சர் சந்திரசேகர வெங்கட ராமன் (நவம்பர் 7, 1888 – நவம்பர் 21, 1970) பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர் ஆவார். இவர் 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு இராமன் விளைவு என்று பெயர். இக்கண்டுபிடிப்புக்காக 1930ல் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்பு இன்று பொருள்களின் பல விதமான பண்புகளைக் கண்டறிய மிகவும் பயனுடையதும் உலகில் புகழ் பெற்றதும் ஆகும்.
சி.வி.இராமன் அவர்கள் நவம்பர் 7 ஆம் நாள், 1888ஆம் ஆண்டில் இந்தியாவில், தமிழ்நாட்டிலே உள்ள திருச்சிராபள்ளிக்கு அருகில் அமைந்த திருவானைக்காவல் எனும் ஊரில் பிறந்தார். இந்தியாவிலேயே முழுமையாகப் படித்த ஓர் அறிஞருக்கு 1930ல் நோபல் பரிசு கிடைத்தது முதல் முறையாகும்.
சந்திரசேகர வெங்கட்ராமன் தந்தையார், இரா. சந்திரசேகர் ஐயர் ஒரு ஆசிரியர். தன் தந்தை விசாகப்பட்டினத்தில் இயற்பியல் விரிவுரையாளராகப் பணியாற்றியதால் வெங்கட்ராமன் அங்கேயே தன் பள்ளி படிப்பை முடித்தார். இவர் 1904ஆம் ஆண்டு சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியில் தன்னுடைய இளங்கலைப் பட்டப்படிப்பை சிறப்பு தகுதியுடன் முடித்தார். வெங்கட்ராமன் தன் முதுகலை பட்டப்படிப்பை மாநிலக் கல்லூரியிலே தொடர்ந்தார். 1907ஆம் ஆண்டு ஜனவரியில் முதுநிலை பட்டப்படிப்பு தேர்வில் எல்லாப் பாடங்களிலும் சாதனை மதிப்பெண்களுடன் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். 1907ஆம் ஆண்டு பிப்ரவரியில் நிதித்துறை தேர்வு எழுதி அதில் முதிலிடம் பெற்றார். 1907ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் கொல்கத்தாவில் உள்ள கணக்குத் துறை தலைமை அலுவலராக தனது வாழ்க்கையைத் துவங்கினார்.
இவருக்கு இலண்டனிலுள்ள வேந்தியக் குமுகத்தின் சிறப்புப்பேராளர் பெருமை 1924 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.
பிரித்தானிய அரசு இவருக்கு 1929 ஆம் ஆண்டில் “நைட்டுஃகூடு” எனும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
1929ல் ஆண்டில் இங்கிலாந்து அரசியாரால் சர் பட்டம் அளிக்கப் பட்டது.
இத்தாலி நாட்டின் உயர்பதக்கமான “மேட்யூச்சி” பதக்கம் வழங்கப்பட்டது.
மைசூர் அரசர் “இராசபாபூசன்” பட்டத்தை 1935 ஆம் ஆண்டில் வழங்கினார்.
பிலிடெல்பியா நிறுவனத்தின் “பிராங்கிளின்” பதக்கம் 1941 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.
இந்தியாவின் உயர் விருதான பாரத ரத்னா விருது 1954 ஆம் ஆண்டில் அவருடைய வாழ்நாளிலேயே அளிக்கப்பட்டது.
1957 ஆம் ஆண்டில் அகில “உலக இலெனின் பரிசு” அளிக்கப்பட்டது.


