மரியாவின் அமல உற்பவ விழா என்பது, இயேசுவின் தாய் மரியா தனது தாயின் வயிற்றில் பாவமின்றி கருவானதைக் கொண்டாடும் விழா ஆகும். மரியா பிறப்புநிலைப் பாவம் இன்றி பிறந்தார் என்னும் கருத்தை மையப்படுத்தும் விழாவாக அமைந்துள்ள இது, கத்தோலிக்க திருச்சபையில் டிசம்பர் 8ந்தேதி சிறப்பிக்கப்படுகிறது.
பொதுவான கிறிஸ்தவ நம்பிக்கையின்படி, ஆதாமினால் தோன்றிய பாவம் மரபுவழியாகத் தொடர்ந்து உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையோடும் இணைந்து பிறக்கிறது. இது சென்மப் பாவம் அல்லது பிறப்புநிலைப் பாவம் என்று அழைக்கப்படுகிறது. இப்பாவம் மனிதரை கடவுளின் அருள் நிலையில் இருந்து பிரித்து, உலகின் தீய நாட்டங்களுக்கு அடிமை ஆக்குகிறது.
தந்தையாம் கடவுள், உலக மீட்பரின் தாயாகுமாறு மரியாவை தொடக்கம் முதலே தெரிந்துகொண்டார். எனவே, மரியாவுக்கு மிகுதியான அருளைப் பொழிந்து, பாவ மாசற்ற நிலையில் தாயின் வயிற்றில் கருவாக உருவாகச் செய்தார். இதுவே, மரியாவின் அமல உற்பவம் என்று அழைக்கப்படுகிறது. மீட்பரின் தாயானதால், மீட்பின் பேறுபலன்கள் மரியாவுக்கு முன்னதாகவே வழங்கப்பட்டன.


