தூத்துக்குடி மாவட்டத்தில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் உரிமத்தை புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்து உள்ளார்.
இது குறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “தூத்துக்குடி மாவட்டத்தில் படைக்கலச் சட்டத்தின் கீழ் தீப்பெட்டித் தொழிற்சாலைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டு உள்ளது. இம்மாதம் 31-ந்தேதியுடன் உரிமம் முடிவடையும் தொழிற்சாலைகள், உரிய படிவங்களைச் சமர்ப்பித்து உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டும்.
தீப்பெட்டி தொழிற்சாலை உரிமதாரர்கள், உரிமம் புதுப்பிக்கும் மனுவுடன் கடந்த 12 மாதங்களுக்குரிய மாத வாரியான தீப்பெட்டி உற்பத்தி, கந்தகம், குளோரைடு வரவு செலவு விவரப்பட்டியல் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், விண்ணப்பம் அனுப்புவதற்கு முன்பு 30 நாட்களுக்கு தேவையான ரசாயனப் பொருட்களை ஒரு தடவை அளவுக்கு மிகாமல் இருப்பு வைத்துக் கொண்டு குறிப்பிட்ட கால வரம்பிற்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
2024-ம் ஆண்டுக்கான உரிமம் புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை அதற்கான உரிமக் கட்டணத்தைச் செலுத்தி, செலுத்து சீட்டின் அசலினை புதுப்பித்தலுக்கான விண்ணப்பத்துடன் இணைத்து 31.12.23-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகு ஜன., 1 முதல், உரிமக் கட்டணத்துடன் தாமதக் கட்டணம் ரூ.2 ஆயிரம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். அதோடு, தாமதத்துக்கான தகுந்த விளக்கத்தை உரிமதாரர் தெரிவித்து இருக்க வேண்டும். தாமதக் கட்டணத்துடன் மனுச் செய்து கொள்ள வேண்டிய கடைசி நாள் 31.01.2024 ஆகும். அதன் பிறகு எக்காரணத்தைக் கொண்டும் உரிமம் புதுப்பிக்கக் கோரும் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
உரிமம் புதுப்பித்தலுக்கான விண்ணப்பத்தில் ரூ.2-க்கான முத்திரை வில்லை ஒட்டப்பட்டிருக்க வேண்டும். உரிமம் புதுப்பித்தல் கட்டணம் 5 ஆண்டுகளுக்கு படிவம் 2 மற்றும் 8-க்கு ரூ.5 ஆயிரம், படிவம் 9-க்கு ரூ.10 ஆயிரம் ஆகும். இந்த கட்டணத்தை இணையதளத்தில் இ-செலான் மூலம் பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் உரிய கணக்குத் தலைப்பில் செலுத்த வேண்டும். மேலும் உரிய விதிமுறைகள் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.


