பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தமிழ்நாட்டின், தென்கிழக்கு மாவட்டமான இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பசும்பொன் என்கிற சிற்றூரில் மிகுந்த வசதி படைத்த ஜமீன் குடும்பத்தில் அக்டோபர் 30, 1908-இல் உக்கிரபாண்டி தேவருக்கும் இந்திராணி அம்மையாருக்கும் பிறந்த ஒரே மகனாவார்.இவரின் தாயார் இவருக்கு ஒருவயது நிரம்பும் முன்பே காலமானார். இவர் தாயை இழந்தபின்பு இவரின் தந்தையார் குறுகிய காலத்திலேயே மறுமணம் புரிந்துகொண்டார். அந்த இரண்டாவது மனைவியாரும் இறந்த காரணத்தினால் உக்கிரபாண்டி தேவர் மீண்டும் ஒரு திருமணம் புரிந்து கொண்டார். இதனால் முத்துராமலிங்கத் தேவர் இவரின் உறவின் முறை பாட்டியான பார்வதியம்மாளின் பாதுகாப்பில் பசும்பொன்னை அடுத்துள்ள கல்லுப்பட்டி என்கிற கிராமத்தில் வளர்ந்தார்.
இளமைப் பருவத்தில் தேவரவர்கள் சைவ வெள்ளாளர் குலத்தில் பிறந்த குழந்தைச்சாமி பிள்ளை என்கிற குடும்ப நண்பரால் கல்வி பயிற்றுவிக்கப்பட்டார். குழந்தைசாமி பிள்ளை தேவரின் பள்ளிப்படிப்பிற்கு மிகுந்த சிரத்தை எடுத்துத் தனிக்கல்வி பயிற்சி அமைத்துக் கொடுத்தார். பின்னர் ஆரம்பப்பள்ளி படிப்பைக் கமுதியில் உள்ள அமெரிக்கன் மிசனரீசால் நடத்தப்பட்டு வந்த பள்ளியில் முடித்தார். பின்னர்த் தேவர் திருப்பரங்குன்றம் அருகில் உள்ள பசுமலை மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து படித்தார். பின்னர் மதுரையில் உள்ள யூனியன் கிறிஸ்டியன் மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து பள்ளிப்படிப்பை முடித்தார்.
1924-ஆம் ஆண்டு ஏற்பட்ட உடல்நலக்குறைவின் காரணத்தால் தேவர் அவர்கள் பள்ளிப்படிப்பை முழுமையாக முடிக்க இயலவில்லை. தேவரின் தந்தையார் உக்கிரபாண்டித்தேவர் 1939-ஆம் ஆண்டு ஜூன் 6-ஆம் நாள் மறைந்தார்.
உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 1963-ஆம் ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதி அதிகாலை 5 மணியளவில் மரணமடைந்தார். அவரது உடல் மறுநாள் அதாவது அக்டோபர் 30-ஆம் தேதி பசும்பொன்னில் வள்ளலாரின் முறைப்படி பூஜை நடத்தி அமர்ந்த நிலையில் அடக்கம் செய்யப்பட்டது.


