தூத்துக்குடியில் நகைக் கடையின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி பங்களா தெருவைச் சேர்ந்தவர் கந்தன் மகன் சிவசுப்பிரமணியன் (45). இவர் தெற்கு சம்பந்த மூர்த்தி தெருவில் நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையை பூட்டிவிட்டுச் சென்றுள்ளார். இன்று காலை கடையை திறக்க வந்தபோது ஷட்டரில் பூட்டுக்கள் உடைக்கப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மத்திய பாகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஷோபியா ஜென்சி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கடையில் இருந்த 65 கிராம் தங்கம் மற்றும் 1 கிலோ வெள்ளி நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது தெரியந்தது.
இதுகுறித்து சிவசுப்பிரமணியன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர். சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளில் கொள்ளை அதிகாலை 2 மணி முதல் 4 மணி வரை நடந்துள்ளது தெரியவந்தது. கொள்ளையில் ஈடுபட்டவர்கள் யார்? வடமாநில கொள்ளையர்களின் கைவரிசையா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


