தூத்துக்குடி மாவட்டத்தில் மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணி நிறைவடைந்துள்ளது என தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள சேத பகுதிகளை பார்வையிட தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று தூத்துக்குடி வந்தார். தூத்துக்குடி மாநகர பகுதியில் வெள்ளம் பாதித்த மறவன்மடம், குறிஞ்சி நகர், 3-ம் கேட் பகுதி, அந்தோணியார்புரம், முத்தம்மாள் காலனி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று வெள்ள சேதங்களை பார்வையிட்டார்.
தொடர்ந்து எடுக்கப்பட்டு வரும் மீட்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, எஸ்பி பாலாஜி சரவணன், மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் ஆகியோரிடம் கேட்டறிந்தார். குறிஞ்சி நகரில் வெள்ள சேதங்களை பார்வையிட்ட பின்னர் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி மாநகர பகுதிகளில் தேங்கி உள்ள தண்ணீரை பக்கிள் ஓடை மூலமாக வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தேங்கிய வெள்ள நீர் பம்பிங் செய்யப்பட்டும் வெளியேற்றப்படுகிறது. அதற்கு தேவையான கூடுதல் மோட்டார்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. ரயில்வே கேட் பகுதிக்குள் கூடுதல் தண்ணீர் தேங்கி உள்ளது. அதனை வெளியேற்றும் பணிகளும் நடந்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளம், மின்சாரம் தாக்கி, வீடு இடிந்து என 22 பேர் பலியாகி உள்ளனர். நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் 40 முதல் 55 சென்டி மீட்டர் வரை மழை பெய்துள்ளது. அதன் மூலம் 150 டி.எம்.சி. தண்ணீர் வந்துள்ளது. இது மணிமுத்தாறு, பாபநாசம் அணைகளின் கொள்ளளவை விட 10 மடங்கு அதிகமாகும். தூத்துக்குடி மாவட்டத்தில் வாறுகால்கள் முறையாக தூர்வாரப்பட்டு உள்ளது. தூத்துக்குடியில் ரூ.200 கோடியில் வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
வரலாறு காணாத வகையில் பெய்த மழை காரணமாகவே இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இழப்பீடு வழங்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. பயிர்கள் கணக்கிடும் பணியும் நடந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் மீட்பு பணிகள் முடிந்துள்ளது. எனினும் மாநகர பகுதிகளில் தண்ணீர் முழுமையாக வடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


