கடந்த ஒரு மாத காலமாக பருவமழை அவ்வப்போது பெய்து வருகிறது. இதன் காரணமாக திருநெல்வேலி மாவட்டப் பகுதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலா அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல், அரியநாயகிபுரம் தாமிரபரணி அணைக்கட்டிலிருந்து தாமிரபரணி ஆற்றில் 5340 கன அடி கொள்ளளவு நீர் இன்று திறந்து விடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் உள்ள மிக நீளமான சுமார் 4000 அடி நீளம் கொண்ட தடுப்பணையான மருதூர் அணைக்கட்டு மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுகளில் அதிக அளவு நீர்வரத்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும் படியும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லெட்சுமிபதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மேலும், தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் இறங்காதவாறு கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் மூலம் கண்காணித்திட ஸ்ரீவைகுண்டம், ஏரல் மற்றும் திருச்செந்தூர் வட்டாட்சியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


