35 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மிதி அச்சு இயந்திரம் பயன்பாட்டில் இருந்தது. திருமண பத்திரிகைகள், புதுமனைப் புகுவிழா, பில் ரசீதுகள், பேருந்து டிக்கெட் என இந்த இயந்திரத்தை நம்பியிருந்த வாழ்வு கடந்த தலைமுறையைச் சேர்ந்தது.
முட்டி வலிக்க மிதித்து மிதித்து உழைத்துச் சேர்த்து ஒரு மோட்டார் வாங்கி விட்டால் போதும், மிதிக்காமல் தொழில் செய்யலாம் என்ற கனவு அச்சாபீஸ்காரரின் கனவாக இருக்கும்.
என் அம்மாவின் அண்ணனும், தம்பியும் அச்சகத் தொழிலாளிகளாக இருந்து அச்சக முதலாளிகளாக இருந்தவர்கள். விபரம் தெரிந்து நான் முதன் முதலில் வேலை செய்தது என் தாய் மாமனின் மோகன் பிரிண்டர்ஸ் அச்சகத்தில்.
அச்சடிக்கப்பட்ட பில் புக் ரசீதுகளை அடுக்கி வைக்கும் வேலை செய்ததற்காக என் பெரிய மாமன் கொடுத்த நாலணா தான் நான் வாங்கிய முதல் கூலிப் பணம்.
புதிய பத்திரிகைக்கு எழுத்துகள் கோர்ப்பது, அச்சுப் பணி முடிந்த பிறகு எழுத்துகளை பிரித்து அதற்குரிய இடத்தில் சேர்ப்பது, ப்ரூஃப் பார்ப்பது, மை தடவுவது, வெவ்வேறு வண்ணங்களைக் கலந்து புதிய நிறத்தை உருவாக்குவது, மை துடைப்பது, ட்ரெட் மில்லில் காகிதம் பொருந்தும்படி ஊக்குகள் குத்தி ஒழுங்கு பார்ப்பது, பஞ்சிங் மெஷின், நெம்பர் மெஷின், பைண்டிங், குத்தூசி, கலிக்கோ, பசை… இந்த மிதி அச்சு இயந்திர காலத்தின் அச்சக சூழலில் உள்ள எல்லா வேலைகளையும் 15 வயதுக்குள் செய்து பார்த்திருக்கிறேன் என்பதை நினைக்கும் போது வியப்பாக இருக்கிறது. வேலையாக இல்லாமல் மாமா வீட்டில் பொழுது போக்காக, விளையாட்டாகச் செய்து பார்த்தவை.
அன்றைய அச்சகத் தொழிலின் இயந்திரங்கள் வழக்கொழிந்து புதிய கருவிகள் வரத் தொடங்கியபோதும், கம்யூட்டர் பயன்பாடு வரத் தொடங்கியபோதும் நவீனத்துடன் பொருந்த முடியாமல் அச்சுத் தொழிலை விட்டவர்களும் உண்டு.
கோடை விடுமுறை முடிந்து பள்ளிக் கூடங்கள் திறந்ததும் பைண்டிங் செய்ய நூற்றுக் கணக்கில் புத்தகங்கள் குவியும். பைண்டிங் செய்யும் போது தாள்களுக்குப் பசை தடவுவதும் ஒரு கலை. பசையை வீணாக்காமல் தடவுவதற்கான ஒரு நேக்கை விரல்களுக்குக் கற்றுத் தர வேண்டும்.
பெரிய லாந்தர் வெளிச்ச இரவில் மிதிக்க மிதிக்க அச்சு இயந்திரத்தின் பெரிய சக்கரம் சுழல்வதைப் பார்த்து வளர்ந்த பால்யமும் நினைவுக்கு வருகிறது.
பத்திரிகை, பில் ரசீது மட்டும் இல்லாமல் ஒரு பக்திப் பாடல்கள் புத்தகமும் அச்சிட்டார் மாமா. முருகன், விநாயகர், மாரியம்மன், ஐயப்பன் என பக்திப் பாடல்கள் அடங்கிய தொகுப்பு அது. ஹரிவராசனம், செல்லாத்தா, புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே… போன்ற பாடல்கள் அதிலிருக்கும்.
புதிய புத்தகத்தின் வாசனையைப் போல புதிய காகிதத்தின் வாசனையும் நன்றாக இருக்கும். அதை அச்சகச் சூழலில் நுகர்ந்து உள் வாங்க வேண்டும்.
அச்சு இயந்திரத்தின் வேகத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் காகிதங்களைத் தட்டித் தட்டி அடுக்குவதே ஒரு கலை. ஒவ்வொரு தாளாக விரல்களுக்கு வர வேண்டும் என்பதற்காக காகிதங்களைத் தட்டித் தட்டிப் பழக்க வேண்டும்.
இன்று ஒரு ஸ்விட்ச் தட்டினால் ஒரு மணி நேரத்தில் ஒரு லட்சம் காபி கொட்டி விடும் தொழில்நுட்பங்கள். 90 களுக்கு முன்பு வரை அச்சுத் தொழிலில் இருந்தவர்கள் தம் அயராத உழைப்பை இந்த மிதி அச்சு இயந்திரத்தில் செலுத்தி உருவாக்கிக் கொடுத்த படைப்புகள் தாம் இன்றைய நவீன காலப் படைப்பாளிகளுக்கு ஆதாரச் சுருதியாக இருக்கின்றன.
கதைகளை, கவிதைகளை, புதினங்களை ஒவ்வொரு எழுத்தாகக் கோர்த்துக் கோர்த்து உருவாக்கித் தந்த முகமறியாத, அடையாளமற்ற அந்த உழைப்பாளிகளை நன்றியோடு இந்த நொடி எண்ணிப் பார்க்க விரும்புகிறேன்.


