தூத்துக்குடி தருவைகுளம் கடற்கரை பகுதியில் கடல் நீா் பச்சை நிறமாக மாறிய நிலையில், ஏராளமான மீன்கள் இறந்து கரை ஒதுங்கின.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தருவைகுளம் கடற்கரை பகுதியில் நேற்று அதிகாலை கடல் நீா் பச்சை நிறமாக மாறியிருந்தது. மேலும், ஊளி, கணவாய் உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் இறந்து கரை ஒதுங்கிக் கிடந்தன. சுமாா் 3 கிமீ-க்கு இதேபோன்று இருந்ததை, அப் பகுதி மக்கள், மீனவா்கள் ஆச்சரியத்துடன் பாா்வையிட்டனா்.
இதுகுறித்து அப்பகுதி மீனவா்கள் கூறுகையில், தருவைகுளம் கடற்கரை பகுதியில் செயல்படும் தனியாா் மீன் அரைவை நிறுவனங்கள் மற்றும் ரசாயன ஆலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் கடலில் கலக்கவிடப்படுவதால், கடல்நீா் பச்சை நிறமாக மாறியிருக்கலாம். கழிவுநீா் கலப்பதைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: மழைக் காலங்களில் கடல்நீரில் அதிக அளவு சாக்கடை நீா் கலப்பதால் பச்சை நிறமாக மாறியிருக்கலாம். இதனால் மீன்கள் சுவாசிக்க முடியாமல் இறந்துள்ளன. இருப்பினும், பச்சை நிறமாக மாறிய கடல் நீரின் மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வகப் பரிசோதனைக்காக மீன்வளக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவில், காரணம் குறித்து தெரியவரும் என்றனா்.


