அனுஷ்கா ஷெட்டி ( பிறப்பு: நவம்பர் 7, 1980 ) இந்திய திரைப்பட நடிகையாவார். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் மட்டும் நடித்துவருகிறார். இவர் நடித்த சில திரைப்படங்கள் மலையாளத்திலும், இந்தியிலும் மொழி மாற்றம் செய்து திரையிடப்பட்டுள்ளது.
2005-ல் இவர் நடித்த முதல் திரைப்படம் – நாகார்ஜூனாவுடன் இணைந்து நடித்த சூப்பர் எனும் தெலுங்கு திரைப்படமாகும். 2006-ல், ரெண்டு எனும் திரைப்படத்தில் மாதவனுடன் நடித்து தமிழில் அறிமுகமானார். கடந்த பத்து வருடங்களில் 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
துவக்கத்தில் ஒரு சராசரி கவர்ச்சி நாயகியாக அறியப்பட்ட இவர், அருந்ததி திரைப்படத்தின் மூலம் தனது நடிப்புத்திறனை நன்கு வெளிப்படுத்தினார். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்ததுடன், அனுஷ்காவுக்கு நல்ல பெயரையும், புகழையும் பெற்றுத்தந்தது.
அதன் பின் இவரது திரை வாழ்கை முற்றிலும் மாறியது. மாறுபட்ட கதை அம்சங்களைக் கொண்ட திரைப்படங்களாக தேர்ந்தெடுத்து, அதற்காக முழு சிரமத்தை எடுத்து நடித்து வருகிறார்.
அனுஷ்கா ஷெட்டி 1980-ம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ம் தேதி, இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூரில் பிறந்தார். இவரது தந்தை ஏ.என்.விட்டல் ஷெட்டி, ஒரு பொறியாளர். தாய் ஃபிரபுல்லா, இல்லத்தரசி. இவருக்கு இரண்டு அண்ணன்மார்கள் இருக்கிறார்கள்.
அனுஷ்கா பெங்களூரில் உள்ள மெளண்ட் கார்மேல் பள்ளியில் கல்வி பயின்றார். பின் கணினி பாடத்தில் இளங்கலை பட்டமும் பெற்றார். தான் கல்வி பயின்ற பள்ளியிலேயே ஓராண்டு பூகோள ஆசிரியையாகவும் பணி செய்துள்ளார்.


