தூத்துக்குடியில் மழை வெள்ளம் வெளியேற்றும் பணிகளை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை அதிகனமழை பெய்தது. வரலாறு காணாத வகையில் பெய்த இந்த மழையால், வறட்சியான பகுதியில் கூட வெள்ளம் சூழ்ந்தது. கோரம்பள்ளம் உள்ளிட்ட குளங்களில் உடைப்பு ஏற்பட்டதால் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
தூத்துக்குடி மாநகரில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அதனை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி முத்தம்மாள் காலனி பகுதியில் தேங்கி நின்ற வெள்ள நீர் எட்டயபுரம் சாலையைக் கடந்து வெளியேறும் பகுதியை அமைச்சர் கீதாஜீவன் இன்று ஆய்வு செய்தார். மேலும் வெள்ளம் தேங்கியுள்ள பி அன்டு டி காலனி பகுதி மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.


