உலக களரி அடிமுறை கூட்டமைப்பு(அமெரிக்கா) சார்பில் நான் எழுதும்
நூலான களரி அடிமுறை பாகம் 2( நிறுவனரின் தாயக பயணம் ) என்ற தலைப்பில் புதிய நூல் முழு வண்ணத்தில் தயாராகி வருகிறது. விரைவில் அந்த நூல் வெளிவரவுள்ளது. அதற்காக சமூக நலத்துறை அமைச்சர் மாண்புமிகு கீதாஜீவன் அவர்கள் வாழ்த்துரை தந்துள்ளார்கள். அவர்களுக்கு மிக்க நன்றி. அவரின் வாழ்த்துரையை இத்துடன் வழங்கியுள்ளேன். வாழ்த்துரை தந்த மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கும், நூலை உலக தரத்தில் வெளியிடும் உலக களரி அடிமுறை கூட்டமைப்பு(அமெரிக்கா) நிறுவனர் முனைவர் ரமேஷ் ரத்தின குமார் அவர்களுக்கும், நூல் வெளியிட உதவி புரிந்த முதன்மை அலுவலர் முனைவர் செந்தில்ராஜ் குமார் மற்றும் ஆசான்களுக்கும் நன்றி – அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு
வாழ்த்துரை
எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, தூத்துக்குடி மாவட்டத்தில் சிறந்த களப்பணியாளர், எழுத்தாளர், சமூக ஆர்வலர். சகோதரரை நான் தூத்துக்குடி மாவட்ட சேர்மனாக 1996 ல் பணியாற்றிய போது அறிவேன். முத்தாலங்குறிச்சி முக்கவர் தூர் வாருதல், ஆத்தூர் வாய்க்கால், சேதுக்குவாய்த்தான் வாயக்கால் போன்றவை தூர் வாரும் பணியை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட போது இவர் அங்கு செய்தியாளராக, புகைப்பட கலைஞராக பணியாற்றிக்கொண்டிருந்தார்.
தினகரன் நாளிதழில் ஆன்மீக மலரில் தென் தமிழகத்தின் கோயில்களைக் களப்பணி செய்து எழுதிக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு வேண்டிய உதவிகளை எங்கள் மாவட்ட நிர்வாகம் செய்துக் கொண்டிருந்தது.
அதன் பின் சுமார் 25 வருட காலமாக அரசியல் தொடர்பில் அவர் இல்லை. ஆனால் இந்த காலத்திலும் அவர் முன்னணி பத்திரிக்கையில் எழுதிக்கொண்டிருந்தார். இதற்கிடையில் அகழாய்வு ஆர்வலராக ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை போன்ற தமிழர்களின் நாகரீகத்தினை வெளிக்கொண்டு வரும் செயலில் ஈடுபட்டுப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதை பத்திரிக்கை வாயிலாக அறிந்து கொண்டேன்.
எப்போதுமே தான் செய்யும் பணியை மிகத் திருத்தமாக செய்ய வேண்டும் என்பதில் சகோதரர் முத்தாலங்குறிச்சி காமராசு முடிவாக இருப்பார். ஆகவே தான் அவர் எழுத்து பயணமும் சிறப்பாக அமைந்து விட்டது. தற்போது 65 நூல்களை எழுதி முடித்து விட்டார்.
தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் அவர்கள் தலைமையில் இயங்கும் மாவட்ட கலை , இலக்கிய இசை சங்கத்தில் உறுப்பினராகவும் இவர் செயல்பட்டு வருகிறார்.
ஏற்கனவே உலக களரி கூட்டமைப்பு சார்பில் இவர் எழுதிய களரி அடிமுறை பாகம் 1 என்ற வண்ண நூல் எழுதியுள்ளார்.
களரி அடிமுறை தோன்றிய வரலாறு மற்றும் அதனை பற்றிய விவரங்களையும், கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது களரியின் அடிமுறையின் நிலை குறித்தும் அதில் எழுதியிருந்தார். தற்போது வெளிவரும் களரி அடிமுறை பாகம் &2 என்ற இந்த நூலில் பேச்சிப்பாறை அணைக்கட்டின் வழியாக, படகு மூலம் சென்று காட்டுக்குள் வாழ்ந்து வரும் பழங்குடியின மக்களுக்கும் களரிக்கும் இடையே உள்ள தொடர்பை அறிந்து எழுதியுள்ளார். களரியின் ஒரு பிரிவான வர்மம், சிலம்பம் ஆகியவற்றை மிகச்சிறப்பாக அதற்குரிய ஆசான்களைக் கண்டறிந்து விவரங்கள் சேகரித்து எழுதியுள்ளார்.
களரி அடிமுறை கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து எப்படி திருநெல்வேலி மாவட்டத்திற்கு இடம் பெயர்ந்தது என்பதை மிகச்சிறப்பாக ஆய்வின் மூலம் விளக்கியுள்ளார்.
தொடர்ந்து தாமிரபரணி, ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, சித்தர்கள், கோயில் வரலாறுகள், சுதந்திர போராட்ட தியாகிகள் வரலாறுகள், மலை பயணங்கள் என பயணித்து வரும் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு, இந்த ஆண்டு கலைஞர் தொலைக்காட்சி சார்பில் சிறந்த எழுத்தாளர் விருது கொடுத்து மகிழ்ந்தனர். அந்த நிகழ்வில் நானும் இருந்தேன் என்பது மகிழ்ச்சியாகும். தொடர்ந்து பல்வேறு விருதுகளைப் பெற்று எழுத்துத் துறையில் சகோதரர் உச்சத்தினை தொட வேண்டும் என்பது எனது ஆசை.
வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி.
மாண்புமிகு கீதா ஜீவன் அவர்கள்,
சமூகநலத்துறை அமைச்சர் அவர்கள்.
தமிழ்நாடு அரசு


