உதித் நாராயண் (Udit Narayan பிறப்பு: டிசம்பர் 1, 1955) ஓர் இந்தியப் பின்னணி பாடகர் ஆவார். இவரது பாடல்கள் முக்கியமாக இந்தி மொழியின் பாலிவுட் திரைப்படங்களில் இடம்பெற்றுள்ளன. தெலுங்கு, தமிழ், கன்னடம், ஒடியா, நேபாளி, போஜ்புரி, பெங்காலி உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் பாடியுள்ளார். அவர் 4 தேசிய திரைப்பட விருதுகளை வென்றுள்ளார் மற்றும் 5 பிலிம்பேர் விருதுகளைப் பெற்றுள்ளதுடன் அந்த விருதுக்கு 20 முறை பரிந்துரைக்கப்ப்ட்டதுடன் பல விருதுகளையும் பெற்றுள்ளார். 1980 இல் பாலிவுட் பின்னணியில் அறிமுகமான பிறகும் அவர் சிறப்பான இடத்தினைப் பெற நிறைய போராட வேண்டியிருந்தது. 1980 ஆம் ஆண்டில் யுனீஸ்-பீஸ் திரைப்படத்தில் பாலிவுட் பின்னணிப் பாடகர்களான முகமது ரஃபி மற்றும் 1980 களில் கிஷோர் குமார் ஆகியோருடன் அவர் பாடினார். அவர் இறுதியாக 1988 ஆம் ஆண்டில் அமீர் கான் மற்றும் ஜூஹி சாவ்லா நடித்த கயாமத் சே கயாமத் தக் திரைப்படத்தில் தனது சிறப்பான திறனை வெளிப்படுத்தினார், அவரது பாடல் “பாப்பா கெஹ்தே ஹைன்” அவரது குறிப்பிடத்தக்க பாடலாக அமைந்தது, இது 1980 களில் அவரது முதல் பிலிம்பேர் விருதைப் பெற்றது, மேலும் அவர் பாலிவுட் பின்னணி பாடலில் தன்னை முன்னணி பாடகராக நிலைநிறுத்திக் கொண்டார். பிலிம்பேர் விருதுகளின் வரலாற்றில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக விருது பெற்ற (1980 கள், 1990 கள் மற்றும் 2000 கள்) வென்ற ஒரே ஆண் பாடகர் இவர் ஆவார்.
ஆரம்ப கால வாழ்க்கை
உதித் நாராயண் 1955 இல் நேபாளத்தினைச் சேர்ந்த தந்தை ஹரேகிருஷ்ணா ஜா மற்றும் இந்தியாவில் பிறந்த தாய் புவனேஸ்வரி ஜா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். 2009 ஆம் ஆண்டில், உதித் நாராயண் இந்தியாவின் குடியுரிமை விருதான ரவமான பத்மசிறீ விருதை வழங்கியபோது, அவர் நேபாளத்தில் பிறந்ததாகக் கூறி அவரது இந்திய குடியுரிமையைப் பற்றி கேள்விகள் எழுந்தன. இருப்பினும், உதித் நாராயணே இந்த அறிக்கைகளை “முற்றிலும் தவறானது” என்று மறுத்தார். மேலும் அவர் பீகார் மாநிலத்தின் சுபால் மாவட்டத்தின் பைஸி கிராமத்தில் தனது தாய்வழி தாத்தா பாட்டி வீட்டில் பிறந்ததாகக் கூறினார். பத்மஸ்ரீவை அவர் ஏற்றுக்கொண்டது நேபாளத்தில் தனது விமர்சனத்திற்கு வழிவகுத்தபோது, நேபாள நாளிதழான காந்திபூரிடம் அவர் “நேபாளத்தைச் சேர்ந்தவர், ஆனால் எனது தாயின் வீடு பீகாரில் இருந்தது” என்று கூறினார்.


