மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி பீட நிறுவனர் பங்காரு அடிகளார் காலமானார். அவருக்கு வயது 82.
மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி பீட நிறுவனர் பங்காரு அடிகளார். உடல் நலக்குறைவு காரணமாக ஆதிபராசக்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்தார்.
ஆதிபராசக்தி தொண்டு நிறுவன மருத்துவக் கல்வி மற்றும் கலாசார அறக்கட்டளையின் தலைவராக பங்காரு அடிகளார் இருந்தார். மேல்மருத்துவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு வரும் பக்தர்களால் ‘அம்மா’ என்று அழைக்கப்பட்டார். ஆன்மிகத்திலும் சீர்திருத்தங்களை செயல்படுத்தியுள்ளார். தென்னிந்தியா மட்டுமின்றி உலக அளவிலும் சக்தி வழிபாட்டு தலங்களை உருவாக்கியவர் பங்காரு அடிகளார்.
ஆதிபராசக்தி கோயிலில் அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என்று கடவுள் வழிபாட்டில் புரட்சி செய்தவர் பங்காரு அடிகளார். அவரின் ஆன்மிக சேவையை பாராட்டி பங்காரு அடிகளாருக்கு 2019 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு சிறப்பித்துள்ளது.


