அருள்மிகு பெரும்படை சாஸ்தாவின் திருத்தலம் தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டத்தில் உள்ளது. ஆறுமுகமங்கலம் குளத்திற்கும் பேய்க்குளத்திற்கும் நடுவில் அமைந்துள்ளது. இந்தக்கோயில் நீர் வளமும், வாழைத் தோட்டமும், பசுமை நிறைந்த வயல்வெளிகளுக்கும் இடையில் அமைந்திருப்பது மிகச்சிறப்பாகும். மேலும் இத்திருக்கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை பலச்சான்றுகள் எடுத்துரைக்கிறது. இத்திருக்கோவில் இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து சாஸ்தா கோவில்களுக்கு மூலக்கோவில் என்பதையும் வரலாறு கூறுகிறது.
குறிப்பாக இந்த சாஸ்தாவுக்கு பாத்தியப்பட்டவர்கள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டுமல்லாமல் வேறு மாவட்டங்களில் தொழில் செய்து வருபவர்கள். இவர்களும், சுற்று வட்டார மக்களும் பங்குனி உத்திர தினத்தன்று தங்களது உறவினர்களுடன் நேரில் வந்து அருள்மிகு பெரும்படை சாஸ்தாவை வணங்கி வேண்டிய வரங்களை பெற்று மகிழ்கின்றனர்.
இவரை தரிசிப்பதன் மூலம் சகல சௌபாக்கியங்களும் மக்களுக்கு கிடைக்கிறது. இத்திருக்கோவிலுக்கு கற்றவர் கற்காதவர், செல்வந்தர், ஏழை பலதரப்பட்ட ஜாதி, மத வேறுபாடின்றி அனைவரும் பெரும்படை சாஸ்தாவை வணங்கிட, துன்பங்கள் நீங்கி இன்பம் அடைகிறார்கள்.


