மனோ (26 அக்டோபர் 1965) தென்னிந்தியத் திரைப்படங்களில் பாடிவரும் ஒரு திரைப்படப் பின்னணிப் பாடகர். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் பாடியுள்ளார். தமது திரைவாழ்வை நடிகராகத் துவங்கி பின்னர் பின்னணிப் பாடகராக புகழ்பெற்றார். சின்னத் தம்பி என்ற படத்தில் “தூளியிலே” என்ற பாடலுக்காக தமிழ்நாடு அரசு விருது பெற்றார்.மனோ தெலுங்கு, தமிழ், ஒரியா, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 15 மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார்.
2000 களில் தெலுங்குத் திரையுலகில் பின்னணிக்குரல் கலைஞராக மனோவின் மற்றொரு முகமும் காணப்பட்டது. தெலுங்கில் கிட்டத்தட்ட ரஜினிகாந்த் நடித்த அனைத்துத் திரைப்படங்களிலும் இவர் பின்னணிக்குரல் கொடுத்தார். இவரது குரல் இரஜினிகாந்திற்கு கிட்டத்தட்ட ஒத்ததாக மாறியது. அனைத்து இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடமிருந்தும் பெரும் தேவை இருந்தது. தெலுங்கில் சில திரைப்படங்களில் கமல்ஹாசனுக்காக இவர் பின்னணிக்குரல் கொடுத்தார்.


