எம். எஸ். சுப்புலட்சுமி என்று பரவலாக அறியப்படும் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி (செப்டம்பர் 16, 1916 – திசம்பர் 11, 2004) ஒரு புகழ்பெற்ற கருநாடக இசைப் பாடகியாவார். 1998 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, வங்காள மொழி, இந்தி, சமஸ்கிருதம், குசராத்தி ஆகிய பல மொழிகளில் இவர் பாடியுள்ளார். இவர் உலகின் பல நாடுகளுக்கும் பண்பாட்டுத் தூதுவராகச் சென்று பல நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். மேலும் ஐக்கிய நாடுகள் அவையில் அரங்கேற்றத்தை நிகழ்த்திய முதல் இந்தியர் ஆவார்.1966 ஆம் ஆண்டில் இந்த அரங்கேற்றத்தினை நிகழ்த்தினார். இவர் இசையரசி என்றும் இசைப் பேரரசி என்றும் இசைக்குயில் என்றும் இசை ராணி என்றும் அழைக்கப்படுகிறார்.
எம். எஸ். சுப்புலட்சுமி 1916 செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி அன்று இசைக்கலைஞர் மதுரை சண்முகவடிவு அம்மாளுக்கும்,வழக்கறிஞர் சுப்பிரமணிய ஐயருக்கும் பிறந்தார்.இவரது 10-ஆவது அகவையில் தந்தை இறந்து விட்டார். சுப்புலட்சுமி தம் சகோதரர் சக்திவேல், சகோதரி வடிவாம்பாள் ஆகியோருடன் இசை தொடர்பான சூழலில் வளர்ந்தார். இவரது தாயார் சண்முகவடிவு போன்றே வடிவாம்பாள் வீணை மீட்டுவதில் ஆர்வம் மிக்கவர். சக்திவேலுக்கு மிருதங்கத்தில் ஈடுபாடு அதிகம். ஆயினும் அவர்கள் இருவரும் இளவயதிலேயே காலமாகி விட்டனர். சுப்புலட்சுமியின் பாட்டியார் அக்கம்மாள் ஒரு வயலின் கலைஞர்.
இந்தியா இந்த தலைமுறையில் ஓர் மாபெரும் கலைஞரை உருவாக்கியுள்ளது என்பதில் நீங்கள் பெருமிதம் கொள்ளலாம்” என எம். எஸ். சுப்புலட்சுமியைப் பற்றி சரோஜினி நாயுடு ஒருமுறை கூறினார்.


