தூத்துக்குடியில் சிவன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தேர் வடம் பிடித்தனர்.
தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் என்று அழைக்கப்படும் பாகம்பிரியால் உடனுறை சங்கரராமேஸ்வரர் கோயில் உள்ளது. இக் கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா ஆண்டு தோறும் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா அக்.30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து தினமும் காலை மாலையில் சிறப்பு பூஜைகள், சுவாமி, அம்பாள் சப்பர வீதி உலா நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடந்தது. காலை 7 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடந்தது. காலை 10.30 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து பக்தர்கள் கர கோஷத்துடன் தேர் வடம் பிடித்து இழுத்தனர். கீழ ரதவீதியில் இருந்து தேர் புறப்பட்டு நான்கு ரத வீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தேரோட்டத்தை முன்னிட்டு தேருக்கு முன்பாக சிவன், பார்வதி, கணபதி, முருகன் ஆகிய வேடமணிந்து சிறுவர், சிறுமியர் நடனமாடினர். ஒயிலாட்டம், களியல் ஆட்டம், மயிலாட்டம், குதிரை ஆட்டம், ராஜ மேளம், செண்டை மேளம், நையாண்டி மேளம், உருமி மேளம், சிவபூதனை வாத்தியங்களுடன் தேவார இன்னிசையுடன் சிலம்பாட்டம் ஆடியபடியே சென்றனர். வருகிற 9ஆம் தேதி திருக்கல்யான வைபம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


