தெற்கு கோனார்கோட்டை தொடக்கப்பள்ளியில் மகாகவி பாரதியின் பிறந்தநாள் விழாவில் பாரதி வேடம் புணைந்த மாணவர்கள் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திட உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள தெற்குகோனார் கோட்டை தமிழ் பாப்திஸ்து துவக்கப் பள்ளி மாணவர்கள் 30க்கும் மேற்பட்டோர் மகாகவி பாரதியின் வேடம் புணைந்து பாரதியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பாரதி கண்ட கனவை நிறைவேற்றிடவும், குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திடவும், அனைவருக்கும் கட்டாய கல்வி கிடைப்பதை உறுதி செய்திடவும், பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் எண்ணத்தை வளர்த்திடவும், தேசபக்தி தேசப்பற்றை வளர்த்திடவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
பின்னர் இளம் பாரதிகள் ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக சென்று கோஷங்களை எழுப்பினர். பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.தொடர்ந்து மாணவர்கள் எட்டயபுரம் சென்று பாரதி இல்லத்தை பார்வையிட்டனர். பள்ளியில் நடந்த விழாவிற்கு வட்டார கல்வி அலுவலர் கணேசன் தலைமை வகித்தார். பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்து முருகன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் சிதம்பரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் இராஜையா அனைவரையும் வரவேற்றார்.
மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மேரி டயானா ஜெயந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாரதியின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து சிறப்புரையாற்றினார். இதில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.ஆசிரியை ஜெயராணி நன்றி கூறினார்.


