தூத்துக்குடியில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தலைமையில்ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தலைமையில், 31-வது மாவட்ட அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு – 2023 நடத்துவது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் சென்ற ஆண்டு மாநில அளவிலான இரண்டு நாள் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மூலமாக நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் 850 ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
சுமார் 1700 பள்ளி மாணவ, மாணவியர்கள் இளம் விஞ்ஞானிகளாக கலந்து கொண்டனர். மதிப்பீட்டாளர்கள், வழிகாட்டு ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்பட சுமார் 2500 பேர் பங்கேற்றனர். சென்ற ஆண்டு நடைபெற்ற மாவட்ட அளவிலான மாநாட்டில் 420 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் 740 மாணவர்கள் கலந்துகொண்டனர். மேற்படி சென்ற ஆண்டு மாவட்ட மற்றும் மாநில அளவில் நடைபெற்ற தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டினை சிறப்பாக நடத்தியதற்காக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சாந்தகுமாரி அவர்களுக்கும் மற்றும் குழு உறுப்பினர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் நினைவுப்பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
இந்த ஆண்டு நமது தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 347 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து சுமார் 9000 மாணவ, மாணவியர் கலந்துகொள்ள உள்ளார்கள். இந்த மாநாட்டில் கிராமப்புற மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து மாணவ, மாணவியர்களும் உற்சாகத்துடன் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும். இந்த ஆண்டு நடைபெறவுள்ள மாநாட்டிற்காக சுமார் 4500 ஆய்வுக் கட்டுரைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதன்படி இந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு – 2023 வல்லநாடு துளசி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வருகின்ற 28.10.2023 அன்று நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் பள்ளி அளவில் தெரிவு செய்யப்பட்ட மாணவ, மாணவியர்கள் தங்கள் ஆய்வு அறிக்கைகளுடன்; கலந்துகொள்ள வேண்டும். இம்மாநாட்டில் தெரிவு செய்யப்படும் மாணவ, மாணவியர்கள் அடுத்த கட்டமாக நடைபெறும் மண்டல மாநாட்டில் கலந்துகொள்வார்கள். எனவே இம்மாநாட்டில் பள்ளி மாணவ, மாணவியர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு தங்களது ஆய்வு அறிக்கைகளை சமர்ப்பித்து பயன்பெறுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய்சீனிவாசன், தூத்துக்குடி சார் ஆட்சியர் கௌரவ்குமார், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சாந்தகுமாரி, முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, மற்றும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.


