கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, பரிசுகள் வழங்கி பாராட்டினார்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களின் பிறந்த நாளன்று நடத்தப்பட்ட மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, இன்று (27.11.2023) பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தெரிவித்ததாவது: தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-2022 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பு எண். 17, நாள்: 31.08.2021இன்படி “நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட அறிவிப்பு வெளியிடப்பட்டது.
2023-2024ஆம் நிதியாண்டில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளையொட்டி 09.10.2023 அன்றும், தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளையொட்டி 10.10.2023 அன்றும்; அண்ணல் காந்தியடிகள் பிறந்தநாளையொட்டி 30.10.2023 அன்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டன. அப்போட்டிகளில் வெற்றி பெற்ற 24 மாணவர்களுக்கு ரூ72,000/- பரிசுத்தொகைக்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் இன்று வழங்கப்பட்டு மாணவர்களின் திறன் குறித்து கலந்துரையாடப்பட்டது.
மேலும், பள்ளிகளில் மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் நூலக வசதி குறித்தும், மாணவர்களின் எதிர்கால குறிக்கோள் குறித்தும் கேட்டறிந்து மாணவ, மாணவியர்கள் ஊக்கப்படுத்தப்பட்டனர் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் செ.கனகலட்சுமி மற்றும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.


