புனித பிரான்சிஸ் சவேரியார் ஸ்பெயின் நாட்டில் ஏப்ரல் 7, 1506 அன்று புகழ்மிக்க சவேரியார் அரண்மனையில் பிறந்தார். தன்னுடைய ஒன்பதாம் வயதில் தந்தையை இழந்த இவர் தாயின் பராமரிப்பிலேயே அதே அரண்மனையில் படித்து வந்தார். அப்போதே எசுப்பானியம் மற்றும் பல மொழிகளில் புலமை பெற்றிருந்தார். இந்தியாவில் கிறித்துவத்தின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றினார்.
1525ஆம் வருடம் கல்லூரி படிப்பிற்காகப் பாரிஸ் சென்றார். அதன் பின்னர் 11 வருடங்கள் பாரிசிலே இருந்த புனித சவேரியார், அங்குள்ள புனித பற்பே கல்லூரியில் தத்துவம் மற்றும் கலைத்துறையில் முதுகலை பட்டம் பெற்று, 1530 முதல் 1534 வரை விரிவுரையாளராகப் பணியாற்றினார். மீண்டும் 1534முதல் 1536 வரை இறையியலைப் பயின்றார். அப்போது புனித சவேரியாருக்கு புனித இலொயோலா இஞ்ஞாசியார் நண்பரானார்,”உலகையே ஆதாயமாக்கினாலும் மனிதர் தம் ஆன்மாவை இழப்பாராகில் அதனால் அவருக்கு வரும் பயன் என்ன” என்ற இறைமகன் இயேசுவின் வார்த்தையை இஞ்ஞாசியார்,சவேரியாருக்கு எடுத்துரைக்க சவேரியார் அவ்வார்த்தையின் ஆழத்தை உணர்ந்து இறைவனோடு அதிகமாய் இணைந்திருந்தார். பின்னர் இவர்கள் இயேசு சபையைத் தொடங்கினர். இதில் மீண்டும் நான்கு நண்பர்கள் சேர்ந்து இறைபணியை செய்ய முடிவு செய்தனர்.
இதை தொடர்ந்து 1537 ஆம் வருடம் ஜூன் மாதம் 24 ஆம் நாள் குருவாக திருநிலை பெற்று தன் முதல் திருப்பலியை செப்டம்பர் 30ஆம் நாள் நிறைவேற்றினார். பின்னர் அவரும் அவருடைய நண்பர்களும் திருத்தந்தை மூன்றாம் பவுலைச்சந்தித்து இறைப்பணி செய்வதற்கான தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தனர். அதே வேளையில் போர்த்துகீசிய மன்னன் தனக்குக் கீழ் இருந்த நாடுகளுக்குக் குருக்களைத் தந்துதவும்படி வேண்டியதால், சவேரியார் இந்தியா மற்றும் போர்த்துகீசிய காலனி நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார்.
புனித சவேரியார் 1540இல் உரோமில் இருந்து புறப்பட்டு லிஸ்பான் செல்கிறார். அங்கு ஒரு வருடம் இறைபணியை செய்த பின்னர் இந்தியாவிற்கு வரும் வழியில் மொசாம்பிக்கில் ஒரு வருடம் இறைபணியை செய்துவிட்டு 1542 மே மாதம் 6ஆம் நாள் கோவாவை வந்தடைந்தார். முதல் நான்கு மாதங்கள் கோவாவிலும் பின்னர் தென் இந்தியாவின் குறிப்பாக தமிழகக் கடற்கரைக் கிராமங்களில் தனது இறைப்பணியைச் செய்துவந்தார்.


