தென்காசி மாவட்டத்தில் தொழில்நுட்பம் சார்ந்த பண்ணை பள்ளி திட்டத்தினை ரிலையன்ஸ் அறக்கட்டளை செயல்படுத்தி வருகிறது. உளுந்து மற்றும் மக்காசோளம் பயிரிடப்படும் வட்டாரங்களில் விவசாயிகளின் தேவையின் அடிப்படையில் நிலத்தை பண்படுத்துதல், உரமேலாண்மை, நீர்மேலாண்மை மற்றும் நோய் மேலாண்மை குறித்து பல்வேறு தொழில்நுட்பங்கள் வாயிலாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. மண் பரிசோதனை செய்வதின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு மண் மாதிரிகள் எடுக்கப்பட்டு கோவில்பட்டி நடமாடும் மண் பரிசோதனை நிலையம் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் தியாகராஜபுரம் கிராமத்தை சார்ந்த விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கப்பட்டது. வேளாண் தொழில்நுட்ப வல்லுநர் அருண்ராஜ், வேளாண்மை அறிவியல் நிலையம், தேனி அவர்கள் ஆடியோ கான்பிரன்ஸ் தொழில்நுட்பம் மூலம் விவசாயிகளுடன் கலந்துரையாடி மண்வள அட்டை குறித்து விளக்கம் அளித்தார். இதில் 40 க்கும் அதிகமான விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரிலையன்ஸ் அறக்கட்டளை பணியாளர்கள் செய்திருந்தனர்.


