தூத்துக்குடியில் கட்டப்படாத வீட்டு மனைகளில் தண்ணீர் தேங்கினால் இடத்தின் உரிமையாளரிடம் பணம் வசூலித்து தண்ணீரை அப்புறப்படுத்த மாந்கராட்சி நடவடிக்கை எடுக்கும் என்று மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் துணை ஆணையர் ராஜாராம், இன்ஜினியர் பாஸ்கரன், துணை பொறியாளர் சரவணன், நகர் நல அலுவலர் சுமதி, நகர அமைப்பு அலுவலர் ரங்கநாதன், மண்டல ஆணையர்கள் ராமச்சந்திரன், சந்திரமோகன் தனசிங் சேகர், மண்டல தலைவர்கள் கலைச்செல்வி, திலகராஜ், நிர்மல் ராஜ், அன்னலட்சுமி, கோட்டு ராஜா, அதிமுக கொறடா வழக்கறிஞர் மந்திரமூர்த்தி, காங்கிரஸ் கொறடா சந்திரபோஸ் உட்பட மாநகராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தை தொடங்கி வைத்து மேயர் ஜெகன் பெரியசாமி பேசியதாவது தூத்துக்குடி மாநகரத்தில் கடந்த ஓராண்டுகளாக பல்வேறு திட்டப் பணிகளை நிறைவேற்றி வருகிறோம். மழைக் காலங்களில் மழை நீர் தூத்துக்குடி நகரில் எங்கும் தேங்காத அளவிற்கு தண்ணீரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும், ரோடுகளை சீரமைக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்த்து உத்திரவிட்டதன் பெயரில் கடந்த ஆண்டு முதல் சாலை பணிகள் வேகமாக நடந்து பாதாள சாக்கடை பணிகளும் நிறைவு பெற்று வருகின்றது.
தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதை மோட்டார்கள் மூலம் அப்புறப்படுத்த பணிகள் நடந்து வருகிறது. மேலும், ராஜகோபால் நகரில் ஒரு சில வீடுகள் மட்டும் கட்டப்பட்டுள்ளன. பல வீடுகள் கட்டுமான பணி நடைபெறாதால் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் அந்த வீட்டின் உரிமையாளர்களை கண்டுபிடித்து மணல் அடிக்க வற்புறுத்தி வருகிறோம். இல்லை என்றால் மாநகராட்சி மூலம் அந்த பணிகள் செய்யப்பட்டு அவர்களிடம் பணம் வசூலிக்கப்படும். தற்போது தூத்துக்குடியில் 95 சதவீதம் பாதாள சாக்கடை, சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளது இவ்வாறு மேயர் பேசினார்.
இதை தொடர்ந்து தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் அதிமுக கொறடா வழக்கறிஞர் மந்திரமூர்த்தி பேசியதாவது, தூத்துக்குடி மழைக்காலமாக இருப்பதால் பட்டா இடங்களில் அதிக அளவு தண்ணீர் தேங்கி உள்ளது இதனால் அங்கு கொசு உற்பத்தி ஆகி பல்வேறு நோய்களை பரப்பு வருகிறது. இதனால் அந்த பட்டா இடங்களில் மாநகராட்சி சட்ட விதிகளின்படி நிர்வாகம் அங்கு தண்ணீர் தேங்காத அளவுக்கு மணல்களை அடிக்க வேண்டும். இதற்கான தொகையை அந்த உரிமையாளர்களிடம் வசூல் செய்து கொள்ளலாம்.
மேலும், டெங்கு காய்ச்சல், ஒருவித மர்ம காய்ச்சல் தூத்துக்குடியில் வேகமாக பரவி வருகிறது. இதனால் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் நோயாளிகள் வருகை அதிகரித்துள்ளது. இதை தடுப்பதற்கு கொசு மருந்து அடித்து ப்ளீச்சிங் பவுடர்களை தெருத் தெருவாக போட வேண்டும். மேலும், தூத்துக்குடி திருச்செந்தூர் பிரதான சாலையான முத்தையாபுரம் முள்ளக்காடு வரை ரோடுகளில் 100க்கும் மேற்பட்ட மாடுகள் படுத்து கிடப்பதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இந்த மாடுகளை அப்புறப்படுத்த கோரி பல தடவை பேசியும் இதுவரையும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் நாய் தொல்லைகளும் அதிக அளவில் உள்ளது. இதனால் நாய்களை பிடித்து ஊசிகள் போட வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு பதில் அளித்து மேயர் ஜெகன் பெரியசாமி பேசும்போது, ஆணையர் அவர்கள் மழை காலம் முடியும் வரை சுகாதார பணியாளர்களை அதிக அளவு வேலைகள் வாங்க வேண்டும். தண்ணீர் தேங்காத அளவுக்கு உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலை தடுப்பதற்கு தினசரி சுகாதாரத்துறை மூலம் 15க்கு மேற்பட்ட முகாம்கள் நடத்தி வருகின்றன. இது நாள் வரை டெங்கு பாதிக்கப்பட்டதாக ஒருவர் கூட பதிவு செய்யவில்லை. இருந்தாலும் தொடர்ந்து கண்காணிக்கப்படும் மாடுகளை பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்.
கூட்டத்தில் இந்திய முஸ்லிம் லீக் கட்சி மாமன்ற உறுப்பினர் மும்தாஜ் பேசியதாவது, எனது வார்டு பங்களா தெருவில் பாதாளச்சாக்கடை அமைத்து ரோடுகள் வசதி செய்து கொடுத்ததற்கு மிகவும் நன்றி. மேலும், தூத்துக்குடியில் மழைக்காலமாக இருப்பதால் எனது வார்டு முழுவதும் ஆங்காங்கே குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது. அதை அவ்வப்போது உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மீ.கா தெருவில் ரோடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பாதசாரிகள் நடந்து கூட செல்ல முடியவில்லை. இதனால் அந்த ரோடு உடனடியாக புதுப்பித்து தர வேண்டும் என மேற்கண்டவாறு அவர் பேசினார்
கூட்டத்தில் பேசிய அனைத்து கவுன்சிலர்களும் கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க கோரியும் ப்ளீச்சிங் பவுடர் தெருவாக போட வேண்டும் என்று கூறியும் பேசினார்கள்.


