ஐசக் நியூட்டன் (டிசம்பர் 25, 1642 – மார்ச் 20, 1727), ஒரு ஆங்கிலக் கணிதவியலாளரும், அறிவியலாளரும், தத்துவஞானியும் ஆவார். அறிவியல், கணிதம், இயந்திரவியல் துறைகளிலும், ஈர்ப்பு விசை பற்றியும் பெரிதும் ஆய்வுகள் மேற்கொண்டவர் நியூட்டன். இது நாள் வரை வாழ்ந்த அறிவியலாளர்களுள் மிகவும் செல்வாக்கு உள்ளவர்களுள் ஒருவராகவும், அறிவியல் புரட்சியில் முக்கியமான ஒருவராகவும் இவர் இருந்தார்.
1687ல் ஈர்ப்பு சம்பந்தமான விளக்கங்களை உள்ளடக்கிய, Philosophiae Naturalis Principia Mathematica என்னும் நூலை வெளியிட்டார். இவருடைய இயக்க விதிகள் மூலம், மரபார்ந்த விசையியல் (classical mechanics) என்னும் துறைக்கு வித்திட்டார். கோட்பிறைட் வில்ஹெல்ம் லீப்னிஸ் என்பவருடன் சேர்ந்து, வகையீட்டு நுண்கணிதத் துறையின் உருவாக்கத்தில் பங்கு கொண்டார்.
ஐசக் நியூட்டன் 1642 ஆம் ஆண்டு கிரிஸ்துமஸ் தினத்தன்று (டிசம்பர்-25) இங்கிலாந்தில் லிங்கன்ஷயர் கவுண்டியில், கோல்ஸ்டர்வேர்த்துக்கு அருகிலுள்ள வூல்ஸ்தோர்ப் என்னும் ஒரு சிற்றூரில் ஒரு சராசரி விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவர் பிறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே இவரது தந்தையார் இறந்துவிட்டார்.
புவிசார் மற்றும் விண்வெளிசார் இயக்கங்களைக் கட்டுப்படுத்தும் இயற்கை விதிகளை முதன்முதலில் விளக்கியவர் இவரேயாவார். இவர் அறிவியல் புரட்சியுடனும், சூரியமையக் கோட்பாட்டின் வளர்ச்சியுடனும் தொடர்புபட்டிருந்தார். கோள்களின் இயக்கத்துக்கான கெப்ளரின் விதிகள் தொடர்பில் கணிதரீதியான நிறுவல்களை வழங்கியதில் நியூட்டனுக்கும் பங்கு உண்டு. வால்வெள்ளி போன்ற விண்பொருட்களின் சுற்றுப்பாதைகள் நீள்வட்டமாக மட்டுமின்றி, பரவளைவாகவும், அதிபரவளைவாகவும்கூட இருக்கலாம் எனவும் வாதித்து, மேற்படி விதிகளை விரிவாக்கினார்.


