகொண்டு அந்நிய பரங்கியர்களை வெற்றிக்கொண்டனர். அதன் பிறகு இராணியின் தோரணையோடு, இராணி வேலுநாச்சியார் சிவிகையின் மூலம் படைவீரர்கள் புடை சூழ விழாக்கோலம் பூண்ட வேலு நாச்சியார், அதன் பிறகு சிவகங்கை சீமையின் முதல் இராணியாக முடிசூட்டப்பட்டார்.
சிவகங்கை மாவட்டம், சூரக்குளம் கிராமத்தில் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வீர மங்கை வேலு நாச்சியார் நினைவு மண்டபம் தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா, 18. சூலை 2014 அன்று தலைமைச் செயலகத்தில், காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார.


