ஊரே பரபரப்பனாது.
“ஏடேய் ரகு, நீ பெரிய ஆளுதான்டே. ஒரு மட்டுக்கும் ஆத்துக்குள்ள லாரியை இறங்க விடாம தடுத்துட்டுயே”.
தேன் கூடு இளைஞர் மன்றத்தினருக்கு சந்தோசம். எனவே இளைஞர் கூடுதலாக கூடினார்கள். ரகுவை தங்களது தோளில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள்.
ரகுவுக்கு சந்தோசம்.
இனி எப்படியாவது மணல் லாரியை விரட்டி விட வேண்டும். அதற்கு என்ன செய்யலாம். என அவன் பலவாறாக யோசிக்க ஆரம்பித்தான்.
ஆனால் நாட்டாமை மிகவும் கோபத்தில் இருந்தார்.
அவருடைய கைகூலிகள் அவரை விரட்டிக் கொண்டிருந்தனர். “யோவ் நீர் எவ்வளவு பெரிய ஆளு. சொத்து சுகமுன்ன இருக்கீரு. ஆனா ஒரு வெண்டி பய உம்மை ஜெயிச்சிட்டான். நீர் என்னவே மசுரை புடுங்கிட்டு இருக்கீரு. பெரிய ஆளுகளை கையில வைச்சி இருக்கீரு. பேசமாக அவனை தூக்கி ஒரு புதருக்குள்ள புதைச்சு வைச்சிட்டு காரியத்தை பாக்க வேண்டியது தானே”. நாட்டாமையின் கையாள் ஒருவரின் கோவம் இது.
சிரித்தார் நாட்டாமை. “ஏலேய் நான் காரியத்தை பிரச்சனை இல்லாம முடிக்கணுமுன்னு நினைக்கேன். நீ என்னன்னா, என்னை கொலை கேசுல உள்ள பிடிச்சு போட்டுருவ போல இருக்கே”. நாட்டாமையின் கைகூலிகளுக்கு கோரி தினமும் ஓடினால், சம்பளமும், தினமும் குடிக்க சாரயமும் கிடைக்கும். அதை ரகு கெடுத்து விட்டான் என ஆதாங்கம்.
நாட்டாமை கோபத்தை குறைந்து கொண்டார். அவர் மிகப்பெரிய அனுபவசாலி. “இவனுவ இழுத்து விட்டு வேடிக்கை காட்டி புடுவானுவ. அப்புறம் எவன் ஜெயலில போய் களி திங்குறது” என மனதுக்குள் நினைத்தார்.
“இல்லை நாட்டாமை. ஊரே உம்ம சொல்லுக்கு கட்டு பட்டுகிட்டு நிக்கு. ஓழுங்கா மோளத் தெரியாத பய உம்மை எதுக்கானே. அவன் பல்லை உடைக்க வேண்டாமா?” இன்னொரு கைகூலிக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
நாட்டாமைக்கும் ரகு மேலே கோபம் தான். “இந்த பய மட்டும் எதுத்து நிக்காம இருந்து இருந்தா இதுக்குள்ள மணல் அள்ளி போயிருக்கும். ஊர் கோயிலில வேலை நடந்திருக்கும். நமக்கும் ஏதாவது பாத்து தந்திருப்பானுவ. கடைசியில இப்படி நாசமாக்கிட்டானுவலே இந்த பயலுவ”.
அவர் கோபத்தை பல்லை கடித்து அடக்கி கொண்டார். ஆனால் அவர் வெளியே காட்டிக்கொள்ள வில்லை. ஆனால் இதற்கு ஏதாவது செய்து முடிவு கட்ட வேண்டும் என்பதில் மட்டும் கவனமாக இருந்தார்.
****
எஸ். ஐ. சங்கரலிங்கம் பீஸ் கமிட்டி மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்தார்.
தாசில்தார் தலைமையில் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் முன்னிலையில் அந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் மணல் குத்தகை தாரர், நாட்டாமை, ரகு ,காளி, மாரியப்பன் மற்றும் தேன்கூடு இளைஞர் மன்றத்தினர் என ஊர் மக்களை அழைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
அனைவருக்கும் நோட்டீஸ் போடப்பட்டது. “வருகிற திங்கள் கிழமை மதியம் 4 மணிக்கு போலிஸ் ஸ்டேஷனில் வைத்து பீஸ் கமிட்டி கூட்டம். எல்லோரும் வந்திருங்க” என நாட்டாமை ஒருவர் வீடு வீடாக போய் சொல்லிவிட்டு வந்தார்.
நாட்டாமையை பார்க்க சங்கரபாண்டியன் வந்திருந்தார்.
இருவரும் சிறிது நேரம் அமைதியாக இருந்தனர். நாட்டாமை மனைவி கொடுத்த காபியை இருவரும் குடிததார்கள்.
சங்கரபாண்டி தான் பேச ஆரம்பித்தார்.
“நாட்டாமை நம்ம ஆளுக நிறைய பேரை கூட்டிட்டு வரனும். நம்ம மணல் அள்ள இத்தனை பேரு இருக்கோமுன்னு காட்டனும். அப்படினாத்தான் மணல் அள்ள வுடுவானுவ. இல்லாட்டி தடை போட்டுருவானுவ”.
“ஏமுவே” நாட்டாமை கேட்டார்.
“போலீஸ் ஸ்டேஷனுல அவனுவ கூட்டம் அதிகம் வந்துட்டா. அவனுவ சொல்லுறது தான் நியாமுன்னு சொல்லி மணல் அள்ள விடாம பண்ணி புடுவாவ”. சங்கரபாண்டியன் சொன்னார்.
“கலெக்டர் ஆடர். தாசில்தார் என்னத்தை புடுங்க முடியும்”. நாட்டாமை சிரித்தார்.
“யோவ் என்ன தாசில்தாருன்னா சும்மாவா? அவரும் நீதி பதி தான். ஒரு கோர்டில நீதிபதி என்ன பவரோ. அதே பவரு இந்த மனுசனுக்கும் உண்டு”. சங்கரபாண்டியன் தாசில்தாருக்கு உரிய உரிமையை சுட்டிகாட்டினார்.
“என்னவே சொல்லுதீரு”. நாட்டாமைக்கு அது புதிதாக இருந்தது.
“ஆமாவே. தாசில்தார் கோட்ரஸை பாத்து இருக்கீறா? அந்த பக்கம் ஒரு நீதிபதி வீடு, இந்த பக்கம் ஒரு நீதிபதி வீடு. நடுவில இவரு வீடுன்னுதான் இருப்பாரு. அந்த நீதிபதிக்கு என்ன பவரோ அதே பவரு இவருக்கும் உண்டு”. சங்கரபாண்டியன் விவரத்தினை சொன்னார்.
“அப்படின்னா தாசில்தார் மணல் அள்ளக்கூடாதுன்னு சொன்னா. அப்படியே அரசு ஏத்துக்கிடுமா?” நாட்டாமை கேட்டார்.
“ஆமா. இந்த பயலுவ சொல்லுதது நியாயமுன்னா. அவரு மணல் அள்ளக்கூடாதுன்னு சென்னா. அம்புட்டுத்தான். கோரியை மூடிப்புடுவாவ?”
“அதுக்கு நாம என்ன செய்யணும்”. நாட்டாமைக்கு எப்படியாவது பிரச்சனையை முடிக்கணும். அதற்கு என்ன செய்யலாம் என முடிவு கட்ட ஆரம்பித்தார்.
“அட்வான்ஸ் வாங்கீனீரு இல்லை. பீஸ் கமிட்டி மீட்டிங்கிற்கு நிறைய பேரை கூட்டிட்டு வாரும்”. சங்கரபாண்டிய நமட்டு சிரிப்பு சிரித்தார்.
“ஏடே. இந்த பயலுவ அன்னன்னைக்கு என்ன கிடைக்குன்னு பாக்கிற பயலுவ. நீரு வேறே வேலை செய்யாமலேயே வீட்டுக்கு ஒரு ஆளுக்கு சம்பளம் தாரேமுன்னு சொல்லிபுட்டீரு. இனிமே அப்படித்தான் எதிர்பாப்பானுவ. பீஸ் கமிட்டி மீட்டிங் நடக்கிற அன்னைக்கும் வீட்டுக்கு ஒருத்தர் வரணுமுன்னு சொல்லி சம்பளத்தை கொடுத்துரும். வேன் பிடிச்சு அவ்வளவு பேரையும நான் கூட்டிட்டு வந்திருதேன்”.
நாட்டாமை மிகவும் கறாராக சொன்னார்.
சங்கரபாண்டியன், “நான் முடிவு எடுக்க முடியாது. எதுக்கும் என் முதலாளி கிட்ட கேட்டு சொல்லுதேன்”. என்று சொல்லி முடித்தார்.
இவர்கள் ஒரு ஐடியா சொல்ல. அங்கே நடந்தது வேறு ஐடியாவாக இருந்தது. ஆம் மறுநாள் காலை அந்த ஊரே அதிர வைக்கும் அளவுக்கு மிகப்பெரிய சம்பவம் நடந்தது. அந்த சம்பவம் அனைவரையும் அதிர வைத்தது.
****
ஊர் குடிமகன் சுடலை மூச்சிறைக்க ஓடி வந்தான். “அய்யா. நாட்டாமை அய்யா. நம்ம ஊர் தென்கோடியில கிடக்கே அந்த பாழடைஞ்ச கிணறு அந்த கிணத்துக்குள் ஒரு பொணம் கிடக்குய்யா”.
அதிர்ச்சி அடைந்தார் நாட்டாமை.
“ஏலே சுடலை என்னலே சொல்லுத”.
நாட்டாமை குரல் வெலவலத்தது.
“ஆமாம். நாட்டாமை. நான் காலையில பனங்கொட்டை பொருக்க போயிருந்தேன். அப்படியே அந்த கிணத்தை எட்டிப்பார்த்தேன். அதுக்குள்ள ஒரு பொணம் கிடைக்குய்யா”. சுடலை சொல்லும் போதே அவன் குரலும் கரகரத்தது.
“ஏலே உள்ளே கிடக்கது யாரு என்ன ஏதுன்ன தெரியுதா?”
“தெரியலை நாட்டாமை அய்யா. அதை பாத்த வுடனே நான் பயந்தே போயிட்டேன். நேரே உம்ம கிட்டத்தான் ஓடி வாறேன்”. சுடலை அதிர்ச்சியோடு சொன்னான்.
“ஏலேய் உடனே போலீஸ் ஸ்டேஷனுல சொல்லியாகணும். ஒரு ஆளை அனுப்பனும். அங்க சங்கமடத்துக்கிட்டு ஏவனாலும் இருக்கானுவலா பாரும்”.
எதிர் வீட்டில் இருந்த சுப்பிரமணியை கூப்பிட்டார்.
“சுப்பிரமணி. ஏலே சுப்பிரமணி”.
சுப்பிரமணி ஓடியே வந்தான்.
“என்ன நாட்டாமை”.
“சைக்கிள் வச்சிருக்கல்ல”.
“ஆமாம் ஹெர்குலஸ் சைக்கிள் வச்சிருக்கேன். அதை வச்சித்தானே அரிசி வியாபாரம் பாக்கேன்” இவன் ஒரு பந்தா பேர்வழி. இந்த ஊரில் விதவிதமாக சைக்கிளை மாற்றுபவன். எனவே சைக்கிளை பற்றி எப்போதும் பெருமையாக பேசிக்கொண்டே இருப்பான்.
“வேறு ஒண்ணுமில்லைடே. ஒரு எட்டு அப்படியே போலீஸ் ஸ்டேஷன் போயி ஊருக்கு தெக்கால இருக்கிற பாழடைஞ்ச கிணத்துல ஒரு பொணம் கிடக்குன்னு நாட்டாமை சொன்னாவன்னு சொல்லிட்டு வாலே”.
சுப்பிரமணி பின்வாங்கினேன்.
“நாட்டாமை. பாத்தியளா? நாம் பாட்டுக்கு நான் உண்டு. என் வேலைஉண்டுன்னு இருக்கேன். என்னை மாட்டி விட பாக்கியளா?” சுப்பிரமணி மறுத்தான்.
“ஏலே போலீஸ் கேசு அது இதுன்ன பயப்படாதே. யாரு னாலும் நாம தகவல் சொல்லி ஆகனுமுல்லா. ஓடு பயப்படாத நான் எது வந்தாலும் பாத்துகிறேன்”. நாட்டாமை அவன் பாதுகாப்புக்கு உறுதி கொடுத்தான்.
“இங்க பாரும் நாட்டாமை. நீர்சொல்லுதீருன்னு தான் நான் போறேன். எனக்கு எந்த பிரச்னை வந்தாலும் நீர்தான் பொறுப்பு”
நாட்டாமை உறுதி கொடுத்த பின்பு அவன் வீட்டுக்குள் சென்றான்.
அதன் பின் சுப்பிரமணி சைக்கிளை எடுத்து கொண்டு வெளியே வந்தான். “எதுக்கும் சுடலையை என்கூட அனுப்பும். போலீசு எதுவும் கேட்டா நான் என்ன பதில் சொல்லுவேன்”. போலீஸ் என்றாலே சுப்பிரமணிக்கு பயம்தான்.
“ஏலே சுடலை நீயும் கூடப்போ”.
சுடலை தலையாட்டிக்கொண்டு அவன் பின்னால் ஏறத்தயாரானான்.
சுப்பிரமணி பெடல் அடித்து சைக்கிளில் ஏற, அவன் பின்னால் கேரியளில் குடிமகன் சுடலை குதித்து ஏறி உட்கார, சைக்கிள் மேற்கே பார்த்து வேகமாக கிளம்பியது.
*****
நாட்டாமை ஊருக்கு தென்கோடியில் இருக்கிற பாழடைந்த கிணற்றை நோக்கி ஓடினார். இதற்குள் ஊர் காரர்கள் அனைவரும் சேர்ந்தனர்.
எல்லோரும் ஊருக்கு தென்கோடியில் உள்ள அந்த பாழடைந்த கிணற்றை நோக்கியே ஓடினார்கள். “யாரா இருக்கும்?. தானே விழுந்தானா? அல்லது யாரும் தூக்கி போட்டார்களா? தெரியவில்லையே?”
பலரும் பல கேள்விகளை கேட்டப்படியே அந்த கிணற்றை சுற்றி நின்றனர்.
அந்த கிணற்றில் குப்புற அந்த பிணம் கிடந்தது. இடுப்பில் சாரம் கட்டியிருந்தது. முதுகில் சட்டை இல்லை. காலில் எதுவும் போட வில்லை. தலைப்குப்புற கிடந்த காரணத்தினால் அவன் யார் என்ன என்று விவரம் தெரியவில்லை.
சிறிது நேரத்தில் போலீஸ் ஜீப் வந்தது. அந்த ஜீப்பில் இருந்து எஸ்.ஐ. சங்கரலிங்கம் இறங்கினார். பின்னால் சுப்பிரமணியும் சுடலையும் இறங்கினார். அவர்களோடு மற்ற போலீஸ் காரர்களும் வந்தனர்.
கிணற்று மேலே நின்று பார்த்தார் சங்கரலிங்கம்.
“சரி. இப்படி மச மசன்னு பார்த்துக்கிட்டு இருந்தா எப்படி?. உடனே அந்த பாடியை எடுக்கணும். அவன் முதலில யாருன்னு கண்டு பிடிக்கணும்?. யார் இவன் எதுக்கு இங்கே வந்தான். யாரும் தள்ளி விட்டார்களா? இல்லை தானே விழுந்தானா?” பல கேள்வி எஸ்.ஐ. சங்கரலிங்கம் மனதில் தோன்றியது.
கூட்டத்தை பார்த்தார் சப் இன்ஸ்பெக்டர் சங்கரலிங்கம்.
“ஏலே நல்ல இளவட்டங்கள். நீச்சல் தெரிஞ்சவங்க கிணத்துல குதிங்க. முதலில குப்புற கிடக்கிற அந்த பொணத்தை திருப்பி காட்டுங்க. அது யாருன்னு பாப்போம்”.
மெதுவாக இளவட்டங்கள் அங்கிருந்து மெதுவாக நழுவ ஆரம்பித்தனர்.
யாரும் இறங்குவதாக தெரியவில்லை.
ஊர் குடிமகன் சுடலை தான் தனது வேஷ்டியை கோவணமாக கட்டிக்கொண்டு சட்டையை கழற்றி ஒரிடத்தில் வைத்து விட்டு கிணற்றுக்குள் குதிக்க ஆரம்பித்தான். அவனுக்கு உதவியாக சுப்பிரமணியனும் குதிக்க தயரானான்.
“என்னடா இது புதிரா இருக்கு. இந்த ஊருல இதுவரைக்கு போலீஸ் கேஸ் எதுவும் வந்தது கிடையாது. என்னைக்கு மணலை அள்ளனுமுன்னு கவர்மெண்ட டெண்டர் விட்டிச்சோ. அன்னையில இருந்து ஒவ்வொரு சம்பவமாக நடக்கு”. ஒவ்வொருவரும் மனதுக்குள் பேச ஆரம்பித்தனர்.
“நல்லா ஒத்துமையா இருந்தானுவ ஊர் காரனுவ. இப்போ பணத்துக்காக பிரிஞ்சு போயிட்டானுவ. இப்போ ஒரு பொனம் கிணத்துல கிடக்கு. இன்னும் என்னவெல்லாம் நடக்க போவுதோ. போச்சு எல்லாம் போச்சு” புலம்ப ஆரம்பித்தது ஒரு பெரிசு.
அதோடு மட்டுமல்லாமல் பெரிசு நாட்டாமையை நோக்கி பேச ஆரம்பித்தது “யோவ் நாட்டாமை. எனக்கு என்னவோ பயமா இருக்குவே. கோயில் காம்புண்ட் சுவரும் வேண்டாம். ஒண்ணும் வேண்டாம். மணல் அள்ள வந்தவனுவல விரட்டி விட்டுருவோம். அவனுவ கால் வச்ச நேரம் நம்ம ஊருல என்னலாமோ நடக்கு. நிம்மதி போச்சு வே. கொஞ்சம் கவனமாக இரும்”.
நாட்டாமைக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவருக்கு இவன் யாரு. எதுக்கு உள்ளே விழுந்தான். உள்ளூர் காரனா? இல்லை வெளியூர் காரனா? என பல யோசனை எழுந்தது.
தேன் கூடு இளைஞர் மன்றத்தினை தேடிப்பார்த்தார். ஒருத்தரையும் காணோம். காளி, மாரியப்பன், ரகு மூன்றுவேரையும் கூட கூட்டத்தில் காணும். அப்படியென்றால் இந்த கிணற்றில் விழுந்து கிடப்பவன் யார்?
பலருக்கு பல யோசனை எழுந்தது.
ஒருவழியாக சுப்பிரமணியனும், சுடலையும் கிணற்றுக்குள் குதித்து அந்த பிணத்தினை புரட்டி போட்டனர்.
அப்போது அந்த இளைஞனின் முகம் தெரிந்தது.
அனைவரும் அதிர்ந்தனர்.
அது ரகு.
“என்ன ஆச்சி. ரகுவுக்கு என்ன ஆச்சி”.
இதற்குள் கேள்விபட்ட ரகுவின் அப்பா ஓடி வந்தார். காளி, செல்வி, மாரியப்பனும் ஓடி வந்தார்கள்.
ரகுவின் அப்பா அலறினார். “என் மவன் தட்டிக் கேட்டாங்கிற ஒரே காரணத்துக்கு என் மவனை கொன்ன புட்டியளே பாவிகளா?” என கதறிபடி கிணற்றுக்குள் விழ ஓடினார். அவரை உடன் இருந்தவர்கள் பிடித்தனர்.
அவருக்கு பதில் எதுவும் சொல்ல முடியவில்லை.
இதற்கிடையில் போலிஸ் ஏற்பாட்டில் ஆம்புலன்ஸ் வந்து விட்டது. ஸ்டெட்சர் கொண்டு வரப்பட்டது. பின்னாலேயே தீயணைக்கும் படை வீரர்களும் வந்தனர். அதன் பிறகு சுடலைக்கும் சுப்பிரமணியனுக்கு வேலை இல்லை. அவர்கள் இருவரும் ஒதுங்கி கொள்ள தீயணைப்பு படையினர் வேலையில் இறங்கினர்.
மள மளவென்று ரகு உடலை தூக்கினார்கள்.
அவன் வாயில் நுரை தள்ளியிருந்தது. அவன் கள் குடித்தற்கான வாசனை அனைவர் மூக்கையும் துளைத்தது.
“ஏலேய் இவன் என்னைக்குல்ல கள் குடிச்சான். எவனே கள்ளை ஊத்தி கொடுத்துல்லா கொன்னு இருக்கானுவ”. அதிர்ந்தே போய் விட்டனர் -ஊர் மக்கள்.
எஸ்.ஐ. சங்கரலிங்கம். அவனது அங்க அடையாளங்களை பதிவிட்டார். அந்த கிணற்றில் பாடி கிடந்ததை வைத்து ஒரு வரைப்படம் தயாரித்தார். அதன் பின் அவன் உடலை போஸ்ட் மார்ட்டம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தார்.
ரகுவின் அப்பா ஓடியே வந்தார். “எஜமான் என் மவன் மணல் அள்ள எதிர்ப்பு தெரிவிச்சான்.அதுதான் இவனுவ ஆள் வைச்சி கொன்னு புட்டானுவ. என் மவனை கொன்னவனுவளை கண்டு பிடிச்சு தூக்கில போடனும் எஜமான்” என்று கதறினார்.
“யோவ் பெரிசு அமைதியா இரும். தப்பு பண்ணுனா எவனையும் விடமாட்டோம். நாங்கள பாத்து கிறோம். முதலில போஸ்மாஸ்டம் ரிப்போர்ட் வரட்டும். அவனை கொலை பண்ணுனாங்களா? இல்லை இவன் தான் போய் கிணத்துல விழுந்தானான்னு தெரிஞ்சிரும். அது வரைக்கும் சும்மா இரும். போலீஸ் நிச்சயம் தன் கடமையை செய்யும். அதுவும் இந்த சங்கரலிங்கம் எவனையும் சும்மா விடமாட்டான்”.
இதற்குள் தாசில்தாருக்கு தகவல் கிடைத்தது அவரும் விரைந்து வந்தார். டி.எஸ்.பியும் இன்ஸ்பெக்டரும் அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தனர்.
அந்த இடமே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
“யார் செய்து இருப்பார்கள்?. என்ன நடந்து இருக்கும்?”.
காளியும், மாரியப்பனும் செய்வதறியாமல் தவித்தனர்.
சொல்லப்போனால் தாமிரபரணியின் முதல் மணல் எதிர்ப்பு போராளி. அவனை கொலை செய்து விட்டார்கள். மணல் மாபியா பின்னால் பெரிய சக்தி இருக்கிறது. ஆகவே தான் முளையிலேயே கிள்ளி எரிகிறார்கள்.
அப்படியென்றால் அவர்களை எப்படி எதிர்ப்பது.
என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர் நண்பர்கள்.
10 போலீஸை ஊர் காவலுக்கு வைத்து விட்டு, மற்ற வாகனங்கள் ரகு உடலை ஏற்றிய ஆம்புலன்ஸ் பின்னால் வெளியே கிளம்பினார்கள்.
மகனின் இழப்பை தாங்க முடியாத அவனது தந்தை மயங்கி விழுந்தார். அவரை தூக்கி கொண்டு பக்கத்து ஊர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தார் நாட்டாமை.
என்ன நடக்கிறது இங்கே என தெரியாமல் ஊர் மக்கள் அமைதியானர்கள். ஊரே களைஇழந்தது.
இத்தனை பிரச்சனைக்கு பிறகும் தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ள இயலுமா? என சங்கரபாண்டியன் தலை மேலே கை வைத்தான்.
(ரகு கொலை செய்யப்பட்டானா?)


